ஜம்இய்யத்துல் உலமா சபை மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்குக
பொய் எனில் ஞானசார தேரர் மீது நடவடிக்கை எடுக்குக : மு.உ.அ
பொதுபல சேனா அமைப்பு கண்டியில் நடாத்திய மாநாட்டில் ஞானசார தேரர் உலமா சபையை பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புபட்ட ஒரு சபை என்று தெரிவித்திருக்கிறார். ஞானசார தேரரின் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடாத்துங்கள்.
உலமா சபை பயங்கரவாத அமைப்புடன் தொடர்புபட்டிருந்தால் சம்பந்தப்பட்டவர்களை கைதுசெய்யுங்கள். இல்லையேல் பொய் குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் ஞானசார தேரரை கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்துங்கள் என்று முஸ்லிம் உரிகைளுக்கான அமைப்பு குற்றவியல் விசாரணைப் பிரிவின் பணிப்பாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பின் தலைவர் ஐ.என்.எம். மிப்லால் தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் குற்றவியல் விசாரணைப் பிரிவின் பணிப்பாளரிடம் கோரிக்கைகள் அடங்கிய கடிதமொன்றினை கையளித்தனர். அக்கடிதத்திலே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஞானசார தேரர் கண்டி மாநாட்டில் ஆற்றிய உரையின் பதிவுகள் அடங்கிய இறுவெட்டும் குற்றவியல் விசாரணைப் பிரிவிடம் கையளிக்கப்பட்டது.
கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘ஞானசார தேரர் தனது உரையில் முஸ்லிம் சமூகத்தின் மீதே பல பொய் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். முஸ்லிம்களையும் உலமா சபையையும் அவதூறாகப் பேசியுள்ளார். அவரது உரை தொடர்பில் அவரை விசாரணைக்குட்படுத்தவும்.
ஞானசார தேரர் மற்றும் அத்துரலிய ரதன தேரர் இந்நாட்டுக்கு செய்த சேவைகளை விட உலமா சபை இந்நாட்டுக்கும் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் பாரிய சேவைகளை செய்துள்ளது’’ எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
vidivelli