இஸ்லாமிய தீவிரவாதி ஸஹ்ரானின் தற்கொலைத் தாக்குதல்கள் நடந்து இரண்டு மாதங்கள் கடந்துவிட்டன. ஆயினும் அத்தாக்குதல்களின் பின்னதிர்வுகள் இன, மதத் தீவரவாதங்களாக நமது சமூகத்தில் தொடர்ந்தும் ஏற்பட்டு வருகின்றன. தனது தாக்குதல்கள் மூலம் ஸஹ்ரான் முஸ்லிம்களுக்கு எந்தவிதமான ஒரு விடுதலையையும் பெற்றுக் கொடுத்துவிடவில்லை. மாறாக, அத்தாக்குதல்கள் இந்நாட்டு முஸ்லிம்களுக்குப் பாதுகாப்பற்ற ஒரு சூழலையே உருவாக்கி விட்டுள்ளது. இதை முஸ்லிம் தலைவர்களே தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள்.
நமது நாட்டின் தேசியப் பாதுகாப்புக் கட்டமைப்பில் எவ்வளவு பாரிய ஓட்டைகள் இருந்துள்ளன என்பது ஸஹ்ரானின் தாக்குதல்கள் மூலம் தெளிவாக வெளிப்பட்டுள்ளது. உலகின் பிரபலமான நாடுகளின் புலனாய்வுத்துறைகளுக்கு சற்றும் குறையாத மிகச்சிறந்த புலனாய்வுக் கட்டமைப்பை நாம் கொண்டிருந்த போதிலும் அப்புலனாய்வுக் கட்டமைப்பு வெற்றிகரமாக செயற்படுவதற்கான உந்துதல்களை வழங்குவதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன – பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரசு தவறிவிட்டுள்ளதை ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. மைத்திரி – ரணில் இடையில் நிலவும் அரசியல் முறுகல்நிலையின் ஒரு விளைவாக சர்வதேசப் பயங்கரவாத சுவாலைகள் நமது நாட்டையும் ஆக்கிரமிக்கும் நிலை தோன்றியுள்ளது. அதன் விளைவாக முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு நாட்டுக்குள் கட்டியெழுப்பியிருந்த இன, சமய நல்லுறவுகள் படுமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
கடமையும் பொறுப்பும்!
பயங்கரவாதத்துக்கு இனமோ மதமோ இல்லை. ஆயினும், பயங்கரவாதமானது மதவாதமாக, இனவாதமாக மாற்றப்படவும் அவ்வாறு கொண்டுசெல்லப்படவும் இனத்துடனும் மதத்துடனும் தொடர்புபடுத்தப்படுகிறது. ஒரு நாட்டில் நிலவும் அரசியல், சமூக ரீதியான அமைதிக்குலைவானது அந்நாட்டுக்குள் பயங்கரவாதம் இலகுவாக நுழைந்துவிடுவதற்கான வாய்ப்பாக அமைந்து விடுகிறது. நாடொன்றின் பாதுகாப்பற்ற நிலையானது பயங்கரவாதத்துக்கு மிகவும் பாதுகாப்பானது. தற்போது நம் நாட்டில் நிலவும் அரசியல் முரண்பாட்டு நிலையும் பிரிவினைவாதமும் இவ்வுண்மையைத் தெளிவாகக் காட்டி நிற்கின்றன. பிரதமர் ரணில் உள்ளிட்ட குழுவினரைப் பாதுகாப்புக் கவுன்சிலோடு இணைத்துக் கொள்வது நாட்டின் பாதுகாப்புக்கு அவ்வளவு அவசியமில்லை என ஜனாதிபதி கருதுகிறார். ஜனாதிபதி, தன்னை அழைக்காத காரணத்தால், தான் பாதுகாப்புக் கவுன்சிலுக்குப் போகத் தேவையில்லை எனப் பிரதமர் ரணில் நினைக்கிறார். இவ்விருவரும் வேண்டுமென்றே இவ்வாறு நடந்துகொள்வதனூடாகத் தங்களது கடமைகளையும் பொறுப்புக்களையும் நிறைவேற்றத் தவறியுள்ளனர். அரசியல் மற்றும் தனிப்பட்ட நிலைப்பாடுகள், எவ்வாறிருந்த போதிலும் ஜனாதிபதியின் தலையாய பொறுப்பு நாட்டினதும் மக்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியதாகும். அந்த நோக்கத்திற்காக ஜனாதிபதி தற்போதுள்ள அரசோடு ஒத்திசைந்து செயற்பட வேண்டும். தனது சொந்தத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் நடந்துகொள்ளக் கூடாது.
