அப்துல் வஹாப், இந்தியாவின் ஹைதராபாத்தை பிறப்பிடமாகக் கொண்டவர். தற்போது ஐக்கிய அரபு இராச்சியத்தின் சார்ஜாவில் வசித்து வருகிறார். மனித வாழ்வில் நடக்கும் சிறிய தவறுகள், கவனயீனங்கள், அலட்சியங்கள் ஒருவரின் வாழ்வை எந்தளவுதூரம் புரட்டிப் போடும் என்பதற்கு அப்துல் வஹாபின் கதை நல்ல உதாரணம்.
தொழில்தேடி சார்ஜாவுக்கு வந்த அப்துல் வஹாபுக்கு பிரபல உணவகம் ஒன்றில் வேலை கிடைத்தது. அந்த உணவகத்தின் கிளை ஒன்றில் முகாமையாளராக பதவி வகிக்கும் அளவுக்கு அவர் தனது கடின உழைப்பினால் முன்னேறினார். ஆனாலும் சரியாக நான்கு வருடங்களுக்கு முன்னர்தான் அந்த துரதிஷ்டமான சம்பவம் நடந்தேறியது.
2015 மார்ச் 10 ஆம் திகதியன்று நடந்த கவனயீனம் தனது வாழ்க்கையையே திசைதிருப்பி விடும் என்று வஹாப் நினைத்துக்கூடப் பார்த்திருக்கமாட்டார். உணவகத்தின் 3 பிரிவுகளில் பணத்தை சேகரித்துவிட்டு அதனை வங்கியில் வைப்பில் இடுவதற்காக வேண்டி டுபாய் சந்தைத் தொகுதியில் உள்ள ஒரு வங்கிக்கு வஹாப் சென்று கொண்டிருந்தார். செல்லும் வழியில் ழுஹர் தொழுகைக்காக வேண்டி சார்ஜாவின் அல் நஹ்தா குடியிருப்புக்கு அண்மையில் உள்ள காலித் இப்னு அல்வலீத் பள்ளிவாசலில் தனது காரை நிறுத்தினார். தொழுகையை முடித்துவிட்டு தனது காருக்குத் திரும்பிய பின்னர் நடந்த விடயங்களை அவர் இவ்வாறு விவரிக்கிறார்.
“தொழுகையை முடித்துவிட்டு வந்த பின்னர் அந்த இடத்தில் எனது காருக்கு அண்மையில் குப்பைத் தொட்டி இருப்பதைக் கண்டேன். எனது கார் நீண்ட நாட்களாக சுத்தம் செய்யப்படாததால் காரில் அதிகமான குப்பைகள் இருந்தன. அதையெல்லாம் சுத்தம் செய்ய நேரம் கிடைக்கவில்லை என்பதால் குப்பைகளை அகற்ற இதுவே சரியான இடமும் நேரமும் என்று கருதினேன். காரினுள் இருந்த குப்பைகளை ஒரு பொலித்தீன் பையில் கட்டி வீசினேன்.
பின்னர் பணத்தை வைப்பிலிடுவதற்காக டுபாய் மாலுக்குச் சென்றேன். அங்கு சென்ற பின்னர்தான் நான் கொண்டு வந்த பணப் பொதியைக் காணவில்லை என்பதை என்னால் உணர முடிந்தது. ஆம்! நான் குப்பைகளை வீசும்போது என்னிடம் இருந்த 105, 439 திர்ஹம் பணத்தையும் அதில் கட்டி வீசிவிட்டேன். (இன்றைய மதிப்பில் இலங்கை நாணயத்தில் 50 இலட்சத்து 21 ஆயிரத்து 929 ரூபா.)
நான் கொண்டு வந்த பணத்தையும் சேர்த்து குப்பைத் தொட்டியில் வீசிவிட்டதை உணர்ந்தபோது தலை சுற்றியது. மறுகணமே வாகன நெரிசலையும் கணக்கில் கொள்ளாமல் ஸார்ஜாவுக்கு எனது காரைத் திருப்பினேன். வந்து பார்க்கும் போது நேரம் கடந்து விட்டது. குப்பைத் தொட்டி வெறுமையாக இருந்தது. சுத்திகரிப்பாளர்கள் அவற்றை எடுத்துச் சென்றுவிட்டார்கள்.”
