ஷாபிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை

மன்றுக்கு அறிவித்தது குற்றப்புலனாய்வுப் பிரிவு

0 783

குரு­நாகல் போதனா வைத்­தி­ய­சா­லையின் பிர­சவ மற்றும் மகப்­பேற்று பிரிவின் வைத்­தியர் சேகு ஷியாப்தீன் மொஹமட் ஷாபிக்கு எதி­ராக முன்­வைக்­கப்­பட்­டுள்ள கருத்­தடை விவ­காரம் தொடர்­பி­லான குற்­றச்­சாட்டு குறித்து இது வரை சாட்­சிகள் வெளிப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை என்று சாட்சி சுருக்­கங்கள் அடங்­கிய அறிக்கை ஊடாக குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரிவு நேற்று குற்­ற­வியல் நீதீ­மன்ற நீதி­ப­திக்கு அறி­வித்­தது.

அத்­துடன் வைத்­தியர் ஷாபிக்கு எதி­ராக முன்­வைக்­கப்­பட்ட பயங்­க­ர­வாத, அடிப்­ப­டை­வாத அமைப்­புக்­க­ளுடன் தொடர்­பு­களைப் பேணி­ய­தாக தெரி­விக்­கப்­பட்ட விட­யமும் உண்­மைக்குப் புறம்­பா­னது என விசா­ர­ணை­களில் உறு­தி­யா­கி­யுள்­ள­தாக சீ.ஐ.டி நீதி­மன்­றுக்கு அறி­வித்­தது.

வரு­மா­னத்தை மீறி சொத்து சேர்த்­தமை தொடர்­பிலும் விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரும் நிலையில் அரச சார்­பற்ற நிறு­வ­ன­மொன்றின் ஊடாக நிதி பெற்­றமை தொடர்பில் மேல­திக விசா­ர­ணை­க­ளுக்­காக இரு தனியார் வங்­கி­களில் விரி­வான அறிக்­கையை பெற்றுக் கொள்­ளவும் சி.ஐ.டி நீதி­மன்ற உத்­த­ரவை பெற்றுக் கொண்­டது.

வைத்­தியர் மொஹமட் ஷாபியின் விவ­காரம் தொடர்­பான விசா­ர­ணைகள் நேற்று குரு­நாகல் பிர­தான நீதவான் சம்பத் காரி­ய­வசம் முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு எடுத்துக் கொள்­ளப்­பட்­டது. இதன் போது வைத்­தியர் ஷாபிக்கு எதி­ரான குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் சி.ஐ.டியில் சமூக கொள்ளை தொடர்­பி­லான விசா­ர­ணைப்­பி­ரிவின் உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர் பி.எஸ்.திசே­ராவின் கீழ் அப்­பி­ரிவின் பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் நிஷாந்த சில்­வாவின் ஆலோ­ச­னைக்கு அமைய பொலிஸ் பரி­சோ­தகர் இலங்க சிங்க உள்­ளிட்ட குழு­வினர் முன்­னெ­டுக்கும் விசாh­ர­ணை­களில் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள சாட்­சி­யங்­களின் சுருக்கம் பி அறிக்­கை­யாக மன்­றுக்கு சமர்ப்­பிக்­கப்­பட்­டது.

சி.ஐ.டி பொலிஸ் அத்­தி­யட்சகர் அசங்க தலை­மையில் உதவி பொலிஸ் அத்­தி­யட்சகர் திசேரா, பொலிஸ் பரி­சோ­தகர் இலங்க சிங்க, சாஜன்
ராஜ­பக் ஷ, கானஸ்­டபில் சில்வா ஆகிய குழு­வினர் மன்றில் நேரில் ஆஜ­ராகி இவ்­வ­றிக்­கையை சமர்­பித்து விசா­ர­ணை­களை விளக்­கினர்.

வைத்­தியர் ஷாபி தற்­போது பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் சி.ஐ.டியில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள நிலையில் நேற்று அவர் மன்றில் ஆஜர் செய்­யப்­ப­ட­வில்லை. எனினும் அவர் சார்பில் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி சிராஸ் நூர்­தீனின் கீழ் சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்லா, பிரே­ம­ரத்ன தென்­னகோன் , எரந்த குண­வர்­தன , சைனாஸ் மொஹமட், சிபான் மஹ்ரூப் உள்­ளிட்ட சட்­டத்­த­ர­ணிகள் குழு ஆஜ­ரா­னது.

