மூன்றாம் தரப்புடன் இணைந்து முஸ்லிம்களை காயப்படுத்தோம்
கல்முனை விவகாரம் குறித்து ஸ்ரீதரன் எம்.பி. தெரிவிப்பு
முஸ்லிம் மக்கள் காயப்பட்டிருக்கும் நிலையில் கல்முனை பிரதேச செயலக விவகாரத்தில் மூன்றாம் தரப்பினரை இணைத்துக்கொண்டு மேலும் காயப்படுத்த விரும்பமாட்டோம். அத்துடன் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண முன்வரவேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் ஸ்ரீதரன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதகாலத்துக்கு நீடித்துக்கொள்ளும் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் உரையாற்றுகையில், ஒழுங்கு பிரச்சினை ஒன்றை முன்வைத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
ஹரீஸ் எம்.பி. தெரிவிக்கையில்,கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பாக எழுந்திருக்கும் பிரச்சினையை எல்லை நிர்ணயம் மேற்கொண்டு தீர்த்துக்கொள்ள இணக்கப்பாடு எட்டப்பட்ட நிலையில், அங்கு பெரும்பான்மை இன மதகுருமார்களை இணைத்துக்கொண்டு உண்ணாவிரதமிருந்து அதனை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
இது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். சர்வதேச நாடுகள் மற்றும் இந்தியாவின் வற்புறுத்தலினால் அன்று இலங்கை – இந்திய ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது.
அதனால்தான் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டன. அதனால் பல ஆண்டுகாலம் முஸ்லிம் மக்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். பின்னர் வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நீதிமன்ற நடவடிக்கையில் வடக்கு கிழக்கு இணைப்பு சட்டவிரோதமெனத் தீர்ப்பளிக்கப்பட்டு பிரிக்கப்பட்டது.
அன்று விடுதலைப்புலிகளின் யுத்தம் காரணமாக இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக செயற்படமுடியாத நிலையே முஸ்லிம் மக்களுக்கு இருந்தது. தற்போது கல்முனை வடக்கு பிரதேச செயலகம் விவகாரத்தை முஸ்லிம்கள் பயங்கரவாத தாக்குதலுக்கு முகம்கொடுத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையை பயன்படுத்திக்கொண்டு தெற்கில் இருக்கும் பெரும்பான்மை இன மதகுருமார்களை இணைத்துக்கொண்டு இதனை சாதித்துக்கொள்ள முயற்சிக்கின்றனர்.
இது மிகவும் வேதனைக்குரிய விடயமாகும். என்றாலும் எதிர்காலத்தில் இந்த விடயத்துக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டால் கல்முனை விவகாரமும் சட்டவிரோதம் என்ற தீர்ப்பே கிடைக்கும் என்ற நம்பிக்கை எமக்கிருக்கின்றது என்றார்.
இதன்போது குறுக்கிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் ஸ்ரீதரன் எம்.பி., வடக்கு கிழக்கு இணைப்பு விடயத்தில் விடுதலைப்புலிகளை சம்பந்தப்படுத்துவது தவறாகும். நிர்வாக விடயத்தில் அவர்கள் ஒருபோதும் சம்பந்தப்படவில்லை.
அத்துடன் கல்முனை விவகாரத்தில் தமிழ், முஸ்லிம் மக்களின் உறவு பாதிக்காதவகையில் நீங்கள் விட்டுக்கொடுப்புடன் செயற்படவேண்டும்.
அத்துடன் இந்த விவகாரத்தை நாங்கள் பகிரங்கமாக விவாதித்துக்கொள்ளாமல் இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் சுமுகமான தீர்வுக்குவரவேண்டும்.
மேலும், முஸ்லிம் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கும் இந்தக் காலத்தில் பெரும்பான்மை இனத்தவர்களை இணைத்துக்கொண்டு மேலும் காயப்படுத்த நாங்கள் விரும்பமாட்டோம்.
அந்த செயலை அனுமதிக்கவும் மாட்டோம் என்றார். இதன்போது ஹரீஸ் எம்.பி. அதற்கு பதிலளிக்கும்வகையில் தெரிவிக்கையில், மூன்றாம் சக்தி இதில் தலையிடாமல் எங்களுக்குள் இருக்கும் பிரச்சினையை நாங்கள் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ளத் தயார்.
அதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் ஐயா முன்வரவேண்டும். இதன் மூலம் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படவேண்டும் என்றார்.
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)
vidivelli