முஸ்லிம் தனியார் சட்டம் அல்லது முஸ்லிம் விவாகம் மற்றும் விவாகரத்துச் சட்டம் (MMDA) மிகவும் இக்கட்டான கட்டத்தை எட்டி உள்ளது. சுமார் பத்து வருடங்களின் பின்னர் இச்சட்டத்திற்கான சீர்திருத்த அறிக்கை நீதி அமைச்சர் தலதா அத்துக்கோரளையிடம் ஜனவரி 2018 ஆம் ஆண்டு கையளிக்கப்பட்டது.
சீர்திருத்த அறிக்கை ( Reform report) கையளிக்கப்படும் போதும் அதற்கு முன்னரும் சீர்திருத்தம் தொடர்பில் வாத– விவாதங்கள் உச்ச நிலையை அடைந்துவிட்டன. சீர்திருத்தக் குழுவின் தலைவரான முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி சலீம் மர்சூப் கையளித்த அறிக்கை இரண்டு அறிக்கைகளைக் கொண்ட ஓர் அறிக்கையாகும்.
முஸ்லிம் சமூகத்தில் புரையோடிக்கிடக்கும் பூசல்களின் அடையாளமாகவும் முன்னேற்றத்துக்கு இசைவான முடிவுகளுக்கு முஸ்லிம் சமூகத்தில் ஒருமைப்பாட்டைக் காண்பது கடினம் என்பதற்குச் சான்றாகவும் அந்த ஓர் அறிக்கை வேறுபட்ட இரு அறிக்கைகளாகக் காட்சிதருகிறது. அதில் இடம்பெற்றுள்ள பிரதான அறிக்கை அந்த ஆணைக்குழுவின் தலைவர் சலீம் மர்சூபின் தலைமையில் எடுக்கப்பட்ட தீர்மானங்களைக்கொண்டது. அதே அறிக்கையில் இடம்பெற்றுள்ள சிறிய அறிக்கை பிரதான அறிக்கையை மறுக்கும் அல்லது விமர்சிக்கும் அறிக்கையாக இணைக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தம் செய்யக் கூடாது என்று கூறிவரும் பிரிவினர் சலீம் மர்சூபின் பிரதான அல்லது மைய அறிக்கையை மறுத்து வருகின்றனர். சீர்திருத்தங்கள் என்ற வடிவில் சட்ட மூலமாகப் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டாலும் அதை முறியடித்தே தீருவோம் என்றும் அப்பிரிவினர் பகிரங்கமாகக் கூறியுள்ளது. முஸ்லிம் தனியார் சட்ட திருத்தத்தை எதிர்ப்பதில் ஜம்இய்யத்துல் உலமா முன்னணியில் உள்ளது. இந்த எதிர்ப்பை ஜம்இய்யத்துல் உலமா பல வருடங்களாக வெளியிட்டு வருகிறது. சலீம் மர்சூபின் திருத்த அறிக்கை இரண்டு அறிக்கைகளாக்கப்பட்டதற்கும் ஜம்இய்யத்துல் உலமாவின் செல்வாக்கே காரணமாக இருந்துள்ளதென்றும் கருதப்படுகிறது.
ஐம்பது வருடங்களுக்கு மேலாக இச்சட்டம் திருத்தப்படவேண்டும் என்று கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. பெண்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் பெண்களுக்கு நீதி வழங்கப்படவில்லை என்றும் பெண்கள் தரப்பிலிருந்தும் இச்சட்டத்திற்கு எதிர்ப்புகள் எழுந்தன. சீர்திருத்தம் தவிர்க்கமுடியாதது என்ற சூழலில்தான் தேவையான திருத்தங்களைச் செய்துதரும்படி சலீம் மர்சூப் தலைமையில் ஒரு ஆணைக்குழுவினை அரசாங்கம் நியமித்தது. ஜம்இய்யதுல் உலமாவின் அங்கத்தவர்கள் மற்றும் உலமாக்கள் உள்ளிட்ட 18 அங்கத்தவர்கள் சீர்திருத்தப்பணியில் பங்கேற்றிருந்தனர். எனினும் முடிவுகள் பூச்சிய நிலையில் உள்ளன.
19 ஆம் நூற்றாண்டிற்கும் முற்பட்ட சட்டங்களால் 21 ஆம் நூற்றாண்டின் தேவைகளைப் பூர்த்தி செய்யமுடியாது. முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பல நாடுகளில் (எகிப்து, மொரோக்கோ, டியூனீசியா, துருக்கி) நாட்டின் சமய சட்டங்களிலும் குறிப்பாக தனியார் சட்டங்களிலும் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. ஷரியாவின் வழிகாட்டுதலில் நவீன விளக்கங்களின் ஊடாக சட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குர்ஆனின் அடிப்படைச் சிந்தனைகளுக்கு மாற்றம் இன்றியும் இம்மாற்றங்கள் அங்கு நிகழ்ந்துவருகின்றன. ஸலீம் மர்சூபின் அறிக்கை பெரும்பாலும் இந்த ஒழுங்கிலேயே அமைந்துள்ளது. நவீன தேவைகளுக்கும் புதிய சிக்கல்களுக்கும் பதில் தரக்கூடிய அறிக்கை என்றும் இதனைக் குறிப்பிடலாம்.