சட்ட விரோத கருத்­தடை கார­ண­மாக பாதிக்­கப்­பட்­ட­தாகக் கூறப்­படும் தாய்மார் சார்பில் சட்­டத்­த­ரணி டெனி பெர்­னான்டோ , சானக அபே­விக்­கி­ரம , பிரி­யங்க டயஸ் நிலூசி உள்­ளிட்ட குழு­வினர் ஆஜ­ரா­கினர். பிற்­பகல் 12.15 கடந்து ஆரம்­பிக்­கப்­பட்ட விசா­ர­ணை­களில் சி.ஐ.டி பொலிஸ் அத்­தி­யட்சகர் அசங்க , உதவி பொலிஸ் அத்­தி­யட்சகர் பி.எஸ்.திசேரா ஆகியோர் கருத்­துக்­களை முன்­வைத்­தனர். கடந்த மே 24 ஆம் திகதி குறித்த பொலிஸ் அத்­தி­யட்சகர் கீழான விஷேட விசா­ரணை குழுவால் வைத்­தியர் ஷாபி கைது செய்­யப்­பட்ட நிலையில் மே 24 ஆம் திகதி பதில் பொலிஸ் மா அதிபர் விடுத்த உத்­த­ர­விற்­க­மைய அது தொடர்­பி­லான மேல­திக விசா­ர­ணைகள் சி.ஐ.டியால் பொறுப்­பேற்­கப்­பட்­ட­தாக பொலிஸ் அத்­தி­யட்சகர் சட்­டத்­த­ரணி அசங்க மன்­றுக்கு அறி­வித்தார். இதன்­படி இது வரை 500 க்கும் அதி­க­மான வாக்கு மூலங்­களை பதிவு செய்­துள்­ள­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.

இத­னை­ய­டுத்து விசா­ரணை மேற்­பார்வை அதி­காரி என்ற ரீதியில் உதவி பொலிஸ் அத்­தி­யட்சகர் பி.எஸ்.திசேரா விசா­ர­ணை­களில் வெளிப்­ப­டுத்­தப்­பட்ட விட­யங்­களை நீத­வா­னுக்கு விளக்­கினார். சுமார் இரண்­டரை மணித்­தி­யாலம் விளக்கம் நீடித்­தது. முதலில் கடந்த மே 23 ஆம் திகதி திவ­யின தேசிய பத்­தி­ரி­கையில் வெளி­யி­டப்­பட்ட பிர­தான தலைப்புச் செய்­தியை அடிப்­ப­டை­யாகக் கொண்டு அந்த செய்தி தொடர்பில் பதில் பொலிஸ் மா அதி­பரின் உத்­த­ர­வுக்கு அமைய விசா­ர­ணை­களை ஆரம்­பித்­த­தா­கவும் அதன் பின்னர் குரு­நாகல் பொலிஸார் வைத்­தியர் ஷாபியை கைது செய்த நிலையில் அவ­ரையும் பொலிஸ் மா அதி­பரின் உத்­த­ர­வுக்­க­மைய அவ­ரையும் பொறுப்­பேற்று மேல­திக விசா­ர­ணை­க­ளையும் முன்­னெ­டுப்­ப­தாக திசேரா சுட்­டிக்­காட்­டினார்.
இதன் போது உதவி பொலிஸ் அத்­தி­யட்சகர் திசேரா முன்­வைத்த விட­யங்கள் வரு­மாறு:

குருநால் பொலி­ஸாரால் வைத்­தியர் ஷாபி பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தின் 6 (1) ஆம் பிரிவின் கீழ் கைது செய்­யப்­பட்­டி­ருந்தார். அப்­பி­ரிவின் கீழ் அவரை 72 மணி நேரம் தடுத்து வைத்து விசா­ரிக்க அப்­போது குரு­நாகல் பொலிஸ் அத்­தி­யட்சகர் அனு­மதி பெற்­றி­ருந்தார். அப்­பின்­ன­ணியின் கீழ் நாம் அவரைப் பொறுப்­பேற்றோம். அதன்­படி அவரை விசா­ரிக்க பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தின் 9(1) ஆம் பிரிவின் கீழ் பாது­காப்பு செய­லா­ள­ரிடம் 90 நாள் தடுப்­புக்­காவல் உத்­த­ரவை பெற்றுக் கொண்டோம். இது தொடர்பில் குறு­கிய காலத்தில் விரி­வான விசா­ர­ணை­யி­னையும் நடத்­தி­யுள்ளோம்.