ஜனாதிபதி தன்னைப் பாதுகாப்புக் கவுன்சிலுக்கு இணைத்துக் கொள்ளாததன் காரணமாக நாட்டின் பாதுகாப்பு நிலைமை குறித்துத் தான் அறிந்துகொள்ள முடியாமல் போகுமென்பதைப் பிரதமர் புரிந்துகொண்டிருக்க வேண்டும். பிரதமர் என்ற வகையில் பாதுகாப்பு நிலைமை குறித்துத் தான் அறிவுறுத்தப்படாதிருக்கும் போது அது குறித்து அவர் எதுவும் செய்திருப்பதாகவும் தெரியவில்லை. அவர் வெறுமனே தன்பாட்டில் மெளனமாக இருந்துள்ளார். ஜனாதிபதியினதும் பிரதமரினதும் இவ்வாறான நடவடிக்கைகள், அரசியல் விஞ்ஞானத்தைப் பொறுத்தவரையில் அவநம்பிக்கை மனப்பாங்காகு எனப்படும்.
நாட்டின் பிரதானமான இரு தலைமைகளின் மனப்பாங்குகள் ஒத்திசையும் நோக்கத்தைக் கொண்டிருக்காத இந்தப் பின்னணியை எதிர்த்தரப்பு அரசியல்வாதிகள் தமது அபிலாஷைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான சந்தர்ப்பமாக்கிக் கொள்வர். அதனூடாக நாட்டின் அரசியல், பொருளாதார, சமூக நிலைமைகள் வீழ்ச்சியை நோக்கி நகரும். தற்போது நாட்டுக்குள் ஏற்பட்டிருப்பதும் அத்தகைய ஒரு சூழ்நிலைதான். இது மிகவும் ஆபத்தானது. இத்தகைய சூழலில் நாட்டின் பாதுகாப்புக்குப் பாரிய அச்சுறுத்தல் ஏற்படக்கூடும்.
தாக்குதல்கள் நிகழ்ந்து ஒருசில தினங்கள் கடந்த போதே நாட்டுக்குப் பொறுப்புக்கூறக் கடமைப்பட்டுள்ளோர், தமக்குள்ளேயே ஒருவருக்கொருவர் குற்றம் சுமத்தும் விளையாட்டில் இறங்கி இருந்தனர். அவர்களது ஒற்றுமையின்மை காரணமாக, அதுவரை அரசியல் ரீதியாக வங்குரோத்து நிலையிலிருந்த எதிர்க்கட்சியினர் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு அரசின் மீது கடுமையான தாக்குதல்களைத் தொடுக்க வாய்ப்பாக அமைந்துவிட்டது. ஸ்திரமற்ற நிலையை நோக்கி அரசாங்கத்தைத் தள்ளிவிடும் நோக்கில் எதிரணியினர் தொடர்ந்து செயற்பட்டனர். அதற்காக அவர்கள் ஸஹ்ரானின் தாக்குதல்களைக் காரணங்களாகக் காட்டிக்கொண்டு மதத் தீவிரவாதமொன்றைக் கட்டமைக்கத் தொடங்கினர். அதற்காக அவர்கள் பயங்கரவாத்துக்கு மதமொன்றின் முத்திரையைக் குத்தத் தொடங்கினர். அதன் பொருட்டு, ஒரேயொரு ஸஹ்ரானுக்காக ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் ஸஹ்ரான்களாகச் சித்திரிக்கவும் மாற்றவும் எதிரணியின் சில தீவிரவாதக் கும்பல்கள் வேகமாகச் செயற்பட்டன. அச்செயற்பாட்டின் விளைவாக ஸஹ்ரானின் தாக்குதல்கள் நிகழ்ந்து சில வாரங்கள் கழிந்திருந்த நிலையில் அதுவரை நிலவிய தேசிய நல்லிணக்கமும் சகவாழ்வும் திடீரென வெடித்துச் சிதறின. ஸஹ்ரான்களுக்கு எதிராகப் பாதுகாப்புத்துறைக்கு அதுவரை முழு ஒத்துழைப்பு வழங்கிவந்த ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் சிங்களவர்களின் எதிரிகளாகச் சித்திரிக்கவும் கட்டமைக்கவும் எதிரணியினரின் தீவிரவாதக் கும்பல்கள் வெறிகொண்டு செயற்பட்டன. அதன்படி பல்வேறு பிரதேசங்களில் முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள், கடைகளுக்குத் தீவைத்து, கொள்ளையிட்டு, இந்நாட்டில் மதப்போரொன்றை