மூதூர், தோப்பூர் வெளியேற்றங்களுக்கு வயது 13

0 757

இலங்­கையின் முப்­பது வருட கால யுத்த வர­லாற்றில், யாழ்ப்­பாண முஸ்­லிம்­களின் வெளி­யேற்­றத்தின் பின்­ன­ரான காலப்­ப­கு­தியில், 04.08.2006 இல் நடந்த ஒரு கொடூ­ர­மான நிகழ்வு மூதூர், தோப்பூர் முஸ்­லிம்­களின் வெளி­யேற்­ற­மாகும். இதன் பதின்­மூன்­றாது ஆண்டு நிறைவு தற்­போது நினைவு கூரப்­ப­டு­கின்­றது.

கிழக்கு மாகா­ணத்­தினைப் பொறுத்த வரைக்கும் தமிழ், முஸ்லிம் உறவில் யுத்த காலப்­ப­கு­தியில் பல்­வேறு விரி­சல்கள், பிரச்­சி­னைகள் காணப்­பட்ட போதிலும் மூதூர், தோப்பூர் பிர­தே­சங்­களில் வாழ்ந்த தமிழ்,முஸ்லிம் மக்­களின் உறவு நிலை சற்று வித்­தி­யா­ச­மா­ன­தா­கவே காணப்­பட்­டது. அவர்கள் ஒற்­று­மை­யு­டனே வாழ விரும்­பினர் எனலாம்.

ஏனெனில் முஸ்­லிம்கள் தமிழ் மக்­க­ளு­டைய பிர­தே­சங்­களை ஊட­றுத்தும், தமிழ் மக்கள் முஸ்­லிம்­க­ளு­டைய பிர­தே­சங்­களை ஊட­றுத்தும் பிர­யாணம் செய்ய வேண்­டிய நிலை, இரு பக்க மக்­க­ளையும் நம்­பியே வியா­பாரம் செய்ய வேண்­டிய நிலை காணப்­பட்­டமை, பயிர்ச்­செய்கை நிலங்கள் இரு பிர­தே­சங்­க­ளிலும் பரந்து காணப்­பட்­டமை, இவை எல்­லா­வற்­றையும் விட அவர்கள் ஆரம்ப காலம் முதல் கொண்­டி­ருந்த ஆழ­மான உறவு நிலை என்­பன தமிழ் முஸ்லிம் உறவை வலுப்­ப­டு­தி­யது.

ஆனால் இவை யாவும் கடந்த 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 01 ஆம் திகதி மூதூர் பிர­தேசம் தமி­ழீழ விடு­தலை புலி­க­ளினால் சுற்றி வளைக்­கப்­பட்ட கணம் தவிடு பொடி­யாகிப் போனது. மாவி­லாற்றில் பாரிய பின்­ன­டைவை சந்­தித்த விடு­தலைப் புலிகள், அதனை சரி செய்­வ­தற்­கான அடுத்த கட்ட வியூ­க­மாக மூதூர் பிர­தே­சத்­தி­னையும், அதனை அண்­டிய கடற்­ப­ரப்பு, கப்பற் போக்­கு­வ­ரத்­தி­னையும் தமது கட்­டுப்­பாட்டின் கீழ் கொண்டு வர எண்­ணினர்.

இத­ன­டிப்­ப­டையில் மூதூர் பிர­சேத்தை இணைக்­கின்ற அனைத்து பாதை­களும் தமிழ் பிர­தே­சங்­க­ளோடு இணைந்து காணப்­பட்­ட­மை­யினால் அத­னூ­டாக ஊட­றுத்து மூதூர் மக்கள் வெளியே செல்ல முடி­யா­த­வாறு முற்­று­கை­யிட்டு அதில் முதல் நாளே வெற்­றியும் பெற்­றார்கள்.

