உலமா சபையின் புதிய நிர்வாகத் தெரிவில் துறைசார் நிபுணர்கள் உள்வாங்கப்பட வேண்டும்
சிவில் சமூகம் சார்பில் அஷ்ஷெய்க் அன்சார் மௌலானா கோரிக்கை
எதிர்வரும் ஜூலை 13 இல் இடம்பெறவுள்ள அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் புதிய நிர்வாகத் தெரிவில் சமகால இலங்கை முஸ்லிம்களை அசாதாரண சூழ்நிலைகளில் வினைத்திறனோடு வழிநடாத்தக்கூடிய உலமாக்கள் குழுவுடன் நாடளாவிய ரீதியில் துறைசார் நிபுணர்களும் இணைத்துக் கொள்ளப்படும் வகையில் புதிய நிர்வாகத் தெரிவு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென சிவில் சமூகம் சார்பில் அறிக்கையொன்றை விடுத்துள்ள அஷ்ஷெய்க் எப்.எம்.எஸ்.ஏ. அன்சார் மௌலானா தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஏப்ரல் 21 ஈஸ்டர் தாக்குதலின்பின் இலங்கைவாழ் முஸ்லிம் சமூகத்தை மீளச் சிறப்பாகக் கட்டியெழுப்பும் பணியை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கையிலெடுத்திருந்தாலும், அது தூக்க முடியாத ஒரு பெருஞ்சுமையை சுமக்க முயற்சிக்கிறது. “தனிமரம் தோப்பாகாது” என்ற வகையில் தனியே உலமா சபையால் மாத்திரம் இலங்கைச் சமூகங்களுக்கு உரிய தேசிய பங்களிப்புக்களை வழங்க முடியாது. அது ஒரு “தேசிய அங்கீகாரத்தையும் பெறவும் முடியாது” என்பதால் நாம் அனைவரும் இப்போது சமயத் தலைவர்களுக்கு அப்பாலான வெளிச் சிவில் சமூகத்தின் பங்களிப்பைப் பெற்றுக் கொண்டு நல்லதொரு தேசிய மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான தீவிர முயற்சியில் சிவில் சமூகம் இறங்க வேண்டியுள்ளது.
இந்த வகையில் முஸ்லிம் சமூகத்திலுள்ள பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், பிரபல கல்வியியலாளர்கள், சட்டத்தரணிகள், மருத்துவர்கள், வர்த்தகர்கள், மஸ்ஜிதுகளின் நம்பிக்கையாளர்கள், சமூகப் பற்றாளர்கள் ஆகியோரை நாடளாவிய ரீதியில் இனங்கண்டு இணைத்துக் கொள்ள வேண்டிய தார்மிகப் பொறுப்பு அகில இலங்கை ஜம்இயதுல் உலமாவுக்கு இருப்பதாக முஸ்லிம் சிவில் சமூகம் கருதுகின்றது.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் கீழ் செயற்படும் உப குழுக்களான கல்விப் பிரிவு, சமூக சேவைப் பிரிவு, அரசியல் பிரிவு, இன நல்லுறவுப் பிரிவு போன்ற 13 உப குழுக்களில் பொருத்தமானவற்றுக்கு மேற்படி துறைசார் நிபுணர்கள் உள்வாங்கப்பட உலமா சபையின் யாப்பு அனுமதி அளிக்கும் என நாம் நம்புகின்றோம். அத்தோடு மேற்படி உப குழுக்களின் வலுவூட்டலுக்காகவும், செயற்றிறன் மிக்க சேவைக்காகவும் தனி ஒரு தலைமை செயற்படாமல் “கூட்டுத் தலைமைத்துவம்” உருவாக்கப்படும் ஒரு விஷேட பொறிமுறையை எதிர்வரும் 13 ஆம் திகதி நடைபெறும் நிர்வாக சபை புதிய தெரிவில் கவனத்தில் கொள்ளுமாறு சிவில் சமூகப் பிரதிநிதிகள் வேண்டுகோள்விடுக் கின்றனர்’ என்றார்.
vidivelli