உருவாக்கி, அதன் மூலமாகத் தங்கள் கைகளிலிருந்து நழுவிவிட்டிருந்த அதிகாரத்தை மீண்டும் தட்டிப் பறிக்கத் திட்டமிட்டு, முயற்சித்தனர். நாட்டுக்குள் திட்டமிட்ட வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டு, தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்த கும்பல்களுக்கு எதிராக சட்டத்தை முறையாகவும் முழுமையாகவும் நிலைநாட்டவும் அரசு தவறிவிட்டது. இத்தகைய அராஜக நிலையின் மூலமாகப் பயனடையக்கூடிய தீவிரவாத அரசியல்வாதிகள் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்வதற்காக எத்தகைய இழிசெயல்களையும் செய்யத் தலைப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது.
சட்டத்தின் ஓட்டைகள்!
இனங்களுக்கிடையே குரோதங்களையும் வன்மங்களையும் ஏற்படுத்தி, மதவாதத்தைப் பரப்பும் கலகக்காரர்களுக்கு எதிராக நாட்டிலிருக்கும் சட்டத்தின்படி ஐ.சி.சி.பீ.ஆர். சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து அக்கும்பல்களைக் கைதுசெய்ய வேண்டிய பொலிஸார் அவ்வாறு செய்யாமல் சாதாரண பொதுச் சட்டத்தின் கீழ் தான் அவர்களைக் கைதுசெய்தனர்.
மூன்று மாதங்களுக்கு முன்னர் ஓர் எழுத்தாளர் எழுதியிருந்த சிறுகதை ஒன்று தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்திருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு இந்த ஐ.சி.சி.பி.ஆர். இன் கீழ் கைதுசெய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தனர். இவ்வாறான காரணங்களால் அரசின் நற்பெயர் கெடுவதோடு அரசின் நீதிக் கட்டமைப்பின் மீதான நம்பிக்கையையும் மக்கள் இழந்துவிடுவர்.
நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டுக்காக சிறைவைக்கப்பட்டிருந்த கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி விஷேட மன்னிப்பு அளித்திருப்பது நீதிமன்றத் தீர்ப்புகளை மலினப்படுத்தும் ஒரு செயற்பாடாகும். அதேபோல அந்த ஜனாதிபதி மன்னிப்பானது, இந்நாட்டிலே மதத் தீவிரவாதிகளுக்கும், இனவாதிகளுக்கும் வழங்கப்பட்டிருக்கும் வரப்பிரசாதமாகவும் கருதப்படமுடியும். இவ்வாறு வளர்ந்துவந்த குழப்பகரமான நிலையை ரதன தேரரும் உண்ணாவிரதமிருந்து தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார். இவ்வாறு நோக்கும்போது, ஸஹ்ரானின் குண்டுத் தாக்குதல்கள் மற்றும் ரதன தேரரின் உண்ணாவிரதம் ஆகிய இரண்டு விடயங்களினாலும் செய்யப்பட்டிருப்பது தீவிரவாத செயற்பாடுகளேயாகும். இருவருமே செய்திருப்பது சமூகத்தை அச்சுறுத்தித் தத்தமது நோக்கங்களை அடைந்து கொள்வதற்கான முயற்சிகளேயாகும். இரண்டுக்கும் இடையிலான ஒரே வித்தியாசம் – ஸஹ்ரானின் தாக்குதல்களால் 250க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருக்கின்றனர்; ரதன தேரரின் செயலால் அப்படியாக மக்கள் இன்னும் கொல்லப்படாவிட்டாலும் அதற்கான ஏதுநிலைகள் இருக்கின்றன