அதனைத் தொடர்ந்து மின்­சா­ரத்தை துண்­டித்து விட்டு நள்­ளி­ரவில் ஊருக்குள் புகுந்து குடி­யி­ருப்புப் பிர­தே­சங்­க­ளுக்குள் நின்று கொண்டு மக்­க­ளையும், அவர்­க­ளது சொத்­துக்கள், வாழி­டங்கள் என்­ப­ன­வற்­றையும் கேட­ய­மாகப் பாவித்து இரா­ணு­வத்தை நோக்கி ஷெல் தாக்­குதல் நடத்­தினர். புலிகள் திட்­ட­மிட்டு எதிர்­பார்த்­தது போலவே ஷெல் வந்த திசையை நோக்கி இரா­ணுவம் சர­மா­ரி­யான ஷெல் தாக்­கு­தல்­களை மேற்­கொண்­டது.

தாக்­கு­தல்கள் ஆரம்­ப­மா­னதைத் தொடர்ந்து மக்கள் பாட­சா­லை­க­ளிலும் சமயத் தலங்­க­ளிலும் அக­தி­க­ளாகத் தஞ்சம் புகுந்­தனர். தொடர்ந்து மூன்று நாட்­க­ளாக நடந்த ஷெல் தாக்­கு­தல்­க­ளினால் பொது­மக்­க­ளுக்கு பாரிய உயிர், உடமை இழப்­புக்கள் ஏற்­பட்­டன. தொடர்ந்­தேர்ச்­சி­யான ஷெல் தாக்­கு­தல்­க­ளினால் குழந்­தைகள், கர்ப்­பி­ணிகள், வயோ­தி­பர்கள், நோயா­ளிகள், வலது குறைந்தோர் உட்­பட தஞ்­ச­ம­டைந்­தி­ருந்த மக்கள் பட்­டினிச் சாவுக்கு இட்டுச் செல்­லப்­பட்­டனர். மேலும் மர­ண­மா­னோரை உடன் நல்­ல­டக்கம் செய்­யவோ காயப்­பட்­டோ­ருக்கு மருத்­துவம் அளிக்க அவ­கா­சமோ, மருந்தோ இல்­லாமல் போன­மை­யினால் பலர் மருந்­தின்றி இரத்தப் பெருக்­கினால் பரி­தா­ப­க­ர­மாக இறந்­தனர்.

குறு­கிய இடத்தில் நிரம்பி வழிந்த மக்கள் பிணங்­க­ளு­டனும் காய­ம­டைந்­த­வர்­க­ளு­டனும் தஞ்சம் புகுந்­த­வேளை அவ்­வ­டக்­கத்­த­லங்­க­ளுக்கு அருகில் வந்த புலிகள் அங்­கி­ருந்த மக்­களை மனிதக் கேட­யங்­க­ளாகப் பாவித்து மேலும் இரா­ணு­வத்தைத் தாக்­கினர்.

மூதூர் நத்­வதுல் உலமா அரபிக் கல்­லூ­ரி­யினுள் சேர்ந்­தி­ருந்த மக்­களின் நெரிசல் கார­ண­மாக கல்­லூ­ரியைச் சூழ­வுள்ள வீடு­க­ளிலும் மக்கள் தங்­கி­யி­ருந்­தனர். அவ்­வேளை மர்க்கஸ் சந்­தியில் நின்ற புலிகள் இரா­ணு­வத்தை தாக்­கி­ய­போது அங்­கொன்றும் இங்­கொன்­று­மாக பல ஷெல்கள் சம­கா­லத்தில் அறபுக் கல்­லூ­ரியை சூழ வந்து விழுந்­தன. இதனால் அங்கு தங்­கி­யி­ருந்த சிவி­லி­யன்கள் ஆங்­காங்கு கொல்­லப்­பட்­டனர். இதில் ஒரு வீட்­டினுள் தஞ்சம் புகுந்த 15 பேர் பாதிக்­கப்­பட்­டனர்.

இடை­வி­டாத இரு­த­ரப்பு ஷெல் பரி­மாற்­றங்கள் மூதூர் மக்­களை ஊரை­விட்டு வெளி­யேற வேண்­டிய நிர்ப்­பந்­தத்­திற்கு உள்­ளாக்­கி­யது. எனவே உயி­ரா­பத்­து­களைச் சந்­திப்­பதைத் தவிர்க்க ஊரை விட்டு வெறி­வே­று­வதே உசி­த­மா­னது என முடி­வெ­டுத்த மக்கள் 04.08.2006 காலையில் ஊரை விட்டு வெளி­யேற நிர்ப்­பந்­திக்­கப்­பட்­டனர்.

