முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான உண்மையற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதற்காக பொதுபல சேனா அமைப்பு எதிர்வரும் 07 ஆந் திகதி ஞாயிற்றுக்கிழமை ‘சிவ்ஹெல மஹா சமுலுவ’ என்ற தொனிப்பொருளில் மகாநாடு ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளதால் சமூகத்தின் பாதுகாப்பிற்காகவும் நாட்டின் சமாதானத்திற்காகவும் முஸ்லிம்கள் இன்று வியாழக்கிழமை முதல் எதிர்வரும் 07 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை நோன்புநோற்று பிரார்த்தனையில் ஈடுபடுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாசபை கண்டி மாவட்டக்கிளை கோரிக்கை விடுத்துள்ளது.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாசபை கண்டிக்கிளையின் பொதுச்செயலாளர் அஷ்ஷெய்க் ஏ.எல்.அப்துல் கப்பார் விடுத்துள்ள அறிக்கையொன்றிலேயே இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ள தாவது; ‘ எதிர்வரும் 07ஆந்திகதி கண்டி நகரில் ‘சிவ்ஹெல மஹா சமுலுவ’ என்ற தொனிப்பொருளில் மகாநாடு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அக்கூட்டத்தில் முஸ்லிம் சமூகத்திற்கெதிரான உண்மையற்ற பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட வுள்ளதாகவும் எமது உரிமைகளைப் பெருமளவில் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாவும் அறியமுடிகிறது.
இவ்வாறான திட்டங்களை முறியடிப்பதற்கு அல்லாஹ்வின் உதவியைத்தவிர வேறுஎதுவும் கிடையாது. எனவே நாம் அனைவரும் அதிகமாக துஆ, இஸ்திஃபார் போன்ற அமல்களில் ஈடுபடுவதுடன் எமக்கு வரக்கூடிய சோதனைகளைத் தடுப்பதற்கு ஸதகாக்கள் வழங்குமாறும் இன்று முதல் 07 ஆந் திகதி வரை நோன்பு நோற்று சமூகத்தின் பாதுகாப்பிற்காகவும், நாட்டின் சமாதானத்திற்காகவும் பிரார்த்தனைகளில் ஈடுபடுமாறும் வேண்டுகிறோம்.
அத்தோடு 07 ஆந் திகதி அத்தியாவசிய தேவையன்றி கண்டி நகருக்கு வருகை தருவதையும் கண்டி நகர் ஊடாக பயணம் மேற்கொள்வதையும் தவிர்க்குமாறும் வேண்டுகிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
vidivelli