டாக்டர் ஷாபிக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை என்பதை நேற்றைய தினம் குருநாகல் நீதிமன்றில் இடம்பெற்ற விசாரணையின்போது குற்றப்புலனாய்வுப் பிரிவினர் உறுதிசெய்துள்ளனர்.
இலங்கை வரலாற்றில் அதிக பக்கங்களை கொண்ட ‘பீ’ அறிக்கை நேற்று குற்றப் புலனாய்வு பிரிவினால் குருநாகல் நீதிவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதன்போதே டாக்டர் செய்கு ஷியாப்தீன் மொஹமட் ஷாபி தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பில் 210 பக்கங்களை கொண்ட இந்த பீ அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. குற்றவியல் விசாரணை ஒன்று தொடர்பில் நீதிவான் நீதிமன்றில் (ஒரே தடவையில்) சமர்ப்பிக்கப்பட்ட அதிக பக்கங்களை கொண்ட பீ அறிக்கையாக இது கருதப்படுகின்றது.
சி.ஐ.டி யின் சமூக கொள்ளை தொடர்பிலான விசாரணையறை அதிகாரிகள் இந்த அறிக்கையை சமர்ப்பித்தனர். அதில் வைத்தியர் ஷாபி விவகாரத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ள சாட்சிகளின் சுருக்கமும் , விசாரணை அதிகாரிகளின் அவதானிப்புகளும் உள்ளடக்கப்பட்டிருந்தன.
இதற்கமைய அவர் மீது பிரதானமாகச் சுமத்தப்பட்ட 4000-8000 பெண்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்தார் எனும் குற்றச்சாட்டு அப்பட்டமான பொய் என்பதை பொலிசாரே விசாரணை அறிக்கை மூலமாக நிரூபித்துள்ளனர். அதேபோன்று பயங்கரவாதிகளுடனோ எந்தவொரு தௌஹீத் ஜமாஅத் அமைப்புகளுடனோ எவ்வித தொடர்புகள் இல்லை என்பதையும் பொலிசார் மன்றுக்குத் தெரியப்படுத்தினர்.
உலக வரலாற்றிலேயே ஒரு வைத்தியருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட மிகவும் முட்டாள்தனமான குற்றச்சாட்டு இதுவேயாகும். பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட இந்தக் குற்றச்சாட்டை, இதனுடன் தொடர்புடைய வதந்திகளை முன்னின்று பரப்பியோரும் வைத்தியர்கள்தான் என்பதே இங்கு கவலைக்குரியதாகும்.
மேலும் இந்த பொய்யான குற்றச்சாட்டைக் கட்டியெழுப்பி அதனை ஊடகம் ஒன்றுக்கு வழங்கியவர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவரே என்பதும் அதைவிட கவலையான தகவலாகும். அந்த வகையில் மிகப் பாரதூரமான இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்து முழு நாட்டையுமே தவறாக வழிநடாத்திய வைத்தியர்கள் பொலிசார் மற்றும் ஊடகங்கள் என்பவற்றுக்கு எதிராக நீதித்துறை என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதே நம்முன் உள்ள கேள்வியாகும்.
இதேபோன்றுதான் டாக்டர் ஷாபிக்கு எதிராக செய்தி வெளியிட்ட அதே ஊடகம் தான் கடந்த வாரம் முஸ்லிம்களால் நடாத்தப்பட்டு வந்த இலவச உணவு வழங்கும் திட்டம் குறித்தும் பச்சைப் பொய்யான தகவலை வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக அப்பாவிப் பொது மக்கள், அதிலும் அதிகமான சிங்கள ஏழை மக்களே பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 7 வருடங்களாக பாரிய பொருளாதார செலவுக்கு மத்தியில் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. மூன்று வைத்தியசாலைகளில் தினமும் சுமார் 1250 பேர் வீதம் வருடாந்தம் 5 இலட்சம் மக்கள் இதனால் நன்மையடைந்தனர். ‘ஜனபோஷ பவுண்டேசன்’ தினமும் சுமார் ஒன்றரை இலட்சம் ரூபாவை இதற்காக செலவிட்டது. ஆனால் இன்று இனவாத கருத்தினால் இந்தத் திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது. தான் அவ்வாறான கருத்தைக் கூறவில்லை என சம்பந்தப்பட்ட அரசியல்வாதி மறுக்கிறார். இந் நிலையில் இது தொடர்பில் விசாரணை நடத்தி உண்மையைக் கண்டறியப் போவது யார்?
மறுபுறம் தங்கொட்டு வாராந்த சந்தையில் முஸ்லிம் வர்த்தகர்கள் வியாபாரத்தில் ஈடுபட வென்னப்புவ பிரதேச சபைத் தலைவர் தடை விதித்துள்ளார். அடிப்படை உரிமையை மீறுகின்ற இந்தத் தீர்மானத்தை எடுப்பதற்கான அதிகாரத்தையும் துணிச்சலையும் அவருக்கு வழங்கியது யார்?
இப்படியே நாட்டில் நாளுக்கு நாள் இனவாத கருத்துக்களைப் பரப்பி, தீர்மானங்களை நிறைவேற்றி சிறந்த கல்விமான்களையும் தனவந்தர்களையும் வர்த்தகர்களையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதன் மூலம் இந்த நாடு எதை அடையப் போகிறது?
ஆக, இந்த இனவாத நகர்வுகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க ஜனாதிபதி , பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் முன்வர வேண்டும். தமது தேர்தல் நலன்களை அடைந்து கொள்வதற்காக வாக்களிப்பு வரை இந்த இனவாத அலையை விட்டு வைப்பது நாட்டைக் குட்டிச்சுவராக்கவே வழிவகுக்கும். இந்த நாட்டை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்ல விரும்பும் ஒரு தூரநோக்குள்ள தலைவர் ஒருபோதும் இதனை அனுமதிக்கமாட்டார். சம்பந்தப்பட்டவர்கள் தமது கடமையை உணர்ந்து செயற்படுவார்கள் என நம்புகிறோம்.
vidivelli