குறிப்­பாக திவ­யின பத்­தி­ரி­கையில் வெளி­யி­டப்­பட்ட சர்ச்­சைக்­கு­ரிய செய்தி தொடர்பில் அச்­செய்­தி­யினை எழு­திய ஊட­க­வி­ய­லாளர் ஹேமந்த ரந்­து­னு­வி­டமும் அத் தக­வலை வழங்­கி­ய­தாக கூறப்­பட்ட குரு­நாகல் பிரதி பொலிஸ் மா அதிபர் கித்­சிறி ஜய­லத்­தி­டமும் விசா­ர­ணைகள் நடத்­தப்­பட்­டன. இதன் போது குறித்த ஊட­க­வி­ய­லாளர், குறித்த வைத்­தி­ய­ருக்கு எதி­ரான கருத்­தடை குற்­றச்­சாட்டு தொடர்பில் தன்­னிடம் கேட்­ட­தா­கவும் அதற்கு அவ்­வா­றான ஒரு வதந்தி உலா வரு­வ­தாக, தான் பதி­ல­ளித்­த­தா­கவும் பிரதி பொலிஸ் மா அதிபர் எமக்கு வாக்­கு­மூலம் அளித்­துள்ளார். இந்­நி­லையில் ஊட­க­வி­ய­லாளர் ஹேமந்த ரந்­துனு பிரிதி பொலிஸ் மா அதிபர் தெரி­வித்த அந்த விட­யத்­தையும் பேஸ் புக் சமூக வலைத்­த­ளத்தில் உள்ள பதி­வொன்­றையும் மையப்­ப­டுத்தி அந்த செய்­தியை எழு­தி­யுள்­ளமை தெரி­ய­வந்­துள்­ளது.

அத்­துடன் கருத்­தடை விவ­காரம் தொடர்பில் சீ.ஐ.டி க்கு 615 முறைப்­பா­டுகள் கிடைக்­கப்­பெற்­றன. அதில் 468 முறைப்­பா­டுகள் திவ­யின பத்­தி­ரிகை செய்­தியை அடுத்து ஏற்­பட்ட சந்­தே­கத்தின் அடிப்­ப­டையில் வழங்­கப்­பட்­டுள்­ளன. 147 முறைப்­பா­டுகள் சிசே­ரியன் சிகிச்­சை­களின் பின்னர் குழந்தை பாக்­கியம் தடைப்­ப­டு­வதை மையப்­ப­டுத்தி அளிக்­கப்­பட்­டுள்­ளது. அத்­துடன் வைத்­தியர் சாபி செய்த சிசே­ரியன் சத்­திர சிகிச்­சை­களின் பின்னர் வைத்­தியர் சாபி நேர­டி­யாக தொடர்­பு­பட்­ட­தாக கூறி குரு­நாகல் வைத்­தி­ய­சா­லைக்கு அளிக்­கப்­பட்ட 11 விசேட முறைப்­பா­டுகள் தொடர்­பாக விசே­ட­மாக நாம் கவனம் செலுத்­தினோம்.