என்பதாகும். ஒற்றுமையான ஒரு நாடு என்ற வகையில் நாம் எவ்வளவு பலவீனமாக உள்ளோம் என்பதையே ஸஹ்ரானின் தற்கொலைத் தாக்குதல்கள் மூலம் நாம் மிகவும் தெளிவாக உணர்ந்து கொள்ளக்கூடியதாக உள்ளது. குறிப்பாக, எதிர்க்கட்சியினர் எவ்வளவுதான் சகவாழ்வு பற்றிப் பேசினாலும் நடைமுறையில் அதை அவர்கள் நிரூபிக்கத் தவறியுள்ளனர். தீவிரவாதிகள் தமக்குத் தேவையான எச்சந்தர்ப்பத்திலும் எந்தவிதமான எல்லைகளுக்கும் சென்று தமது இலக்குகளை அடையக்கூடிய வாய்ப்புகள் இங்கே தாராளமாக உள்ளன என்பதைக் கடந்த நிகழ்ச்சிகள் மூலம் நிரூபித்துள்ளனர். அத்தகைய நிகழ்வுகளுக்கு அரசாங்கம் கடுமையாக முகம்கொடுக்க வேண்டும். கடுமையான தீர்மானங்களை எடுக்க வேண்டும். அதனடிப்படையில் தேசிய பாதுகாப்பைக் குலைக்கும்படியான செயல்களில் ஈடுபடும் எத்தகைய தீவிரவாத நபருக்கெதிராகவும் ஐ.சி.சி.பீ.ஆர். சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸஹ்ரானின் தாக்குதல்கள் சர்வதேசப் பயங்கரவாத இயக்கமொன்றுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டதாகும். அத்தகைய செயலொன்று அரசின் ஏதோவொரு கவனக்குறைவால் நிகழ்ந்திருந்தாலும் ஒரு நாடென்ற வகையில் இலங்கையின் சகலரும் தமது பாதுகாப்பைப் பலப்படுத்திக் கொள்வதற்காக ஒரே நிலைப்பாட்டுக்கு வந்தாகவேண்டி உள்ளது. விஷேடமாக அரசியல் கட்சிகளுக்கும் குழுக்களுக்கும் அது தொடர்பிலான பொறுப்பு அதிகமாகவே உள்ளது. அதற்கான காரணம், மக்கள் எல்லோரும் அக் கட்சிகளையும் குழுக்களையுமே சார்ந்திருக்கின்றனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களைப் பொறுத்தவரை நமது நாட்டின் அரசியல்வாதிகளின் நிலையோ மிகவும் கவலைக்கிடமானது. குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கச் சில அரசியல் கட்சிகளும் குழுக்களும் செயற்பட்ட விதமானது புத்திஜீவிகளதும் நடுநிலைச் சிந்தனை கொண்டோரினதும் வெறுப்புக்கு உள்ளாகியிருந்தது. அத்தகைய ஒரு சந்தர்ப்பத்தில் தமது அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றிக் கொள்வதற்குப் பதிலாகப் பொதுவானதொரு செயற்றிட்டத்தின் அடிப்படையில் செயற்படுவது மிகவும் பயனளிக்கக்கூடியது. சிந்தித்துச் செயற்படக்கூடிய, மதவாத, இனவாதச் சக்திகளுக்குப் பலியாகாத அரசியல் தலைமைத்துவமொன்று நாட்டுக்குத் தேவையாக உள்ளது. மதவாதத்தை, இனவாதத்தை முக்கியத்துவப்படுத்திக் கொண்டுள்ள அரசியல் தீவிரவாதிகள் அதிகாரத்துக்கு வந்துவிட்டால் நாட்டுக்குள் நல்லிணக்கத்துக்குப் பதிலாகப் பிரிவினையே முனைப்புப் பெற்றுக் கூர்மையடையும். ஒரு நாடென்ற வகையில் முன்செல்ல இனங்களுக்கிடையே நல்லிணக்கம் நிலவுவது அவசியமாகும். நாட்டின் நல்லிணக்கத்துக்கு விரோதமானோர் பயங்கரவாதிகளே ! காரணம், சமூகங்களைப் பிளவுபடுத்துவதன் மூலமாக மட்டுமே அவர்கள் வெற்றிபெறுகின்றனர். அப்பிளவுகள் ஊடாகவே அவர்கள் தமது இலக்குகளை அடைய முடியும்.
