கடந்த மே மாதம் 12, 13 ஆம் திகதிகளில் வடமேல் மாகாணத்தில் நாத்தாண்டியா பகுதியில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான வன்செயல்களினால் பாதிக்கப்பட்ட 98 குடும்பங்களில் 50 குடும்பங்களுக்கு நஷ்டஈடாக 7 மில்லியன் ரூபா இன்று வழங்கப்படவுள்ளது.
நாத்தாண்டியா பிரதேச செயலகத்தில் இராஜாங்க அமைச்சர் நிரோஷன் பர்ணாந்து தலைமையில் இன்று காலை10 மணிக்கு நடைபெறவுள்ள நிகழ்வில் நஷ்டஈடுகள் உரிய குடும்பங்களுக்கு கையளிக்கப்படவுள்ளன.
ஏனைய 48 குடும்பங்களின் நஷ்டஈடு விண்ணப்பங்களிலுள்ள குறைபாடுகள் பூர்த்தி செய்யப்பட்டதன் பின்பு வழங்கப்படும் என புனர்வாழ்வு அமைச்சின் இழப்பீட்டுப் பணியகத்தின் மேலதிகப் பணிப்பாளர் எஸ்.எம். பதுர்தீன் தெரிவித்தார்.
கொட்டாரமுல்லையில் இடம்பெற்ற வன்செயல்களின்போது பலியான பௌசுல் அமீரின் குடும்பத்திற்கு வழங்கப்படவுள்ள நஷ்டஈடு நிலுவை 7 இலட்சம் ரூபாவும் அன்றைய தினம் வழங்கப்படவுள்ளது.
அவரது குடும்பத்துக்கு ஒரு மில்லியன் ரூபா நஷ்டஈடு அனுமதிக்கப்பட்ட நிலையில் ஏற்கனவே 3 இலட்சம் ரூபா வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
தச்சுத் தொழிலில் ஈடுபட்டு வந்த பௌசுல் அமீர் இனவாதிகளால் வாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
ஏ.ஆர்.ஏ. பரீல்
vidivelli