சவூதி அரேபியாவில் பணிபுரியும் இலங்கையர்கள் வாகன விபத்துகளில் மற்றும் தொழில் புரியும் இடங்களில் விபத்து சம்பவங்களில் உயிர் துறந்தால் அவர்களது குடும்பத்தவர்கள் விரைவில் உரிய நஷ்ட ஈடுகளைப் பெற்றுக்கொள்ளும் வகையில் அந்நாட்டின் சட்ட நிறுவனம் ஒன்றுடன் இலங்கை வெளிவிவகார அமைச்சு உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டுள்ளது.
இந்த உடன்படிக்கையின்படி திடீர் வாகன விபத்துகளில் மற்றும் வேலைத் தளங்களில் பணிபுரியும் போது மூன்றாம் தரப்புகளின் கவனயீனத்தால் ஏற்படும் விபத்துக்களில் எவரும் உயிர் துறந்தால் அவர்களின் பராமரிப்பின் கீழ் இருக்கும் குடும்பத்தவர்களுக்கு நஷ்ட ஈடு கோரி இடம்பெறும் வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துவதற்கு இயலுமாக இருக்கும் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், சவூதி அரேபியாவில் விசாரிக்கப்படும் கொலை வழக்குகளில் இரத்த நஷ்டஈடுகள் வழங்கப்படும் நிலைமை இலங்கையர்களுக்கு ஏற்பட்டால் அவ்வாறான வழக்குகளை துரிதப்படுத்துவதற்கும் இந்த உடன்படிக்கை உதவிபுரிவதாக அமையும்.
இந்த உடன்படிக்கையின் கீழ் பாதிக்கப்படும் இலங்கையர்கள் தொடர்பிலான வழக்குகளின் தாமதத்தினை தவிர்க்க முடிவதுடன் நீதியை விரைவில் பெற்றுக்கொள்ளக் கூடியதாகவும் இருக்கும்.
இந்த உடன்படிக்கையில் இலங்கையின் சார்பில் ஜித்தாவில் இலங்கை கொன்சிபுலர் நாயகம் அப்துல் வாஹிட் அப்துல் சலாமும், சவூதி அரேபிய சட்ட நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவரும் கையொப்பமிட்டனர்.
vidivelli