அவுஸ்திரேலியாவில் தீவிரவாத குற்றச்சாட்டுக்குள்ளாகி கைது செய்யப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்ட இலங்கையரான கமர் நிசாம்தீன், அவுஸ்திரேலிய ஊடகங்களுக்கும் பொலிசாருக்கும் எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார்.
கமர் நிஸாம்தீனை தீவிரவாதியாக சித்திரித்து பொய்யான செய்திகளை வெளியிட்டமைக்கு எதிராகவே அவுஸ்திரேலியாவைத் தளமாகக் கொண்டியங்கும் சில ஊடகங்களுக்கு எதிராக இவ்வாறு வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக கமர் நிஸாம்தீனின் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
”சிட்னியிலிருந்து வெளியாகும் டெய்லி டெலிகிராப் உட்பட இரண்டு ஊடகங்களுக்கு எதிராக மான நஷ்டஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்ய நாம் தீர்மானித்துள்ளோம். அத்துடன் சிட்னி பொலிசாருக்கு எதிராகவும் சிவில் வழக்கொன்றைத் தாக்கல் செய்யவுள்ளோம். இதற்கான ஆவணங்களை அவுஸ்திரேலியாவிலுள்ள எமது சட்டத்தரணிகள் தயாரித்து வருகின்றனர்.” என இலங்கையிலுள்ள கமர் நிஸாம்தீனின் சட்டத்தரணியான பர்மான் காஸிம் தெரிவித்துள்ளார்.
கமர் நிஸாம்தீன் சகல குற்றச்சாட்டுக்களிலுமிருந்தும் முறையாக விடுவிக்கப்பட்டுள்ள போதிலும், இது தொடர்பில் சிட்னி பொலிசார் இதுவரை வருத்தம் தெரிவிக்கவோ மன்னிப்புக் கோரவோ முன்வரவில்லை. இந் நிலையிலேயே சிட்னி பொலிஸாருக்கு எதிராகவும் கமர் நிஸாம்தீன் தரப்பு சிவில் வழக்குத் தாக்கல் செய்யத் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli