சுமார் 7 இலட்சத்து 50 ஆயிரம் வழக்குகள் விசாரணை செய்யப்படாமல் நிலுவையில் இருப்பதாகவும் அவற்றை விரைவாக விசாரணை செய்வதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அதுகோரள தெரிவித்தார்.
தேசிய மத்தியஸ்த தின வைபவம் நேற்று வியாழக்கிழமை பத்தரமுல்லை வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் இடம்பெற்றது. அதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் நீதித்துறையில் வெளியினரின் தலையீட்டுக்கு ஒருபோதும் இடமளிக்க போவதில்லை என்றும் நீதித்துறை முழு சுதந்திரமாக செயற்பட்டு வருகிறது என்றும் குறிப்பிட்டார்.
அமைச்சர் அங்கு மேலும் கூறியதாவது, கடந்த வருட இறுதியில் இடம்பெற்ற அரசியல் நெருக்கடி நிலைமையின் காரணமாக அநேகமான அபிவிருத்திப் பணிகள் நிறைவு செய்யப்படாமல் இடைநிறுத்தப்பட்டிருந்தன. மத அடிப்படைவாத செயற்பாடுகளின் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி தொடர் குண்டுத்தாக்குதல்களினால் எமது மக்கள் கொல்லப்பட்டார்கள். இவ்வாறான நிலையில் நாளைய தினம் என்ன நடக்கும் என்று எவராலும் குறிப்பிட முடியாது.
தற்போது எமது நாட்டில் 335 தேசிய மத்தியஸ்த சபைகள் இயங்கி வருகின்றன. இந்த மத்தியஸ்த சபைகளின் பங்களிப்பு அவசியமானதாகும். மத்தியஸ்தசபைகள் மீது பல்வேறு முறைப்பாடுகள் முன்வைக்கப்படுகின்றன. எவ்வாறான முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டாலும் எந்தவொரு காரணத்துக்காகவும் அவற்றின் மீது அரசியல் தலையீடுகள் இடம்பெறுவதில்லை. அதற்கு நாங்கள் இடமளிக்கவும் இல்லை.
நீதியை கட்டியெழுப்புவதற்கு இன, மத வேறுபாடுகளின்றி அனைவரும் ஒற்றுமையாக செயற்படுவது அவசியமாகும். அடிப்படை உரிமைகள், மனித உரிமைகளை முழுமையாக பாதுகாக்க வேண்டியதும் அவசியமாகும். எமது பாடசாலை கல்வித் திட்டத்தில் சட்டங்கள் தொடர்பான கற்கைகள் உள்வாங்கப்பட வேண்டும். காரணம், நாட்டிலுள்ள சட்டத்திட்டங்களை முறையாக அறிந்துகொள்ளாமையினால் மாணவர்கள் வழிதவறிச் செல்லும் நிலை உருவாகியுள்ளது. தற்போது நீதித்துறையின் சுதந்திரம் தொடர்பில் பல்வேறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. எவர் என்ன கூறினாலும் எந்தக் காரணத்துக்காகவும் நீதித்துறையின் சுதந்திரத்தில் தலையிடுவதற்கு இடமளிக்க போவதில்லை. எமது நாட்டில் இடம்பெறும் சம்பவங்கள், தொடர்பாக எமது நீதிமன்றத்தினூடாக சுயாதீனமான விசாரணைகள் முன்னெடுத்து தீர்வை பெற்றுக்கொள்வோம்.
அரசியல் நோக்கங்களுக்காக அரசாங்கத்தின் செயற்றிட்டங்களுக்கு பொய்யான விம்பத்தை மக்கள் மத்தியில் தோற்றுவிக்க சிலர் முயற்சிக்கிறார்கள். வெளிநாட்டுத் தேவைகளுக்காக அரசாங்கம் திட்டம் வகுப்பதாக குற்றஞ்சாட்டுகிறார்கள். கடந்த காலங்களில் பொருளாதார ரீதியில் பின்னடைவைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது. அந்த பின்னடைவுகளின் மத்தியிலும் முதலீடுகளை பயன்படுத்தி இன்று நாங்கள் முன்னேறி வருகிறோம் என்றார்.
vidivelli