வர்த்தக மாபியா
நாடொன்றின் அபிவிருத்திக்கு அரசியல், பொருளாதார, சமூக உறுதிப்பாடு பாரிய பங்களிப்பாகும். முப்பதாண்டு யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த நாம் அதற்கான ஒரு பாதையை அமைத்துக் கொண்டிருந்தோம். 2015 இல் தற்போதைய அரசு அதிகாரத்துக்கு வந்ததோடு அந்த நிலைமை முன்னேறி வந்திருப்பதைக் காணமுடிகிறது. கடந்த ஏப்ரல் 21 தாக்குதல்களைத் தொடர்ந்து அவ்வளர்ச்சிப் பாதையில் பல தடைகள் சவாலாக வந்துள்ளன. அரசியல், பொருளாதார, சமூகவியல் சவால்கள் ஏற்படத் தொடங்கியுள்ளன. குறிப்பாகப் பொருளாதாரத்துக்கு ஒரு பேரிடி வீழ்ந்து சுற்றுலாத் துறைக்கும் வர்த்தகத் துறைக்கும் பாரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அதற்கான பிரதான காரணிகளாக எதிர்க்கட்சியினர் மேற்கொண்ட சில நடவடிக்கைகளும் செய்த பிரசாரங்களும் அதிகூடிய தாக்கம் செலுத்தியுள்ளதோடு அவற்றை வெற்றிகரமாக முறியடிப்பதில் அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் மிகவும் மந்தமாக இருப்பது ஆச்சர்யமளிக்கிறது. இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்துக்காகவும் உறுதிப்பாட்டுக்காகவும் வர்த்தக சமூகம் பாரியதொரு பங்களிப்பைச் செய்து வருகிறது. ஆயினும் ஸஹ்ரானின் தாக்குதல்களுக்கான பழிவாங்கலாகச் சில தீவிரவாதக் கும்பல்கள் முஸ்லிம் வர்த்தக சமூகத்தைப் புறக்கணிக்குமாறு மக்களைத் தூண்டி வருகின்றன. இம் முஸ்லிம் வர்த்தகப் புறக்கணிப்புக்குப் பின்னால் வர்த்தக மாபியாவொன்று செயற்படுவது தெளிவாகிறது.
முஸ்லிம் வர்த்தக நிலையங்களில், கடைகளில் சிங்களவர்களும் தமிழர்களும் பொருள்களைக் கொள்வனவு செய்வதைத் தவிர்த்துக் கொண்டுள்ள போதிலும் பெரும்பாலான சிங்கள, தமிழ் வர்த்தகர்கள் தங்களது வர்த்தகத்துக்குத் தேவையான பொருள்களை மொத்தமாக முஸ்லிம் மொத்த வர்த்தகளிடத்தில் கொள்வனவு செய்வதை நிறுத்திக் கொள்ளவில்லை. இது சாதாரண பொதுமக்கள் அறியாத இரகசியம். அவ்வாறு நோக்குகையில் முஸ்லிம் வர்த்தக நிலையங்களைப் புறக்கணிப்பது அர்த்தமற்ற செயலாகும்.