உடனடியாகவே வஹாப் நடந்த சம்பவத்தை தனது மேலதிகாரிக்கு தெரியப்படுத்தினார். இது தொடர்பாகப் பொலிஸில் முறைப்பாடொன்றினை செய்யுமாறு மேலதிகாரி அறிவுறுத்தினார். பொலிஸ் நிலையத்தில் அடுத்த நாள் காலையில் சென்று வஹாப் முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்தார்.
“இது யாருடைய பணம்” என்று பொலிஸ் நிலையத்தில் கேட்டார்கள். “இது கம்பனியுடையது” என்றேன். “இது கம்பனியுடைய பணமாக இருந்தால் கம்பனியின் பொது உறவுகள் அதிகாரி (P.R.O) வந்து முறையிட வேண்டும்” என பொலிஸார் தெரிவித்தனர். ஆனால் எனது கம்பனி தவறுதலாக குப்பையில் வீசப்பட்ட பணத்தை ‘திருடப்பட்ட பணம்’ என்பதன் அடிப்படையில் முறைப்பாடு செய்ய முயற்சி செய்தது. ஏனென்றால் பணம் திருடப்பட்டிருக்கும்பட்சத்தில் அதற்கான காப்புறுதி கிடைக்கும். தவறுதலாக காணாமலாக்கப்பட்டிருந்தால் காப்புறுதி கிடைக்காது.
காப்புறுதியை பெற்றுக்கொள்வதற்காக வேண்டி வஹாபுடைய மேலதிகாரிகள் பணம் திருடப்பட்டுவிட்டதாக முறைப்பாடு செய்யும்படி அவரை வற்புறுத்தினர். பொய் கூறி முறைப்பாடு செய்தால் தனக்கு மேலும் தலையிடியை ஏற்படுத்தி பெரிய பொறியொன்றுக்குள் மாட்டிக்கொள்ள நேரிடும் என்பதால் வஹாப் தனது மேலதிகாரிகளின் கோரிக்கைகளை மறுத்து வந்தார்.
அப்போது வஹாபின் மாத சம்பளம் 8,625 திர்ஹம்கள். எனவே இந்தத் தவறிலிருந்து மீள்வதற்காக குறிப்பிட்டளவு தொகையை தனது சம்பளத்திலிருந்து தவணை முறையில் செலுத்துவதற்கு வஹாப் தனது கம்பனியிடம் அனுமதி கேட்ட போதிலும் அவருடைய கம்பனி அதை மறுத்து விட்டது. ‘பாதுகாப்புக் காரணங்கள்’ என்ற போர்வையில் கம்பனி அவருடைய கடவுச்சீட்டையும் வாங்கி வைத்துக் கொண்டது. பின்னர் கம்பனி கோரிய பத்திரங்களில் கையெழுத்தையும் போட்டுக் கொடுத்தார்.
” ஒரு நாள் கம்பனியின் மனிதவள முகாமைத்துவப் பிரிவில் இருந்து தொலைபேசியூடாக என்னைத் தொடர்பு கொண்டு குறித்த பணத்தை திரும்பச் செலுத்த காப்புறுதி நிறுவனம் ஒப்புக்கொண்டதாகத் தெரிவித்தார்கள். ‘பொலிஸ் முறைப்பாடு இல்லாமல் காப்புறுதி எப்படி கிடைத்தது’ என நான் கேட்டேன். ‘நாங்கள் உங்களுக்கு உதவத்தான் முயற்சி செய்கிறோம். சம்பவ அறிக்கையை மட்டும் தாருங்கள்’ என்று சொன்னார்கள். நானும் கொடுத்தேன். நான் திரும்ப கம்பனிக்கு வேலைக்காக சென்ற போது என்னை வேலையை விட்டு நீக்கிவிட்டதாகச் சொன்னார்கள்.
கடவுச்சீட்டு, சம்பவ அறிக்கை உட்பட பாதுகாப்பு காசோலையையும் வாங்கிவிட்டு அதன் பின்னர் வஹாபினை வேலையை விட்டும் நீக்கியுள்ளார்கள். வேலையைத் தொடர வேண்டும் என்றால் தொலைத்த பணத்தை திரும்பச் செலுத்த வேண்டும் என அவர் பணிக்கப்பட்டார்.