வெளி­யேற்­றப்­பட்ட மக்கள் A15 பாதை­யி­னூ­டாக தோப்பூர், கந்­தளாய் பிர­தே­சங்­களை நோக்கி தமது குழந்­தை­க­ளையும், வயது முதிர்ந்த பெரி­ய­வர்­க­ளையும் தோளிலும், முது­கிலும் சுமந்த வண்ணம், கண்­ணீரும் கம்­ப­லை­யு­மாக கால்­ந­டை­யாக வரும் வேளையில் ஜபல் நகர் பிர­தே­சத்தில் வைத்து மக்கள் ஆயுதம் தரித்த புலி­களால் மறிக்­கப்­பட்­டனர். நேரே செல்­லாமல் தமது பிர­தே­ச­மான கிணாந்தி முனைப் பக்­க­மாக வந்து வெளி­யே­று­மாறு புலிகள் கேட்­டனர். ஆனால் புலி­க­ளது பிர­தே­சத்­துக்குச் செல்ல மக்கள் மறுத்­தனர்.

அதே­நேரம் நேரே சென்றால் அப்­பா­தையில் தாம் கண்ணி வெடி புதைத்து வைத்­தி­ருப்­ப­தா­கவும் மீறிச் சென்றால் அவை வெடித்து விடலாம் என அச்­சு­றுத்தி, முட்­களும் கற்­களும் நிறைந்த பாதை­யி­னூ­டாக அழைத்துச் சென்­றனர். மூன்றாம் கட்டை மலையின் கிழக்குப் புற­மாக உள்ள கிணாந்தி முனைப் பிர­தே­சத்தில் கொதிக்கும் வெயிலில் மக்கள் அனை­வ­ரையும் நிற்­க­வைத்து கன­ரக ஆயுதம் தரித்த புலிகள் சுற்றி வளைத்துக் கொண்­டனர்.

பின்பு ஆண் புலி­களும் பெண் புலி­களும் பொது­மக்­களை ஆண்கள் வேறு பெண்கள் வேறாகப் பிரித்து நிறுத்­தினர். இத­னி­டையே உயிர்­போகும் அள­வுக்கு ஏற்­பட்ட தாகத்தை தீர்க்க நீர் அருந்த விட­வில்லை. மக்கள் சிறு பள்­ளங்­களில் தேங்­கி­யி­ருந்த மிகவும் அசிங்­க­மான அசுத்த நீரை குடிக்க நிர்ப்­பந்­திக்­கப்­பட்­டனர். மர நிழலில் ஒதுங்­கவோ குழந்­தை­க­ளுக்கு பால் கொடுக்­கவோ அனு­ம­திக்­க­வில்லை. வரி­சையில் நிற்கத் தவ­றி­ய­வர்­க­ளுக்கு வெல்லங் கம்­பினால் அடித்­த­துடன் இனத்தை இழித்­து­ரைத்தும் தூஷிக்­கப்­பட்­டனர்.