சமூக மாற்றத்துக்கும் புதிய சவால்களுக்கும் முகங்கொடுத்துவரும் இன்றைய சூழலில் சட்டங்களில் சீர்திருத்தம் அவசியமானதாகும். நடைமுறையிலுள்ள முஸ்லிம் தனியார் சட்டத்தைப் பொறுத்தவரை பெண்களுக்கான நீதி என்ற விடயத்தில் அது மிகவும் பின்னடை வானதாக உள்ளது. 18 ஆம் நூற்றாண்டு மனப்பான்மையில் வாழ்வோரினால் புதிய சட்டங்களையும் மாற்றங்களையும் புரிந்துகொள்ளவே முடியாதிருக்கின்றது. ஆண் தலைமைத்துவமும் பெண்கள் பற்றிய குறுகிய நோக்குகளும் இன்னும் நிலைத்திருக்கும் சமூகத்தில் மாற்றங்கள் பற்றிப்பேசுவது இலகுவானதல்ல. எமது சமயத் தலைமைகள் பழைமைக்கோட்பாடுகளுக்காகவும் சமய அடிப்படைவாதத்தின் வெற்றிக்காகவும் மட்டுமே போராடுவதாகத் தெரிகிறது.
‘இன்று இம்மாற்றம் நடைபெறாவிட்டால் இனி எப்போதும் இல்லை’ என்ற ஒரு இக்கட்டான சூழ்நிலை உருவாகி உள்ளது. ‘ஒரு நாடு ஒரு சட்டம்’ என்று இனவாதிகள் எழுப்பும் கோஷங்களில் முஸ்லிம் தனியார் சட்டமும் குறிவைக்கப்பட்டுள்ளது. திருத்தங்கள் இருந்தால் அவற்றை நாம்தான் முன்வந்து செய்யவேண்டும். முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதை உணர்ந்துள்ளனர்.
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற வளாகத்தில் அண்மையில் கூடி எடுத்த முடிவில் சலீம் மர்சூபின் மைய அறிக்கையில் இருக்கும் முக்கிய தீர்மானங்களை ஏற்றுக் கொள்வதெனத் தீர்மானிக்கப்பட்டது. இச்செய்தி ஊடகங்கள் மூலம் அறிவிக்கப்பட்டபோது மக்கள் ஆறுதல் அடைந்தனர். சீர்திருத்தங்கள் வேண்டப்படும் வேளையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் அதைச் சட்டமாக்க விரும்பியது வரவேற்கப்படவேண்டிய முன்னேற்றமான நடவடிக்கைகளாகும். ஆனால் ஜம்இய்யத்துல் உலமா தலைவர்கள் இந்த முடிவைக் கடுமையாக எதிர்த்தனர். இதற்கு எதிரான பிரசாரங்களை ஜம்இய்யத்துல் உலமா நாடு முழுக்கக் கொண்டு சென்றது.
பெண்கள் தொடர்பில் தீர்க்கப்படாத பிரச்சினைகளும் வெளியில் பேசப்படாத விடயங்களும் அதிகரித்துள்ள நிலையில் சமயத்தின் பேரில் தடைகளைக் கொண்டு வருவது பாராளுமன்ற விவாதங்களின் போதும் வெளியில் விவாதங்களை முன்வைக்கும் போதும் சிக்கலான நிலைமைகள் உருவாகலாம். இஸ்லாம் மார்க்கம் பற்றிய தவறான விளக்கங்களுக்கு இட்டுச்செல்லவும் வாய்ப்புக்கள் உள்ளன.
இந்தப் பின்னணியில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் முடிவை எப்படி நாம் குறைகாண்பது. ரதன தேரரின் உண்ணாவிரதத்தினால் முஸ்லிம்களுக்கும் நாட்டிற்கும் ஏற்படவிருந்த பாரிய அழிவை நிறுத்துவதில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் எடுத்தமுடிவில் நாம் குறைகாணவில்லையே. அந்த அதிரடி முடிவினால் ஏற்பட்ட நன்மையை முழு நாடுமே அவதானித்தது. அரசியல் களத்தில் இருந்ததால் ஆபத்தின் உச்சத்தை அவர்கள் அறிந்து அந்த முடிவிற்கு வந்தனர். முஸ்லிம் தனியார் சட்ட விடயத்தில் தற்போதும் அவர்கள் எடுத்துள்ள முடிவும் அதற்குச் சற்றும் குறைவானதல்ல. நீதியையும் பகுத்தறிவையும் பயன்படுத்துவதோடு பல்லின நாடொன்றில் சமயச் செயற்பாடுகள் எவ்வாறு அமையவேண்டும் என்றும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கவலையோடு சிந்திக்கின்றனர்.
