புதிய அரசியலமைப்பொன்றினை உருவாக்கும் பணிகள் கடந்த காலங்களில் துரிதமாக முன்னெடுக்கப்பட்டிருந்தபோதும் அண்மைக்காலமாக அப்பணிகள் ஸ்தம்பித்துப் போயிருந்தன. தற்போது மீண்டும் அப்பணிகளை மீள ஆரம்பித்து செயற்பாட்டைத் தொடர வேண்டுமென அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருகின்றன.
புதிய அரசியலமைப்பின் செயற்பாட்டை மீள ஆரம்பிக்க வேண்டுமென கடந்த வியாழக்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரேரணையைக் கொண்டு வந்திருந்தது. தற்போது அதிகாரத்தில் இருக்கும் அரசாங்கம் தனது பதவிக்காலத்தை நிறைவு செய்யவிருக்கும் நிலையில் என்றோ உருவாக்கப்பட்டிருக்க வேண்டிய புதிய அரசியலமைப்பு தொடர்ந்தும் இழுத்தடிக்கப்பட்டே வந்துள்ளது. தற்போதைய அரசாங்கம் தனது எஞ்சியுள்ள ஐந்து மாத பதவிக்காலத்தில் இந்தப் பணிகளை நிறைவுசெய்ய முடியுமா? அது சாத்தியமாகுமா என்றும் விவாதிக்கப்பட்டு வருகிறது.
‘புதிய அரசியலமைப்பொன்றுக்கே இந்த அரசாங்கத்துக்கு மக்கள் ஆணை வழங்கப்பட்டது. ஆனால் அரசாங்கத்தினால் அதனை நிறைவேற்றமுடியாமல் போயுள்ளது. அதனால் தமிழ் மக்களைப்போல் நாங்களும் தீர்வை எட்டுவதில் விரக்தியுற்றிருக்கிறோம்’ என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் பதவிக்கு வருவதற்கு முன்பு புதிய அரசியலமைப்பு தயாரிக்கப்பட்டு அதனூடாக அதிகாரப் பரவலாக்கம் மற்றும் தேசிய பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படும் என்றே தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஏனைய வாக்குறுதிகளைப் போன்று இதுவும் புறந்தள்ளப்பட்டு விட்டது. அரசாங்கத்தின் 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் 19 ஆவது திருத்தத்தைக் கொண்டு வந்து அதன் மூலம் ஜனாதிபதியின் அதிகாரங்களை மாத்திரமே குறைக்க முடிந்தது.
புதிய அரசியலமைப்பு கலந்துரையாடல்கள் மீண்டும் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். புதிய அரசியலமைப்பு தொடர்பில் சிறுபான்மைக் கட்சிகளின் கூட்டமொன்று கூட்டப்பட்டு முன்னெடுப்புகளை ஆரம்பிக்க வேண்டுமெனவும் அவர் கூறியுள்ளார்.
தற்போது தயாரிக்கப்பட்டிருக்கும் அரசியலமைப்பு வரைபில் பல நல்ல விடயங்கள் இருக்கின்றன. செனட் சபை என்றும் மேல் சபை என்றும் புதிய கட்டமைப்புகள் இருக்கின்றன. அதிகாரப் பரவலாக்கம் மூலமே ஒற்றுமை மிக்க சமூகத்தைக் கட்டியெழுப்ப முடியும். புதிய அரசியலமைப்பினூடாக நாடு பிளவுபடும் என்ற சந்தேகத்தில் இருந்து சிங்கள மக்கள் விடுபட வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு வருட காலமாக துரித கதியில் இயங்கிவந்த அரசிலயமைப்பை உருவாக்கும் பணிகள் தற்போது முழுமையாக ஸ்தம்பித்துள்ளன. 2016 ஆம் ஆண்டு தேசிய அரசாங்கம் பாராளுமன்றத்தை அரசியலமைப்பு நிர்ணய சபையாக மாற்றி புதிய அரசிலயமைப்பு தயாரிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
தேர்தல் முறையில் மாற்றம், இனப்பிரச்சினைக்குத் தீர்வு நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழித்தல் எனும் விடயங்கள் கலந்துரையாடப்பட்டன என்றாலும் இவ்விடயங்களில் எந்த இணக்கப்பாடும் கடந்த வருடம் எட்டப்படவில்லை. இவ்வாறான நிலையில் கடந்த வருடம் இறுதிக்குப் பின்பு புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணிகள் ஸ்தம்பிதமடைந்தன.
புதிய அரசியலமைப்பு திருத்தத்தை அரசு நடைமுறைப்படுத்தாதுவிட்டால் நாடு முன்னொருபோதும் கண்டிராத பாரிய அழிவை எதிர்கொள்ள நேரிடும். புதிய அரசியலமைப்பின் வெற்றியிலேயே நாட்டின் எதிர்காலம் தங்கியுள்ளது. எனவே புதிய அரசியலமைப்பு திருத்தத்திற்கு அரசாங்கம் மதிப்பளித்து விரைவாக அதனை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனும் தெரிவித்துள்ளார்.
புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு 2015 ஆம் ஆண்டு சிறந்த சந்தர்ப்பமாக அமைந்திருந்தது. கடந்த ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களில் புதிய அரசியல் அமைப்பை உருவாக்குவதற்கு மக்கள் ஆணை வழங்கியிருந்தார்கள்.
2015 இல் இரு பிரதான கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது. என்றாலும் இதனூடாக அரசியல் தீர்வு கிடைக்கும் என்ற தமிழ், முஸ்லிம் மக்களின் நம்பிக்கை வீணடிக்கப்பட்டு விட்டது.
அரசாங்கத்தின் பதவிக்காலம் குறுகியது என்றாலும் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பணிகள் தொடர்ந்தும் ஸ்தம்பித நிலையில் இருக்கக்கூடாது. முன்னரை விட வேகமாகப் பணிகள் முன்னெடுக்கப்படவேண்டும்.
vidivelli