கருப்பை அகற்­றப்­பட்­டமை , பிள்ளை ஒன்றை சட்ட விரோ­த­மாக வேறொரு தரப்­புக்கு வழங்­கி­யமை, தனி­யாக சிசே­ரியன் சத்­திர சிகிச்சை செய்­தமை,கருப்­பைக்குள் துவாய் ஒன்றை இட்டு துடைத்­தமை, பலாத்­கா­ர­மான எல்.ஆர்.டி சிகிச்சை போன்ற 11 குற்­றச்­சாட்­டுகள் தொடர்பில் நாம் இந்த விசேட அவ­தா­னத்தை செலுத்­தினோம். இதைத் தொடர்ந்து அவ்­வந்த சத்­திர சிகிச்­சை­களின் போது தொடர்­பு­பட்ட விசேட வைத்­திய நிபு­ணர்கள் சிரேஷ்ட வைத்­தி­யர்கள், உதவி வைத்­தி­யர்கள், தாதி­யர்கள், உத­வி­யா­ளர்கள், வேறு விசேட வைத்­திய நிபு­ணர்கள் ஏரா­ள­மா­ன­வர்­களின் சாட்­சி­யங்கள் இதன்­போது பதிவு செய்­யப்­பட்­டன. அதன்­போது அவற்றில் 9 முறைப்­பா­டுகள் எவ்­வித அடிப்­ப­டையும் அற்­றவை என்­பது தெளி­வா­னது. பிள்ளை ஒன்றை சட்ட விரோ­த­மாக வேறொரு தரப்­புக்கு வழங்க முற்­பட்­டமை உள்­ளிட்ட 2 விட­யங்கள் தொடர்பில் மட்டும் விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்க முடி­யு­மான சில கார­ணிகள் முறைப்­பாட்டில் அடங்­கி­யுள்­ளன.

இதே­வேளை வைத்­தியர் சாபிக்கு எதி­ராக பயங்­க­ர­வா­திகள் மற்றும் தௌஹீத் ஜமாஅத் அமைப்­புடன் தொடர்பு உள்­ள­தாக குற்­றச்­சாட்டு முன்­வைக்­கப்­பட்­டி­ருந்து. அது தொடர்பில் நாம் விரி­வாக விசா­ரித்தோம். அவ்­வா­றான தொடர்­புகள் வைத்­தியர் சாபிக்கு உள்­ளதா என்­பது குறித்து தேசிய உள­வுத்­துறை , பயங்­க­ர­வாத புல­னாய்வு பிரிவு , முப்­படை, அதி­ர­டிப்­படை உள்­ளிட்ட பயங்­க­ர­வா­திகள் தொடர்­பாக ஆராயும் நிறு­வ­னங்­க­ளிடம் அறிக்கை கோரினோம். அவர்கள் அனை­வரும் வைத்­தியர் சாபிக்கு அவ்­வா­றான எந்த தொடர்பும் இல்லை என அறிக்கை அளித்­துள்­ளனர். குரு­நாகல் பொலிசார் இந்த விட­யத்தில் சரி­வர விசா­ர­ணை­களை செய்­ய­வில்லை என்­பதும் அவர்­க­ளது விசா­ர­ணை­களில் குள­று­ப­டிகள் உள்­ள­தையும் அது சார்ந்த எமது விசா­ர­ணை­களில் வெளிப்­ப­டுத்­தப்­ப­டுள்­ளது.

இதே­நேரம் வைத்­தியர் சாபி சட்­ட­வி­ரோ­த­மாக சொத்து சேர்த்­தமை தொடர்பில் உள்ள குற்­றச்­சாட்டு குறித்து விரி­வான விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. வைத்­தியர் சாபிக்கு 14 அசையா சொத்­துக்கள் உள்­ளன.

வற்றின் மொத்த பெறு­மதி 5 கோடியே 30 இலட்­சத்­திற்கும் அதி­க­மாகும். அவ­ரது மொத்த மாத வரு­மானம் 19 இலட்­சத்து 33 ஆயி­ரத்­திற்கும் அதி­க­மாகும். வைத்­தியர் சாபி 37 மில்­லியன் ரூபா பெறு­ம­தி­யான முத­லீ­டு­க­ளையும் செய்­துள்ளார். வைத்­தியர் என்ற ரீதியில் தனக்கு கிடைத்த வாகன இறக்­கு­மதி அனு­மதிப் பத்­தி­ரங்கள் இரண்டை 12 மில்­லியன் ரூபா­விற்கு விற்­பனை செய்­த­தாக அவர் கூறு­கிறார். தனது சொத்­துக்கள், அவற்றை உழைத்த விதம் தொடர்பில் விரி­வாக வாக்கு மூலம் தந்­துள்ளார். இவற்றில் சந்­தே­கத்­திற்கு இட­மான விட­யங்கள் இது­வ­ரையில் கண்­ட­றி­யப்­ப­ட­வில்லை. எனினும் இந்­திய அரே­பியர் ஒரு­வ­ருடன் தொடர்­புப்­பட்டு அரச சார்­பற்ற நிறு­வ­ன­மொன்­றி­னூ­டாக பணம் பெற்­றமை தொடர்­பி­லான விடயம் தொடர்பில் தொட­ர்ந்து விசா­ர­ணைகள் நடக்­கின்­றன. அதற்­காக அந்த அரச சார்­பற்ற நிறு­வ­னத்தின் சார்பில் அமானா, கொமர்­ஷியல் வங்­கி­களில் உள்ள இரண்டு வங்கிக் கணக்­குகள் தொடர்பில் முழு­மை­யான அறிக்­கை­யினை சமர்ப்­பிக்க அவ்­வங்­கி­க­ளுக்கு உத்­த­ர­வி­டு­மாறு வேண்­டு­கின்றோம். (உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டது)