ஹலால் பிரச்சினை கொழுந்துவிட்டு எரிந்தபோது முஸ்லிம் அரசியல்வாதிகள் மௌனம் சாதித்ததால் நிகழ்ந்த அனர்த்தங்களை முஸ்லிம் சமூகம் இன்னும் மறக்கவில்லை. ஜம்இய்யத்துல் உலமா தலைவர்களின் ஹலால் முன்னெடுப்புகள் பெரும்தோல்வியில் முடிந்தன. இனவாதிகளும் இனவாத அரசியல்வாதிகளும் இப்பிரச்சினையைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்துவதில் வெற்றிபெற்றனர். முஸ்லிம் சமூகம் பெரும் அவலங்களைச்சந்தித்தது.
வாக்குவங்கிகளைப் பலப்படுத்துவது கண்டதைபேசி மக்கள் மத்தியில் பிரபல்யம் அடைவது போன்ற வழமையான அரசியல் முயற்சிகளை கடந்து, கொள்கை ரீதியாகவும் தூர நோக்குடனும் முடிவுகள் எடுக்க முஸ்லிம் அரசியல்வாதிகள் முன்வந்துள்ளனர். இவ்வகை முடிவுகளுக்குச் சமூகம் ஆதரவு தரவேண்டும்.
ஆனால் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒரு முகமான இந்த முடிவை ஜம்இய்யத்துல் உலமாவின் சில தலைவர்கள் சவாலுக்குள்ளாக்கி உள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர்களின் முடிவு மீள்பரிசீலனை செய்யப்படவேண்டும் என்றும் இவர்கள் கூறிவருகின்றனர். ஹலால் பிரச்சினைபோல் மீண்டும் ஒரு குழப்பநிலை நாட்டில் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. ஐம்பது வருடங்களாக எதிர்பார்க்கப்பட்ட சீர்திருத்தங்கள் சாத்தியமடையக்கூடிய சூழலில் இவர்கள் ஏற்படுத்தும் இத்தடை மாபெரும் வரலாற்றுத் தவறாகும்.
ஹலால் திட்டமாக இருந்தாலும் தனியார் சட்டமாக இருந்தாலும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை ஒரு தலைப்பட்சமாகத் தீர்மானங்கள் எடுப்பதும் தமக்கிருக்கின்ற சமய செல்வாக்கைப் பக்கசார்பாகப் பயன்படுத்துவதும் சிறந்ததல்ல, ஜனநாயக நடைமுறையும் அல்ல. முக்கியமான தேசிய விடயங்களில் உலமா சபை முஸ்லிம் அரசியல்வாதிளை ஓரங்கட்டுவது நாடு இப்போதுள்ள சூழ்நிலையில் எவ்வகையிலும் நல்லதல்ல.
அரசியல்வாதிகளாக இருந்தாலும் உலமா சபைத் தலைவர்களாக இருந்தாலும் மக்களின் பொதுநலன், சமூகப் பாதுகாப்பு, தூரநோக்கு, ஜனநாயக உணர்வு, தேசிய ஐக்கியம் என்ற கொள்கைகளுக்கே முன்னுரிமை தரவேண்டும். மக்களிடையே அதிருப்தியும் மனக்குழப்பமும் அதிகரித்திருப்பதை உணரத் தவறுவது ஆபத்தானதாகும். குறுகிய உணர்வுகளுக்கு அடிமையாகி எடுக்கப்படும் தீர்மானங்கள் முஸ்லிம் சமூகத்திற்குப் பேராபத்துக்களை விளைவிக்கக்கூடும்.
இன்று முஸ்லிம் தனியார் சட்டப் பிரச்சினைகள் பெரும்பான்மையினர் மத்தியிலும் இனவாதிகள் மத்தியிலும் பிரதான பேசுபொருளாகி உள்ளது. சிறுமிகள் திருமணம், முஸ்லிம் பெண்கள் தலாக் பெறுவதில் பிரச்சினைகள், குழந்தைகள் தாபரிப்பில் பாரபட்சம் என்பவற்றை பற்றி சரியாகவும் தவறாகவும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இன்று இது நான்கு சுவர்களுக்குள் பேசப்படும் விடயம் அல்ல. பெண் உரிமை, மனித உரிமைகள், பால் நிலை சமத்துவம் (Gender Equality), சிறுவர் உரிமைகள் தொடர்பில் கலந்துரையாட வேண்டிய பல விடயங்கள் தனியார் சட்டத்தில் இருப்பதால் மற்றவர்கள் முன்வைக்கும் எல்லா வாதங்களையும் எதிர்கேள்விகளையும் இன ரீதியானவை என்று அலட்சியப்படுத்தமுடியாது.