இந்­நி­லையில் மூதூரில் உள்ள ஆண்­களுள் சுமார் 13 வயது தொடக்கம் 40 வயது வரை­யா­ன­வர்­களை வேறு­பி­ரித்து அவர்கள் அனை­வ­ரையும் சுட்டுக் கொலை செய்து விடும் திட்­டத்தை நடை முறைப்­ப­டுத்தத் தொடங்­கினர். ஆண்­க­ளுக்குள் ஆயு­தங்­க­ளுடன் புகுந்த புலிகள் தமக்குத் தேவை­யான இளை­ஞர்­களை துப்­பாக்கி முனையில் வேறு­பி­ரித்­தனர். ஏனைய புலிகள் அவ் இளை­ஞர்கள் அணிந்­தி­ருந்த மேலா­டை­களால் கையை பின்னே வைத்து பிணைத்துக் கட்­டினர். மனைவி, தாய், தந்தை பிள்­ளைகள், சகோ­த­ரர்கள் ஊரவர், உற­வி­னர்கள் பார்த்­தி­ருக்க அவர்­க­ளது கண்­முன்னே சுமார் 60 மீற்றர் தூரத்தில் வைத்து இளை­ஞர்­களை சுட்டுக் கொல்லத் தொடங்­கினர்.
அந்­நேரம் தெய்­வா­தீ­ன­மாக அவ்­வி­டத்தில் பல ஷெல்கள் வந்து விழுந்து முழங்கத் தொடங்­கின, இதனால் பொது­மக்­களும் புலி­களும் அவ்­வி­டத்­தி­லேயே கொல்­லப்­பட்­டனர். ஏனையோர் சித­றி­யோ­டினர். அவ்­வாறு ஓடியோர் கிழக்கே இருக்கும் சதுப்பு நிலத்­திற்­கூ­டாக ஓடி­யதில் சேற்றில் புதை­யுண்­டனர். பின்னர். அவர்­க­ளது எலும்புக் கூடுகள் சேற்­றி­லி­ருந்து பிடுங்கி எடுக்­கப்­பட்­டன. அப்­பி­ர­தே­சத்தில் கொல்­லப்­பட்­ட­வர்­க­ளது உடல்கள் நல்­ல­டக்கம் செய்­யப்­படும் வாய்ப்பை கூட இழந்­தன.

இதே சம­காலப் பகு­தியில் தோப்பூர் பிர­தே­சத்­தினை சூழ­வுள்ள அனைத்து இரா­ணுவ முகாம்­களும் தாக்­கப்­பட்­டன. அதனைத் தொடர்ந்து இரா­ணு­வத்­தி­ன­ராலும் விடு­தலைப் புலி­க­ளி­னாலும் மேற்­கொள்­ளப்­பட்ட பல்­குழல், எறி­க­ணைகள் மக்கள் குடி­யி­ருப்­பு­களை நோக்கி விழத் தொடங்­கின.

இதனால் தோப்பூர் முகைதீன் ஜும்ஆ பள்­ளி­வாசல் எறி­கணை தாக்­கு­த­லுக்­குட்­பட்டு பலத்த சேத­ம­டைந்­தது. அன்­றைய நாள் இரவு ஹிதா­ய­துல்லா என்­ப­வரின் வீட்டில் எறி­கணை விழுந்து வெடித்­ததில் அவர் ஸ்தலத்­தி­லேயே மர­ண­ம­டைந்தார்.

இவ்­வாறு நாளுக்கு நாள் உயி­ருக்கு உத்­த­ர­வா­த­மில்­லாமல் நிலைமை மோச­ம­டைய மூதூர் மக்­க­ளோடு சேர்ந்து தோப்பூர் மக்­களும் வெளி­யேறி கந்­தளாய் பிர­தேச அகதி முகாம்­க­ளிலே சுமார் ஒரு மாத காலம் செல்­லொணாத் துய­ரங்­க­ளோடு தமது வாழ்வைக் கழித்­தார்கள்.

இந்த மூதூர், தோப்பூர் முஸ்­லிம்­களின் வெளி­யேற்­றத்தின் போது சுமார் 54 பேரின் உயிர்கள் காவு கொள்­ளப்­பட்­ட­தோடு, 196 பேர் படு­கா­ய­ம­டைந்தும், 24 பேர் காணா­மலும் போயி­ருந்­தனர். 05 பேர் மன­நிலை பாதிப்­புக்­குள்­ளா­யி­ருந்­தனர். 1425 வீடுகள் பகு­தி­ய­ள­விலும், 286 வீடுகள் முற்­றா­கவும் சேத­மாக்­கப்­பட்­டன. பெரும்­பா­லா­ன­வர்­களின் வீடு­களில் இருந்த அனைத்து பொருட்­களும் சூறை­யா­டப்­பட்­டன. வயல் நிலம், கால்­ந­டைகள், மீன்­பிடி, வியா­பாரம் என ஜீவ­னோ­பா­யத்தின் வழிகள் யாவும் முற்­றாக அழிந்து போயின. மூதூர் மக்கள் வெளி­யேற்­றப்­பட்­டதன் பின்பு அவர்­க­ளது 99% மான வீடுகள் கொள்­ளை­யடிக் கப்­பட்­டன என்­பதும் இங்கு குறிப்­பி­டத்­தக்­கது.

