தற்போது நடைபெற்று வரும் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிவரும் முஸ்லிம் மாணவிகள் தாம் அணிந்து சென்ற பர்தாவை கழற்றிவிட்டு பரீட்சை எழுதும்படி சில பரீட்சை நிலையங்களில் உத்தரவிடப்பட்டுள்ள சம்பவங்கள் பதிவாகியுள்ளன. பரீட்சை ஆரம்பித்த நாள் முதல் இது தொடர்பான முறைப்பாடுகள் பரீட்சை ஆணையாளர் சனத் பூஜிதவுக்கு முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த வாரம் கூட கண்டி விவேகானந்தா தமிழ் வித்தியாலயம் மற்றும் மன்னார் பெரிய கண்டல் முருங்கன் தமிழ் மகா வித்தியாலயம் என்பனவற்றின் க.பொ.த. உயர்தர பரீட்சை மண்டபங்களில் தொடர்ச்சியாக மூன்று தினங்களாக முஸ்லிம் மாணவிகள் பர்தாவைக் கழற்றிவிட்டு பரீட்சை எழுதுமாறு பரீட்சை மேற்பார்வையாளர்களால் உத்தரவிடப்பட்டுள்ள சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில் பரீட்சை ஆணையாளரிடம் முறைப்பாடு செய்துள்ளது.
குறிப்பாக பரீட்சை எழுதும் மாணவிகள் தமது முகம் மற்றும் காது என்பவற்றை காண்பிக்க வேண்டியது பரீட்சைகள் திணைக்களத்தின் சுற்றுநிருபத்தின் படி கட்டாயமானதாகும். எனினும் கடந்த காலங்களில் சில பிரதேசங்களில் முஸ்லிம் மாணவிகள் முகத்தை முழுமையாக மூடிய வண்ணம் பரீட்சைகளுக்குத் தோற்றியிருந்தனர். தற்போது அவரச காலச் சட்டத்தின் கீழ் முகத்தை மூடுவது தடை செய்யப்பட்டுள்ளதால் இம்முறை எவரும் பரீட்சைகளின் போது முகத்தை மூடியிருக்கவில்லை. எனினும் சிலர் முகத்தை திறந்திருப்பினும் காது பகுதியை காண்பிக்க மறுக்கின்றனர். இதன் காரணமாக இம் மாணவிகளின் செயற்பாடுகள் பரீட்சை மேற்பார்வையாளர்களால் கேள்விக்குட்படுத்தப்படுகின்றன. இது பரீட்சை எழுதிக் கொண்டிருக்கும் மாணவிகளைப் பாதிக்கச் செய்வது மாத்திரமன்றி சில சமயங்களில் அவர்களது பெறுபேறுகள் கூட வெளியிடப்படாது இடைநிறுத்தப்படுகின்றன. கடந்த வருடம் முகத்தை மூடிக் கொண்டு தேசிய பரீட்சைகளுக்குத் தோற்றிய பல மாணவிகளின் பெறுபேறுகள் வெளியிடப்படாது இடைநிறுத்தப்பட்டமையும் இங்கு கவனிக்கத்தக்கதாகும்.
இருந்தபோதிலும் காதுகள் வெளித் தெரியும் வகையில் மாணவிகள் ஹிஜாப் அணிந்துள்ள நிலையிலும் பரீட்சை மேற்பார்வையாளர்களால் அசௌகரியங்களுக்குள்ளாக்கப்பட்ட சம்பவங்களும் தற்போது பதிவாகியுள்ளன.
இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள பரீட்சை ஆணையாளர் சனத் பூஜித , காதுகளை மூடி ஆடை அணிந்து பரீட்சை எழுதுவது மாத்திரமே தடை செய்யப்பட்டுள்ளது. காதுகள் வெளியே தெரியும் வகையில் பர்தா அணிந்து பரீட்சை எழுதுவதற்கு எதுவித தடையும் விதிக்கவில்லை. பரீட்சை மேற்பார்வையாளர்கள் இவ்வாறு பர்தாவைக் கழற்றிவிட்டு பரீட்சை எழுதும்படி உத்தரவிடமுடியாது. குறிப்பிட்ட சம்பவங்கள் தொடர்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் முஸ்லிம் கவுன்ஸிலிடம் உறுதியளித்துள்ளார்.
பரீட்சை ஆணையாளர் இவ்வாறு கூறுகின்ற போதிலும் பரீட்சை மண்டபங்களில் இவ்வாறான சம்பவங்கள் வருடாந்தம் தொடரவே செய்கின்றன. சாதாரண தர பரீட்சை, உயர் தரப் பரீட்சை, பல்கலைக்கழக பரீட்சைகள் மற்றும் போட்டிப் பரீட்சைகளுக்குத் தோற்றும் முஸ்லிம் மாணவிகள் இந்த அசௌகரியங்களுக்கு தொடர்ச்சியாக முகங்கொடுத்து வருகின்றனர். இந்த விவகாரத்துக்கு விரைவில் முற்றுப் புள்ளி வைக்க வேண்டியது அவசியமாகும்.
சில மாதங்களுக்கு முன்னர் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கில் அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாட்டின் தலைமையில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில், சிவில் சமூக அமைப்புகள் என்பன இணைந்து கலந்துரையாடலை நடத்தி அரசாங்க பரீட்சைகளுக்குத் தோற்றும் முஸ்லிம் பெண் பரீட்சார்த்திகளுக்கான உடை எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பில் பொதுத் தீர்மானம் ஒன்றை எட்டியிருந்தன.
இந்த தீர்மானத்தை பரீட்சைகள் திணைக்களம் ஏற்றுக் கொண்டதா இல்லையா என்பது தெரியவில்லை. அதேபோன்று அவ்வாறானதொரு தீர்மானம் எட்டப்பட்டிருப்பின் அது குறித்து நாட்டிலுள்ள சகல முஸ்லிம் பாடசாலைகள் மூலமாகவும் முஸ்லிம்கள் அறிவூட்டப்பட வேண்டியதும் அவசியமாகும். அத்துடன் அரசியல் தலைமைகள் இதுவிடயத்தில் தலையிட்டு இப் பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டியதும் காலத்தின் தேவையாகும்.
vidivelli