முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத் திருத்தம் தொடர்பிலான சிபாரிசுகளை முன்வைப்பதற்கென நீதியமைச்சினால் நியமிக்கப்பட்ட முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் சலீம் மர்சூப் தலைமையிலான குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை நீதியமைச்சரிடம் 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம் திகதி கையளிக்கப்பட்டது.
முஸ்லிம் அமைச்சர்களினாலும், பாராளுமன்ற உறுப்பினர்களினாலும் ஆராயப்பட்ட இவ்வறிக்கை இவர்களின் பிரேரணைகளுடன் நீதியமைச்சருக்குச் சமர்ப்பிக்கப்படுவதற்கான இறுதித் தறுவாயில் இருந்தமை ஊடகங்களினூடாக நாமனைவரும் அறிந்த உண்மை.
இதனிடையில் ஒரு சில தினங்களுக்கு முன்னர் ஊடகங்களில் வெளியிடப்பட்ட ஒரு செய்தி மீண்டும் இவ்விடயம் தொடர்பிலான ஒரு கேள்விக்குறியையும், திருப்தியற்ற நிலையையும் ஏற்படுத்தியுள்ளது.
‘முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத் திருத்தங்களுக்கான சிபாரிசுகளுக்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களினால் வழங்கப்பட்ட அங்கீகாரத்தை மீளாய்வு செய்வதற்கு நான்கு பேரடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவில் ஹலீம், பைஸர் முஸ்தபா, ஹக்கீம், றிஸ்வி முப்தி உள்ளடக்கம்” என்பதுதான் அந்தச் செய்தி.
கடந்த 15 வருடங்களுக்கு மேலாக முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம் தொடர்பில் பல வழக்குகளில் காதிகள் சபை முதல், உயர் நீதிமன்றம் வரை ஆஜராகின்ற மற்றும் காதி நீதிமன்றங்களுடன் சம்பந்தப்பட்ட பல திறத்தவர்களுக்கு ஆலோசனை வழங்குகின்ற ஒரு சட்டத்தரணி என்ற ரீதியிலும் நாடளாவிய ரீதியில் இவ்விடயம் தொடர்பில் சேவையாற்றிய கள அனுபவம் மற்றும் காதிகளுக்குப் பல வருடங்களாகப் பயிற்சி வழங்கிய வளவாளர்களில் ஒருவர் என்ற ரீதியிலும் நீதியரசர் சலீம் மர்சூப் தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவில் 9 வருடங்களுக்கு மேலாக அயராது சேவையாற்றிய ஒரு உறுப்பினர் என்ற ரீதியிலும் இந்தச் செய்தி என்னைச் சற்று நிலைகுலைய வைத்தது.
முஸ்லிம் அமைச்சர்களினாலும், பாராளுமன்ற உறுப்பினர்களினாலும் வழங்கிய அங்கீகாரத்தை மீளாய்வு செய்வதற்கு மீண்டும் எதற்காக ஒரு குழு அமைக்கப்பட வேண்டும்?
பாராளுமன்ற அங்கத்தவர்களும், அமைச்சர்களும் கொண்ட ஒரு குழுவில் பாராளுமன்ற அங்கத்தவரோ, அமைச்சரோ அல்லாத ஒருவர் குழு அங்கத்தவராக எவ்வாறு நியமிக்கப்பட முடியும்?
அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவில் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷேக் றிஸ்வி முப்தி எவ்வாறு உள்ளடக்கப்படுவார்?
அஷ்ஷேக் றிஸ்வி முப்தி, நீதியரசர் சலீம் மர்சூப் தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவின் ஒரு அங்கத்தவராக இருந்து இரு கருத்துக்கள் கொண்ட அவ்வறிக்கையில் ஒரு கருத்து சார்பாகக் கையெழுத்திட்டவர். இவ்வாறு இருக்கும்போது அவர் இந்தக் குழுவில் எவ்வாறு ஓர் உறுப்பினராக நியமிக்கப்படுவார்?
9 வருடங்களாகக் கலந்தாலோசிக்கப்பட்டுச் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை தொடர்பில் தற்போது முடிவெடுக்கவேண்டிய முழுப்பொறுப்பும் அரசியல் தலைவர்களிடம் இருக்கத்தக்க, அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையின் தலைவர் றிஸ்வி முப்தி இக்குழுவில் எவ்வாறு நியமிக்கப்படுவார்?
இவர் இக்குழுவில் உள்ளடக்கப்படுவாராக இருந்தால் நீதியரசர் சலீம் மர்சூப் தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவில் மறு கருத்துக்கு சார்பாகக் கையெழுத்திட்டவர்களும் இந்தக் குழுவில் உள்வாங்கப்பட வேண்டும். பெண்களையும் ஒரு பகுதியினராகக் கொண்டுள்ள விடயங்களை முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம் ஆள்கின்றமையினால் தகுதிவாய்ந்த, பெண்களை பிரதிநிதித்துவம் செய்யும் உறுப்பினர்களும் நியமிக்கப்பட வேண்டும்.
பாராளுமன்றத்தினால் இயற்றப்பட்ட ஒரு நாட்டின் சட்டத்தைத் திருத்துவதற்குரிய சிபாரிசுகளை ஆராய்வதற்கு அமைச்சர்களுடனும், பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவர் நியமிக்கப்படுவாராக இருந்தால், சட்டவல்லுநர்களின் பங்களிப்பு இவ்விடத்தில் எவ்வாறு கணிக்கப்படுகின்றது? இந்த சந்தர்ப்பத்தில் நீதியும், நியாயமுமான ஒரு பிரேரணை சமர்ப்பிக்கப்படுவதற்கான நம்பிக்கைச் சாத்தியம் எந்தளவிற்கு உள்ளது?
ஒரு நாட்டின் பாராளுமன்றத்தினால் இயற்றப்பட்ட சட்டமானது, அச்சட்டம் மதம் சார்பான தனியாள் சட்டமாக இருக்கும் பட்சத்தில், மதக்கோட்பாடுகளுக்கு இடமளிக்கும் அதேவேளையில் அந்நாட்டின் பொதுவான சட்டங்களுக்கும், அரசியலமைப்பு சட்டத்திற்கும் மாறுபடாத வகையில் அமையவேண்டும்.
பெண்களுக்கு உரிய சுதந்திரமும், சமத்துவமும், அந்தஸ்தும் வழங்கப்பட்டுள்ள மிதமான கோட்பாடுகளையும் கொள்கைகளையும் கொண்ட இஸ்லாம், குறிப்பிட்ட சிலரின் சுய இலாபங்களுக்காக தவறாகப் பொருள் கோடல் செய்யப்பட்டு அடிப்படைவாதக் கோட்பாடுகளாகவும், தீவிரப் போக்கான கொள்கைகளாகவும் மாறக்கூடாது. இதன் மூலம் யாராக இருந்தாலும் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் எந்த ஒரு மனிதனினதும் சமத்துவம், அடிப்படைச் சுதந்திரம், உரிமை, கௌரவம், கண்ணியம் என்பன பாதிக்கப்படக்கூடாது என்பதனை உரியவர்கள் கவனத்திற்கொள்ள வேண்டும். இல்லையெனில் வரலாறு காணாத பாரிய விளைவுகளைச் சந்திக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்படும்.
சட்டத்தரணி ஸபானா குல் பேகம்
vidivelli