எமது நாட்டின் ஹஜ் ஏற்பாடுகளும், ஹஜ் தொடர்பான விடயங்களும் ஒரு சட்ட வரம்புக்குள் கொண்டுவரப்பட வேண்டும் எனும் கோரிக்கைகள் பல வருடங்களாக முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந் நிலையில் இதற்கான ஏற்பாடுகளை முஸ்லிம் சமய விவகார அமைச்சு, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் அரச ஹஜ் குழு என்பன முன்னெடுத்திருந்தன. ஹஜ் விவகாரத்துக்கென தனியான சட்டமொன்றினை இயற்றி பாராளுமன்றில் அங்கீகரித்துக் கொள்வதற்கு அமைச்சரவையும் அங்கீகாரம் வழங்கியிருந்தது.
ஹஜ்ஜுக்கான சட்ட வரைபொன்று அரச ஹஜ் குழுவினால் தயாரிக்கப்பட்டு தற்போது அந்த வரைபு அமைச்சர் ஹலீம் மற்றும் அமைச்சின் செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. எனினும் ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து ஹஜ் விவகாரம் பின்தள்ளப்பட்டு வேறுபல விடயங்களுக்கு முன்னுரிமையளிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இருந்தபோதிலும் ஹஜ் ஏற்பாடுகள் விவகாரத்தையும் சட்ட வரம்புக்குள் கொண்டுவர வேண்டியதும காலத்தின் தேவையாகும்.
எமது நாட்டின் ஹஜ் ஏற்பாடுகளின் போது கடந்த காலங்களில் பாரிய சவால்கள் ஏற்பட்டமை அனைவரும் அறிந்தவிடயமே. இலங்கைக்கு குறிப்பிட்டளவு ஹஜ் கோட்டா கிடைப்பதால் அக்கோட்டாவின் எண்ணிக்கையை அதிகளவில் பகிர்ந்து கொள்வதற்கு ஹஜ் முகவர்கள் அமைச்சருடனும் அரச ஹஜ் குழுவினருடனும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துடனும் முரண்பட்டுக்கொண்டனர். இதற்காக நீதிமன்றப் படிகளிலும் ஏறினார்கள். இவ்வருடமும் மேலதிகமாக 500 கோட்ட கிடைக்கப் பெறும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. எனினும் குறித்த கோட்டாக்கள் என்ன அடிப்படையில், யாருக்கு விநியோகிக்கப்படும் எனும் கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
எனவேதான் இவ்வாறான சந்தேக நிலைமையினைத் தவிர்ப்பதற்கும் ஹஜ் யாத்திரிகர்களின் நலன்களைக் கருதியுமே ஹஜ் சட்டமூலமொன்றின் தேவை உணரப்படுகிறது.
அந்த வகையில் அரச ஹஜ் குழுவினரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்ட வரைபில் அடங்கியுள்ள விடயங்களை மீளாய்வு செய்து தேவையான விடயங்களை உள்வாங்கிக் கொள்வதற்காக சில பெப்ரவரி மாதம் கொழும்பில் மாநாடொன்று நடத்தப்பட்டது. ஹஜ் சட்டவரைபினை மீளாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவே இம்மாநாட்டினை ஏற்பாடு செய்திருந்தது. இதில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை, தேசிய சூரா சபை, ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில், வை.எம்.எம்.ஏ, இஸ்லாமிய இயக்கங்கள், தரீக்காக்கள், ஹஜ் முகவர் சங்கங்களின் பிரதிநிதிகள், அரச ஹஜ் குழுவின் உறுப்பினர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
ஹஜ் சட்ட வரைபில் உள்ளடங்கியுள்ள விடயங்கள் தொடர்பில் பல்வேறு கருத்துகள் வெளியிடப்பட்டன. அரச ஹஜ் குழு உறுப்பினர்களின் நியமனம் அமைச்சரினால் வழங்கப்படும் என்று வரைபில் தெரிவிக்கப்பட்டிருப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப் பட்டது. ஹஜ் குழு சுயாதீனமாகவே இயங்கவேண்டும். அமைச்சரினால் அந்நியமனம் வழங்கப்படக்கூடாது என எதிர்ப்பு வெளியிடப்பட்டது.
ஹஜ் கணக்கில் வைப்பிலிடப்படும் பணம் ஏனைய தேவைகளுக்குப் பயன்படுத்தப்படுவதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. கடத்தல் நடவடிக்கைளிலும் ஊழல்களிலும் ஈடுபடும் ஹஜ் முகவர்களின் அனுமதிப்பத்திரம் ரத்துச் செய்யப்பட்டு அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் ஹஜ் சட்ட வரைபில் பல திருத்தங்களைச் செய்ய வேண்டும் என்று ஹஜ் முகவர்கள் சங்கங்கள் வலியுறுத்தின.
அந்த வகையில் சகல தரப்பினதும் ஆலோசனைகள் மற்றும் கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு ஹஜ் சட்டவரைபு பூரணப்படுத்தப்பட்டு நிறைவேற்றிக் கொள்ளப்பட வேண்டியது அவசியமாகும்.
ஏற்கனவே ஹலால் விவகாரத்தை முறையாக கையாளாததன் காரணமாக தேவையற்ற விமர்சனங்களைச் சந்திக்க வேண்டி வந்தது. அதேபோன்றதொரு நிலை ஹஜ் ஏற்பாடுகள் விடயத்திலும் வந்துவிடக் கூடாது. இனவாதிகள் தேவையற்ற விமர்சனங்களை முன்வைப்பதற்கு முன்னராக ஹஜ் விவகாரத்தை ஒழுங்குக்குள் கொண்டுவருவதே புத்திசாலித்தனமானதாகும். சில வருடங்களுக்கு முன்னர் ஹஜ் விவகாரத்தில் பொது பல சேனாவின் தயவை நாடிச் சென்ற சில முகவர்கள், இம்முறையும் அவ்வாறான காட்டிக் கொடுப்புகளைச் செய்யமாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை.
எனவேதான் ஹஜ் சட்டமூலம் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.
vidivelli