ஓர் இலட் சம் திர்ஹம் பணத்தை அவரால் செலுத்த முடியும் என்பது சாத்தியமே இல்லாத ஒன்றாகும். வஹாபிடம் எதுவுமே இல்லாத நிலையிலேயே அவர் மொத்தப் பணத்தையும் செலுத்துமாறு பணிக்கப்பட்டார்.
“எனது பாஸ்போர்ட் என்னிடம் இருந்த போது நான் நினைத்திருந்தால் நாட்டை விட்டு தப்பியோடியிருக்கலாம். ஆனால் நான் அவ்வாறு செய்யவில்லை. பணம் காணாமல் போன விடயம் கம்பனிக்குத் தெரியாது. நான் தான் அவர்களிடம் நடந்த சம்பவத்தைக் கூறினேன். எனது கவனயீனத்தால்தான் பணம் தொலைந்து போனது. நான் திருடவில்லை. அதனால் ஓடி ஒளிய வேண்டிய அவசியம் எனக்கில்லை” என தனது நேர்மையை நிரூபிக்கிறார் வஹாப்.
வஹாப் வேலையை விட்டு விலகும்போது அவர் இரண்டு அறைகள் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்தார். பின்னர் தொழில் இல்லாததால் அதற்கான வாடகையை உரிய முறையில் செலுத்தாததால் குறித்த வீட்டுரிமையாளர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். ஒரு தொழிலாளர் என்பதன் அடிப்படையில் பல்வேறு இடங்களில் அவர் கடன் பெற்றும் உள்ளார். வங்கிகளிலும் கடனட்டை முறை உட்பட பல முறைகளில் இவர் கடன் பெற்றிருந்த வேளையில் திடீரென இப்படி நடந்ததால் அனைவருக்கும் ஒரே நேரத்தில் பதில் சொல்ல வேண்டியநிலை ஏற்பட்டது. காசோலைகள் திரும்பியமை, நிதி மோசடி, வீட்டு வாடகை செலுத்தாமை போன்ற பல முறைப்பாடுகளினால் வஹாப் கைது செய்யப்பட்டு நீதின்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.
2017 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட வஹாப் அந்த வருடத்தின் ரமழான் மாதம் முழுவதையும் சிறையிலேயே கழித்தார். 7 மாதங்களின் பின்னர் விடுதலை செய்யப்பட்ட போதும் பல்வேறு காரணங்களுக்காக வேண்டி மீண்டும் அவர் கைது செய்யப்பட்டார். இதனால் 2018 ஆம் ஆண்டு ரமழான் மாதத்தையும் சிறையில் கழிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை அவருக்கு ஏற்பட்டது. கடந்த 4 வருடங்களும் வஹாபுக்கு நரகவேதனையைத்தான் கொடுத்தது. தற்போது வசிப்பதற்கு இடம் இல்லாத நிலையில் தனது நண்பர் ஒருவரின் காரினை வீடாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். தனது நாட்டுக்கு விடுமுறையில் சென்றிருக்கும் நண்பரின் கார் தான் இப்போது இவருடைய வீடு.
“தொழிலும் இல்லாமல் வீடும் இல்லாமல் எனது நண்பனின் வாகனத்தை 3 மாதமாக வீடாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன். இந்த மூன்று மாதமும் உணவகங்களில் இருந்து சுடுதண்ணீரைப் பெற்று நூடில்ஸ் செய்து சாப்பிட்டு வருகின்றேன். பள்ளிவாசலில் உள்ள வெறும் தண்ணீரால் மட்டும் ஆடைகளைக் கழுவிக்கொள்கிறேன்.. அதே பள்ளிவாசலில் உள்ள கழிப்பறையைத்தான் பயன்படுத்துகிறேன். என்னைக் கடந்து சென்ற மூன்று மாதமும் இப்படித்தான் நகர்ந்தது.”