சிறுபான்மையினர் விடயத்தில் நடுநிலையாகவும் சாதகமாகவும் கருத்துகளை வெளியிடும் அரசியல் விமர்சகர் ஜெஹான் பெரேரா கொழும்பு டெலிக்ராபில் (3, June 2019) எழுதியுள்ள கட்டுரையில், தனியார் சட்டமும் ஜம்இய்யத்துல் உலமாவும் பற்றியும் குறிப்பிடுகின்றார். முஸ்லிம் சமூகம் தன்னை சுய விமர்சனத்திற்குள்ளாக்குவது அவசியம் என்றும் மைய நீரோட்டத்தில் உள்ள முஸ்லிம்களின் நடுநிலையான முன்னேற்றமான கருத்துகள் கடும் போக்காளர்களால் தடைப்படக்கூடாது என்றும் அதில் அவர் கூறியுள்ளார். அதிலிருந்து ஒரு சிறு பகுதியைப் பார்ப்போம்.
மைய நீரோட்ட முஸ்லிம்களின் (Mainstream Muslim Community) சமயத் தலைவர்கள் அங்கம்வகிக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா (ACJU) தனியார் சட்டச் சீர்திருத்தங்களுக்கு கடந்த காலத்தில் தடையாக இருந்தது. ஆனால் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் காரணமாக பல பிரச்சினைகளில் தனது நிலைப்பாட்டை மீள் பரிசீலனை செய்வதற்கு அது முன்வந்துள்ளது. அவசர காலச்சட்டத்தை உத்தேசித்து முகத்தை முழுவதுமாக மறைக்கும் புர்க்காவை அது தடைசெய்துள்ளது. தமது சமூகத்திற்குள் தலை தூக்கியுள்ள வன்முறைத்தீவிரவாதம் பற்றி அறிந்துகொள்வதற்கும் முஸ்லிம் சமூகத்தினுள் ஒரு பிரிவினர் முன்வந்துள்ளனர். சுயவிமர்சனம் தேவை என்பதையும் இன்று முஸ்லிம்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். ஏனைய சமூகத்தவர்களுடன் மேலும் அதிகத் தொடர்புகள் தேவை என்பதையும் அவர்கள் உணர்ந்துள்ளனர்.
முஸ்லிம்களின் இந்த நிலைப்பாட்டை நாம் பாராட்டவேண்டும். தீவிரவாதிகள் ஒரு சிலரின் செயல்களுக்காக அனைத்து முஸ்லிம் மக்களையும் தண்டிப்பது தவறாகும் என்று ஜெஹான் பெரேரா அக்கட்டுரையில் குறிப்பிடுகிறார். அதாவது மைய நீரோட்ட முஸ்லிம்களின் நடவடிக்கைகளும் முன்னெடுப்புகளும் சாதகமான சூழ்நிலைகளை உருவாக்கி உள்ளது என்பதை அவர் பதிவு செய்கிறார்.
ஆபத்து தலைக்கு மேல் ஆயத்தமாக இருந்தபோது அ.இ.ஜ.உ. சில விட்டுக் கொடுப்புகளுக்கு வந்தது உண்மைதான். ஆனால் மைய நீரோட்ட முஸ்லிம் சமூகத்தின் நியாயமான உணர்வுகளை அது அலட்சியப்படுத்தி வருகிறது. தனியார் சட்ட சீர்திருத்தத்தைத் தடுப்பதற்கு அல்லது அதை வெறும் சடங்காக உருமாற்றுவதற்கு பகீரத முயற்சிகளில் அது ஈடுபட்டு வருகிறது.
சட்டத் திருத்தம் என்பது சமூகத்தின் நலனுக்கும் முன்னேற்றத்துக்கும் எடுக்கப்படும் முக்கிய பணியாகும். முஸ்லிம் தனியார் சட்டம் அடிப்படையில் பெண்களின் பாதுகாப்பு, சமத்துவம், பெண்களுக்கான நீதி, சிறுவர் உரிமை, பணக்கொடுக்கல் வாங்கல் பற்றியது என்பதை நாம் மறக்கக் கூடாது. புதிய சட்டத்திருத்தத்தினால் இப்பிரச்சினைகளை தீர்க்கமுடியாது போனால் சீர்திருத்தத்தினால் எந்தப் பயனும் இல்லை. உலமா சபையின் போக்கில் மாற்றங்கள் தேவை.
பேராசிரியர் எம்.எஸ்.எம்.அனஸ்
vidivelli