முஸ்லிம் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சரொருவரும் பதவி துறந்து இன்றுடன் ஒருமாதம் நிறைவடைகின்றது. முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் சமகால பிரச்சினையுடன் தொடர்புடைய 10 அம்சக் கோரிக்கை முன்வைத்து தாம் பதவி துறப்பதாகக் கூறியிருந்தநிலையில், பிரச்சினைகளுக்கு இதுவரை முழுமையான தீர்வுகள் எட்டப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ரவூப் ஹக்கீம், கபீர் ஹாசிம், ரிஷாத் பதியுதீன் மற்றும் எம்.எச்.ஏ. ஹலீம் ஆகியோர் அமைச்சரவை அந்தஸ்துள்ள பதவியிலிருந்தும் எச்.எம்.எம்.ஹரீஸ், அலிசாஹிர் மௌலானா, அமீர் அலி மற்றும் பைஸல் காஸிம் ஆகியோர் இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்தும் அப்துல்லாஹ் மஹ்ரூப் பிரதியமைச்சர் பதவியமைச்சர் பதவியிலிருந்தும் விலகியிருந்தனர். எனினும் கபீர் ஹாசிம் மற்றும் எம்.எச்.ஏ. ஹலீம் ஆகியோர் பின்னர் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டனர்.
பதவி விலகலின்போது 10 அம்சக் கோரிக்கையை அரசாங்கத்திடம் முன்வைத்து பதவிதுறந்ததாக குறிப்பிடப்பட்டது.
ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல்களையடுத்து அவசரகால சட்டத்தின் கீழ் சிறு குற்றங்களுக்காக முஸ்லிம்கள் பலர் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த அப்பாவி முஸ்லிம்கள் விடுவிக்கப்பட வேண்டுமெனக் கோரப்பட்டிருந்தது. அந்தவகையில் கடந்த இரு வாரங்களாக பலர் விடுவக்கப்பட்டனர். அத்துடன் தொடர்ந்தும் விடுவிப்பு நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. இதேவேளை, அரச நிறுவனங்களில் முஸ்லிம் பெண்கள் அணியும் ஆடை தொடர்பில் சர்ச்சைகள் ஏற்படுத்தப்பட்டன. பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் வெளியிட்ட சுற்றுநிருபம் மேலும் சிக்கலை ஏற்படுத்தியிருந்த நிலையில் முஸ்லிம் எம்.பி.களின் அழுத்தம் காரணமாக குறித்த சுற்றுநிருபம் திருத்தப்பட்டு முஸ்லிம் பெண் உத்தியோகத்தர்கள் அபாயா அணிய முடியுமான வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இதுதவிர முஸ்லிம் பிரதேசங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்த விசாரணைகளில் தொடர்ந்தும் மந்த நிலைமை காணப்படுகின்றது. அத்துடன், குறித்த தாக்குதலுடன் தொடர்புபட்ட பலர் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அவசரகால சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படாமை குறிப்பிடத்தக்கது.
vidivelli