தனக்கு ஏற்பட்டுள்ள இந்த நிர்க்கதியான நிலைமையினை தன்னை வேலையை விட்டு விலக்கிய கம்பனியில் சென்று வஹாப் முறையிட்டார். ஆனால் அதற்கு எந்தவிதமான பலனும் கிடைக்கவில்லை. “உனக்கான வழியை நீதான் தேட வேண்டும். எங்களுக்குப் பணம்தான் தேவை” என்று சொல்லி அனுப்பிவிட்டார்கள்.
“எனக்கான வழி என்று இப்போது எதுவும் இல்லை. நான் தற்கொலைதான் செய்து கொள்ள வேண்டும்” என விரக்தியுடன் கூறுகிறார் வஹாப்.
இந்த விடயத்தில் தனக்கு அநீதி இழைக்கப்பட்டிருப்பதாகக் கருதி வஹாப் தொழிலாளர் அலுவலகத்தில் முறைப்பாடு செய்வதற்குச் சென்றபோது அதற்கான நேரம் கடந்து விட்டது என்றே பதில் வந்தது. ஏதேனும் ஒரு நிறுவனம் தொடர்பாகக் குறித்த நிறுவனத்தின் தொழிலாளி ஒருவர் முறைப்பாடு செய்யவேண்டுமாக இருந்தால் அந்த நிறுவனத்தில் இருந்து விலகிய ஒருவருடத்துக்குள் முறைப்பாடு செய்ய வேண்டும். வஹாப் இந்தச் சட்டம் தொடர்பில் அறிந்திருக்கவில்லை என்கிறார்.
“நான் கடந்த 7 வருடங்களாக எனது பெற்றோரைப் பார்க்கவில்லை. அவர்களுக்கு வயதாகிறது. போன வருடம் எனது தாய் ஒரு கார் விபத்தில் சிக்கினார். கடந்த ஏப்ரல் மாதம் எனது தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டது. ஆனால் அவர்களைச் சென்று பார்க்க முடியாதுள்ளது.
”எனது தந்தை அவருக்கு எப்போதும் 4 மகன்கள் இருக்க வேண்டும் என்றுதான் எண்ணுவார். அவருக்கு ஏதாவது நடந்தால் அவருடைய மகன்கள் 4 பேரும் ஜனாஸாவை மையவாடிக்கு தூக்கிச் செல்ல வேண்டும் என எண்ணுவார். அவருக்கு ஏதாவது நடந்தால் யாரால் எனது தந்தையை திருப்பித் தர முடியும். யாருக்கு அந்த நினைவுகளை மீட்டுத்தர முடியும்”
வஹாப் ஒரு சிறந்த முகாமையாளர். அதற்கு அவர் பெறற விருது சாட்சி. எந்தவிதமான கஷ்டங்களும் இன்றி வாழ்ந்தவர். ஒரு கட்டத்தில் வீதிக்கு வந்து விட்டார். அவர் தனது சொந்த ஊரான ஹைதராபாத் நோக்கிச் செல்ல வேண்டும் என ஆசைப்படுகிறார். வஹாபுடைய தந்தை மொஹமட் பின் ஒஸ்மான் ஒபைருடைய உடல் நலன் நாளுக்குநாள் குன்றி வருகின்றது. “எனது மகனைக் காணுவதே எனது ஒரே ஆசை” என்கிறார் ஒபைர்.
“எல்லோரும் அவரவருடைய வாழ்க்கையில் ஏதாவதொன்றைத் தொலைத்திருப்பார்கள். அது ஒவ்வொருவருக்கும் தவறுதலாக நடப்பதுதான். எனக்கும் அதுதான் நடந்துள்ளது. நான் எனது தவறை நேர்மையாக ஒப்புக்கொள்கிறேன். நான் மீண்டும் வீட்டுக்குச் செல்ல வேண்டும்” என்கிறார் வஹாப்.
வஹாபின் இந்தக் கதையை ஐக்கிய அரபு இராச்சியத்தின் ‘கல்ப் நியூஸ்’ பத்திரிகை வெளியிட்டு அவருக்கு முடியுமானோரை பண உதவி செய்யுமாறு கோரியிருக்கிறது. வஹாப் இந்த நெருக்கடி யிலிருந்து மீள நாமும் பிரார்த்திப்போம்.
எம்.ஏ.எம். அஹ்ஸன்
vidivelli