இந்­நி­லையில் இது வரை­யான விசா­ர­ணை­களின் அடிப்­ப­டையில் வைத்­தியர் ஷாபியை தொடர்ந்தும் பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் தடுத்து வைப்­பது நியா­ய­மா­ன­தாகத் தெரி­ய­வில்லை. எனவே அது தொடர்பில் நாம் பாது­காப்புச் செய­லா­ளரை தெளி­வு­ப­டுத்­த­வுள்ளோம் என்றார். இதனைத் தொடர்ந்து வைத்­தியர் ஷாபி சார்பில் அவ­ரது சட்­டத்­த­ரணி ஷிராஸ் நூர்தீன் மன்­றுக்கு கருத்­துக்­களை முன்­வைத்தார்.

வைத்­தியர் ஷாபி அடிப்­ப­டை­யற்ற குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்­காக சாட்­சி­க­ளின்றி கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக அவர் இதன் போது சுட்­டிக்­காட்­டினார். இதன் போது பாதிக்­கப்­பட்­ட­தாகக் கூறப்­படும் தாய்மார் சார்பில் வாதங்­களை முன்­வைத்த சட்­டத்­த­ரணி பெர்­னாண்டோ சி.ஐ.டியின் விசா­ர­ணைகள் பக்­கச்­சார்­பாக இடம்­பெ­று­வ­தாகக் சுட்­டிக்­காட்­டினார். அத்­துடன் ஏற்­க­னவே நீதிமன்றில் உத்­த­ர­விட்­டுள்ள முறைப்­பா­ட­ளித்த பெண்களை கொழும்பில் பரிசோதனைக்கு உட்­ப­டுத்­து­வ­தற்­கான உத்­த­ரவை ரத்துச் செய்­யு­மாறும் அவர் கூறினார். அந்த பரி­சோ­த­னைகள் ஊடாக தாய்மார் மலட்­டுத்­தன்­மைக்கு உட்­ப­டு­வ­தற்­கான வாய்ப்­புக்கள் இருப்­ப­தா­கவும், புற்று நோய் போன்ற வேறு சில அபா­ய­க­ர­மான விளை­வுகள் அப்­ப­ரி­சோ­த­னை­களைத் தொடர்ந்து ஏற்­பட வாய்ப்­புள்­ளதால் அதனை எதிர்ப்பதாகவும் அவர் வாதிட்டார். இதனையடுத்து கொழும்பில் மருத்துவ பரிசோதனை செய்வதற்கான நீதிமன்ற உத்தரவை பிரதான நீதவான் சம்பத் காரியவசம் ரத்து செய்ததுடன் மருத்துவ சபையுடன் கலந்தாலோசித்து பொருத்தமான சோதனை முறைமையொன்றை இரு வாரங்களுக்குள் மன்றுக்குத் தெரியப்படுத்துமாறும் கட்டளையிட்டார். இதனையடுத்து இந்த விவகாரம் குறித்த விசாரணைகள் ஜூலை 11 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

நேற்றைய வழக்கு விசாரணைகளின் போது கருத்தடை விவகாரம் குறித்து தொடர்ந்து பேசி வரும் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர், குருநாகல் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர், உதவி பணிப்பாளர் உள்ளிட்டோரும் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் தாய்மார் சிலரும் மன்றில் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(குரு­நா­கல் நீதி­மன்­றி­லி­ருந்து எம்.எப்.எம்.பஸீர், யூ.எல். முஸம்மில்)

Leave A Reply

Your email address will not be published.