கந்­த­ளாய்க்கு அக­தி­க­ளா­கப்­போன மக்­களை அரசும் அரச சார்­பற்ற நிறு­வ­னங்­களும் தனி­யாரும் பரா­ம­ரித்­தனர். இப்­ப­ரா­ம­ரிப்பு பணியில் அர­சை­விட அர­ச­சார்­பற்ற நிறு­வ­னங்­க­ளி­னதும் பொது­மக்­க­ளி­னதும் பங்­க­ளிப்பே பாரிய அள­வி­ன­தாகும்.

மூதூர் முஸ்­லிம்கள் புலி­களால் வெளி­யேற்­றப்­பட்­டதை புலி­க­ளுக்கு எதி­ராக பிர­சா­ரப்­ப­டுத்­து­வதில் அரசு எடுத்­துக்­கொண்ட ஆர்­வத்தின் அள­வுக்கு அக­தி­களைப் பரா­ம­ரிப்­பதில் எடுக்­க­வில்லை என்­பது ஒரு கசப்­பான உண்மை.

ஏறக்­கு­றைய ஒரு மாதத்தின் பின்பு மூதூரில் இயல்பு வாழ்­வுக்­கான அனைத்து ஏற்­பா­டு­களும் செய்­யப்­பட்­டுள்­ள­தாக கூறி மூதூர் மக்கள் மூதூ­ருக்கு திரும்­பு­மாறு கேட்­கப்­பட்­டனர். இச்­சந்­தர்ப்­பத்தில் மூதூர் மக்கள் சார்­பாக மூதூர் மஜ்லிஸ் அஷ் ஷூறா பின்­வரும் வேண்­டு­கோள்­களை அர­சாங்­கத்­திடம் முன்­வைத்­தது.

மூதூரின் எல்­லை­களில் பல­மான பாது­காப்பு வழங்கப்பட வேண்டும்.
இராணுவமும் புலிகளும் மோதிக்கொள்ளும் இடமாக மூதூர் இருக்காது என இரு தரப்பும் உறுதியளிக்க வேண்டும்.

மூதூரில் உள்ள 99% வீடுகள் கொள்ளையிடப்பட்டுள்ள படியால், மீளக்குடியேற முன்பு குடும்பம் ஒன்றுக்கு தலா 25,000/- ரூபா வழங்க வேண்டும் .
விவசாயம், மீன்பிடி, வியாபாரம், காட்டுத்தொழில் என்பன வெளியேற்றத்திற்கு முன்பே தடைப்பட்டிருந்தபடியால், மேற்படி தொழில்களை சுதந்திரமாக அச்சமற்று மேற்கொள்ளும் வரை குறைந்தது 6 மாதங்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.

மரணித்தோர் பெயரில் 100,000/- ரூபாவும் காயப்பட்டோருக்கு 75,000/- ரூபா வழங்குவதோடு, அழிந்த வீடுகளை விரைவில் புனரமைப்புச் செய்து தரவேண்டும்.

முஸ்லிம் மக்களும் தமிழ் மக்களும் சமகாலத்தில் மீளக் குடியேற்றப்படல் வேண்டும்.

இவ்வாறான கோரிக்கைகளுடன் மீண்டும் ஊருக்கு மீண்ட போதும் சொத்துக்களை மீண்டும் ஈட்டிக் கொண்ட போதும் இழந்த உயிர்களின் வலிகள் இன்றும் உறவுகளிடம் தொடரத்தான் செய்கிறது.

எஸ்.ஏ.எம். அஸ்மி

தோப்பூர்

vidivelli

Leave A Reply

Your email address will not be published.