கண்டி எசல பெரஹரா : முஸ்லிம்கள் பள்ளிவாசல்கள் கடைகளை மூட வேண்டியதில்லை
வீடுகளுக்கு புதியவர்கள் வந்தால் அறிவிக்குக : பொலிஸ்
கண்டியில் எசல பெரஹரா வைபவம் நடைபெறுவதால் முஸ்லிம்கள் கண்டி நகரிலுள்ள தங்கள் வர்த்தக நிலையங்களையோ பள்ளிவாசல்களையோ மூட வேண்டிய அவசியமில்லை. பள்ளிவாசல்களில் தங்கள் சமய கடமைகளை எதுவித தடையுமின்றி நிறைவேற்றமுடியும்.
கண்டி நகர முஸ்லிம்கள் மிகவும் நம்பிக்கையானவர்கள். ஆனால் அவர்கள் தங்கள் வீடுகளுக்கு உறவினர்களோ அல்லது புதியவர்களோ வந்தால் அது பற்றி பொலிஸாருக்கு அறிவிக்கவேண்டும் என மத்திய மற்றும் ஊவா மாகாணங்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் அதிபர் எஸ்.எம்.விக்கிரமசிங்க தெரிவித்தார்.
கண்டி பிரதி பொலிஸ்மா அதிபரின் காரியாலயத்தில் நடைபெற்ற முஸ்லிம் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு கூறினார். சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எஸ்.எம்.விக்கிரமசிங்கவின் தலைமையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், ‘பெரஹரா வைபவம் தற்போது இடம்பெற்று வருவதால் கண்டியில் சோதனை நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
கண்டி நகருக்குள் பிரவேசிக்கும் வாகனங்கள் அனைத்தும் சோதனைக்குட்படுத்தப்பட்டு வருகின்றன. சோதனை நடவடிக்கைகளுக்கு அனைவரும் ஒத்துழைக்கவேண்டும். வீடுகளுக்கு வருகைதரும் உறவினர்கள், புதியவர்கள் தொடர்பில் பொலிஸார் கண்காணித்து வருகிறார்கள். அவ்வாறு வீடுகளுக்கு வருபவர்கள் தொடர்பான விபரங்களை கட்டாயமாகப் பொலிஸாருக்கு வழங்கவேண்டும்.
பள்ளிவாசல்களில் எவ்வித பிரச்சினைகளுமின்றி பெருநாள் தொழுகைகளையும் நடாத்தலாம். கண்டிப் பகுதி முஸ்லிம்கள் மீது எமக்கு நம்பிக்கை இருக்கிறது என்றார்.
கண்டி எசல பெரஹரா கண்டி நகர வீதிகளில் வலம் வருவது கடந்த 5 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு எதிர்வரும் 15 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
கண்டி பொலிஸாருக்கும், முஸ்லிம் பிரதிநிதிகளுக்குமிடையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் கண்டி நகர மற்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் கண்டி மாவட்டக் கிளை பிரதிநிதிகள், கண்டி வர்த்தகர் சங்கம், வை.எம்.எம்.ஏ. கண்டி மஸ்ஜித் சம்மேளனம் என்பனவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் பிரதி பொலிஸ்மா அதிபர்களான ரணவீர, சிசிர குமார உட்பட பொலிஸ் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் உபதலைவர் மௌலவி எம்.எப்.பஸ்ருல் ரஹ்மான் இந்தச் சந்திப்பினை ஏற்பாடு செய்திருந்தார்.
ஏ.ஆர்.ஏ.பரீல்
vidivelli