மஹிந்த ராஜபக் ஷவின் வழியில் செல்வதற்கே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முயற்சிக்கிறார். அதன் காரணமாகவே 19ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நீக்கும் தீர்மானத்துக்கு வந்துள்ளார். தொடர் முரண்பாடுகளுடன் ஜனாதிபதியுடன் ஆட்சியை முன்னெடுக்க முடியாது என்று பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தனிப்பட்ட தேவைகளுக்கேற்ப அரசியலமைப்பு திருத்தங்களை மாற்றியமைக்க முடியாது. 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நீக்குவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
அலரி மாளிகையில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்ட அவர் மேலும் கூறியதாவது,
19 ஆவது அரசியலமைப்பு திருத்தம், நாட்டில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்திய திருத்தமாகும். இதனூடாக சுயாதீன ஆணைக்குழுக்கள் உள்ளிட்ட பல்வேறுபட்ட ஜனநாயக உரிமைகளையும் பெற்றுக்கொண்டுள்ளோம். இவ்வாறிருக்கையில் இந்த அரசியலமைப்பு திருத்தத்தை நீக்குவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி இடமளிக்காது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் தற்போது மஹிந்தவின் வழியில் பயணிக்கவே முயற்சிக்கிறார். அதன் காரணமாகவே 19 ஆவது அரசியலமைப்பை நீக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டுக்கு ஜனாதிபதி வந்துள்ளார்.
ஜனாதிபதியின் தனிப்பட்ட செயற்பாடுகளுக்காக இந்த அரசியலமைப்பு திருத்தத்தை நீக்க இடமளிக்க முடியாது. கடந்த வருட இறுதியில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைத்து அரசாங்கத்துக்கு எதிராக சூழ்ச்சி செய்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி அமைத்தது முதல் மூன்று வருட காலப்பகுதிகளில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் அனைத்தும் இருதரப்பு இணக்கப்பாட்டுடனேயே முன்னெடுக்கப்பட்டு வந்தன.
ஆனால் அவர் எதிரணியுடன் இணைந்து செயற்பட ஆரம்பித்தது முதல் அரசாங்கத்துடனான முரண்பாடுகளும் அதிகரிக்க ஆரம்பித்துவிட்டன. எனவே, தொடர்ந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் ஆட்சி நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாது.
2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதாக தேர்தல் பிரசாரங்களை முன்னெடுத்திருந்தோம். ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற மைத்திரிபால சிறிசேன தனக்குரிய நிறைவேற்று அதிகாரங்களை கட்டுப்படுத்துவதற்கு பாரிய முயற்சிகளை எடுத்தார். கடந்த தேர்தல் மேடைகளில், எதிர்காலத்தில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை இருக்காது என்றும் அவர் கூறியிருந்தார்.
கடந்த 1994 ஆம் ஆண்டு முதல் நிறைவேற்று அதிகாரத்தை நீக்குவதாக கூறி ஆட்சிக்கு வந்த எந்த ஜனாதிபதியும் அதனை நீக்கவில்லை. அன்று மக்களின் தேவைகளை அறிந்தே இதுபோன்ற வாக்குறுதிகளை வழங்கினர். ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அன்று மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளுக்கு மாறாகவே செயற்படுகிறார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் தற்போதுள்ள அமைச்சரவையுடனான இந்த அரசாங்கத்தின் மீது ஜனாதிபதிக்கு விருப்பமில்லை.
அதன் காரணமாகவே கடந்த காலங்களில் அரசாங்கத்துக்கு எதிராகப் பல்வேறு கருத்துக்களை முன்வைத்து வந்தார். அதன் தொடர்ச்சியாக 19 ஆவது அரசியலமைப்பை நீக்க வேண்டுமென்று கோரி தற்போது அரசியல் பிரசாரங்களை முன்னெடுத்து வருகிறார்.
vidivelli