ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகளில் உயிர்க் கொலைகளுக்கு இடம் கிடையாது என்றும் எந்தக் காரணத்துக்காகவும் மரணதண்டனையை அமுல்படுத்த ஆதரவு வழங்க முடியாதென்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
அரசியலமைப்பில் மரண தண்டனை தொடர்பான சட்ட ஏற்பாடுகள் காணப்பட்டாலும் வரலாற்றில் எந்த தலைவர்களும் அதனை நடைமுறைப்படுத்தவில்லை. 2016 ஐக்கிய நாடுகள் சபை மரண தண்டனையை தடைசெய்வதற்கான யோசனையை முன்வைத்தபோது அதற்கு இலங்கையும் இணக்கம் தெரிவித்துள்ளது. அந்த யோசனைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் நானும் அன்று ஆதரவளித்திருந்தோம் எனவும் குறிப்பிட்டார்.
மொனராகலை மாவட்டத்தில் நீர் திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக் கிழமை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்றது. இந்த நீர்த்திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வை அடுத்து ஒப்பேகொட பாடசாலைக்கான புதிய கட்டிடம், தெலிவ மகா வித்தியாலத்தின் புதிய கட்டிடம், கதிர்காமம் வர்த்தக கட்டடிடம் உள்ளிட்ட இன்னும் சில கட்டிட தொகுதிகளை பிதரமர் திறந்து வைத்தார்.
மாரிஅறாவ நீர் திட்டத்தை ஆரம்பித்து வைத்ததன் பின்னர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பில் மேற்கண்டவாறு குறிப்பிட்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியதாவது;
உயிர்க் கொலைகள் ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கைகளுக்கு எதிரானவையாகும். ஆகவே மரண தண்டனைக்கு ஆதரவளிப்பதற்கு எங்களுக்கு எந்த தேவையும் கிடையாது. அரசாங்கத்தின் பிரதான கட்சியான ஐக்கிய தேசிய கட்சி , எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக் ஷ உள்ளிட்ட மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகிய கட்சிகளுக்கும் மரண தண்டனையை அமுல்படுத்துவதில் விருப்பமில்லை. இந்தப் பிரச்சினை தொடர்பாக முதலில் அமைச்சரவையுடனும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சபாநாயகர் கருஜய சூரியவிடமும் கலந்துடையாடுவதற்கு நான் எதிர்பார்க்கிறேன்.
2016 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையினால் மரண தண்டனை அமுல்படுத்துவதை தடை செய்வது தொடர்பான யோசனையொன்று முன்வைக்கப்பட்டது. இந்த யோசனைக்கு இலங்கை அரசாங்கமும் ஆதரவை வழங்கியிருந்தது. அந்த சந்தர்ப்பத்தில் நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில் மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் என்ற வகையில் நானும் கையொப்பம் இட்டிருந்தோம்.
2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17 ஆம் திகதி அந்த யோசனையை ஐக்கிய நாடுகள் சபை மீளாய்வு செய்தது. அந்த சந்தர்ப்பத்தில் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகவும் எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த
ராஜபக் ஷ பிரதமராகவும் இருந்தனர்.
மேலும் அரசியலமைப்பில் மரண தண்டனை காணப்பட்டாலும் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன அதனை நடைமுறைப்படுத்தாமலிருக்கத் தீர்மானித்தார். அந்த தீர்மானத்துக்கமைய அவருக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதிகளான ஆர். பிரேமதாச, டீ.பீ.விஜேதுங்க, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக் ஷ ஆகியோரும் மரண தண்டனையை அமுல்படுத்தவில்லை.
வரலாற்றில் ஆட்சிக்கு வந்த எந்த அரசாங்கமும் முன்னெடுக்காத அபிவிருத்திப் பணிகளை மொனராகலை மாவட்டம் உள்ளிட்ட நாடு பூராகவும் இந்த அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது. பொறுப்பான அமைச்சுக்கள் அந்த அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்து வருகின்றன. மொனராகலை மாவட்டத்துக்கு மாத்திரம் கடந்த நான்கு வருடங்களில் உறுதிப்பத்திரங்கள் இல்லாத 20 ஆயிரம் வரையிலான காணிகளுக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. எதிர்வரும் காலத்தில் எஞ்சியுள்ள காணிகளுக்கும் உறுதிப்பத்திரங்களை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்போம்.
vidivelli