பிரிவதால் பின்னடைதல்
நமது நாட்டின் பொருளாதாரம் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் என்று வேறுபட்டதாக இல்லை. உலகிலும் எங்குமே அத்தகைய பொருளாதார முறைமையும் இல்லை. அமெரிக்காவின் பொருளாதாரம் கிறிஸ்தவப் பொருளாதாரமில்லை. அரபு நாடுகளின் பொருளாதாரமும் முஸ்லிம் பொருளாதாரம் என்றில்லை. பொருளாதாரத்துக்குள் இருப்பது ஒரு கலப்பு முறைமையாகும். உலகம் முழுதும் வாழும் எல்லா சமூகத்தவரும் மதத்தினரும் அந்தந்த நாடுகளின் பொருளாதாரத்தை வளப்படுத்திக் கொண்டுதான் உள்ளனர். ரூபாவில் சிங்கள ரூபா, தமிழ் ரூபா, முஸ்லிம் ரூபாவெனும் பேதங்களில்லை. அது இலங்கையின் பொதுவான நாணய அலகாகும். டொலர், கிறிஸ்தவர்களுக்கு மட்டுமே உரித்தானதல்ல. அது, உலகின் பிரதானமான ஒரு நாணய அலகாகும். இலங்கை, பல்லின – பல்சமய நாடொன்று என்ற வகையில் அதன் பொதுவான பொருளாதார அளவுகோலாக இருப்பது ரூபாவாகும். சிங்களவர், தமிழர் மற்றும் முஸ்லிம்கள் எல்லோருக்குமே ரூபா பொதுவானது. இவர்கள் எல்லோருமே இந்த ரூபாவின் மதிப்பைப் பேணிக் காத்துக்கொள்ளப் பங்களிப்புச் செய்கின்றனர். நமது நாட்டின் பொருளாதாரத்தை குறித்த ஓர் இனம் மட்டுமே வளர்ச்சியடையச் செய்ய முடியாது. அதற்காக எல்லா இனத்தாரும் ஒன்றிணைய வேண்டும். இவ்வாறு இருக்கும் போது முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணிப்போம் எனும் கோஷத்தின் மூலம் இவர்கள் நாடுவது என்னவென்று புரியவில்லை. பொருளியலைப் பற்றிய விளக்கமில்லாத சிலர் இத்தகைய கோஷங்களுக்குப் பின்னாலிருப்பது தெளிவாகிறது. இலங்கை முஸ்லிம்களின் வர்த்தகத்தைப் புறக்கணிப்போமெனக் கோஷமிடும் சிங்களவர்கள் பலரும் முஸ்லிம்களின் பணத்தில் ஆசைகொண்டு அரபு நாடுகளில் தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். சிங்களவர்களின் அனேகமான உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதி வியாபாரம் அதிகமாக முஸ்லிம் வர்த்தகர்கள் ஊடாகவே நடக்கின்றன. இறக்குமதித் துறையிலும் முஸ்லிம்கள் உள்ளனர். வர்த்தகத்துறையானது ஒரு சக்கரம் போன்று செயற்படுகிறது. அது பல்வேறு உப கூறுகளின் ஒன்றிணைந்த படிமுறைச் செயற்பாடாகும். அந்த உப கூறுகள் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் என்று பிரிவு பிரிவாக இல்லாததோடு அவர்களுள் ஒவ்வொருவரும். தேர்ச்சியுள்ள ஒவ்வொரு துறைகளில் வெற்றிகரமாகச் செயற்படுகின்றனர்.
வர்த்தகத் துறையின் யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாத ஒரு சிலரின் முட்டாள்தனமான – முகத்தோடு கோபித்துக்கொண்டு மூக்கை அறுத்துக் கொள்வதைப் போன்ற – செயற்பாடுகளிலிருந்து விடுபட்டு, எல்லா விடயங்களையும் யதார்த்தமாகச் சிந்தித்துச் செயற்படுவதுதான் புத்திசாலிகளின் தன்மையாகும். ஒரு சமூகமும் நாடும் முன்னேற்றமடைய எவ்வளவு அதிகமான மக்கள் இருந்தாலும் போதுமானதல்ல, அவர்கள் புத்திசாலிகளாகவும் இருக்க வேண்டும். புத்திசாலி என்பவன், தான் ஏற்கனவே விட்டுள்ள தவறுகளைச் சீர்படுத்திக் கொள்பவனும் சீர்படுத்திக் கொண்டவற்றை நிலைத்து நிற்கும் விதமாகத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்பவனும் ஆவான். நமது நாட்டுக்குப் புத்திசாலிகளே தேவைப் படுகின்றனர். எனவே புத்திஜீவிகளாவோம்.
நன்றி: தினமின