குழப்பம் ஏற்படுத்துவோருக்கு எதிராக அவசரகால சட்டம் பாவிக்கப்படாததேன்?
பாராளுமன்றில் முஜிபுர் ரஹ்மான் எம்.பி. கேள்வி
பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அதனுடன் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு பிரிவும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தெரிவிக்கும் நிலையில் நாட்டில் குழப்ப நிலையை தற்போது யார் ஏற்படுத்தி வருகின்றனர். அவர்களுக்கு எதிராக ஏன் அவசரகாலசட்டத்தை செயற்படுத்த முடியாமல் இருக்கின்றது என முஜிபுர் ரஹ்மான் கேள்வியெழுப்பினார்.
பாராளுமன்றத்தில் நேற்று அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதகாலத்துக்கு நீடித்துக்கொள்ளும் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கே அவசரகாலசட்டம் அமுல்படுத்தப்படுகின்றது. பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டவர்கள் அனைவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரிவும் அறிவித்துள்ளது. அதனால் தற்போது பாதுகாப்பு வீதி கடவைகள் அதிமாக நீக்கப்பட்டிருக்கின்றன.
அதேபோன்று நாட்டில் மீண்டும் திடீர் தாக்குதலொன்றை நடத்துவதற்கான அச்சுறுத்தல் இல்லையென இராணுவத் தளபதி பாராளுமன்ற தெரிவுக்குழுவில் தெரிவித்திருந்தார்.
அத்துடன் அவசரகால சட்டத்தை அமுல்படுத்தியதால் வெளிநாடுகள் பல எமது நாட்டுக்குப் பிரயாணத் தடைகளை விதித்திருந்தன. ஆனால் தற்போது அந்த தடைகளை அதிகமான நாடுகள் நீக்கியுள்ளன. ஆனால் இலங்கையில் இன்னும் குழப்பமான நிலை இருப்பதாக சில நாடுகள் தங்கள் பிரஜைகளுக்கு அறிவுறுத்தியிருக்கின்றன. பாதுகாப்பு பிரிவும் ஜனாதிபதி, பிரதமர் நாட்டில் பயங்கரவாத அச்சுறுத்தல் இல்லை என தெரிவிக்கின்றனர். அப்படியாயின் நாட்டில் அச்சுறுத்தல் நிலைமைகளை ஏற்படுத்துகின்றவர்கள் யார்?.
அத்துடன் கடைகள், வீடுகளை உடைத்தும் உண்ணாவிரதம் இருப்பவர்களே நாட்டில் பிரச்சினை ஏற்படுத்தி வருகின்றனர். சிங்கள, முஸ்லிம் மக்களிடத்தில் இனவாதத்தை தூண்டி பிரச்சினையை ஏற்படுத்த சிலர் முயற்சிக்கின்றனர். இவற்றை பயங்கரவாதிகள் செய்வதில்லை. இவர்களுக்கு எதிராக பயங்கரவாத சட்டம் செயற்படுவதில்லை.
இதுதான் எங்களுக்கும் இருக்கும் பிரச்சினை. தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றே அவசரகால சட்டம் நீடிக்கப்படுகின்றது. அப்படியாயின் வீடுகளை, கடைகளை, பள்ளிவாசல்களை உடைப்பது, சில ஊடகங்களில் இனவாதத்தை தூண்டும்வகையில் அறிக்கையிடுவது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லையா? இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் இன்று சுதந்திரமாக செயற்பட்டு வருகின்றனர்.
அத்துடன் முஸ்லிம் நிறுவனம் ஒன்று கொழும்பில் வைத்தியசாலைகளுக்கு வருபவர்களுக்கு இலவசமாக உணவு வழங்கி வருகின்றது. இந்த உணவில் கருத்தடை மாத்திரை போடப்படுவதா என பார்க்கவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தெரிவித்ததாக சிங்கள பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியிட்டிருக்கின்றது. அத்துடன் குறித்த தகவலை தான் தெரிவிக்கவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் மறுத்திருக்கின்றார். அப்படியாயின் அந்த தகவலை வெளியிட்ட ஊடகவியலாளர் தொடர்பில் இதுவரை எந்த விசாரணையும் இல்லை. ஒருசாராருக்கு எதிராக மாத்திரமே அவசரகால சட்டம் மேற்கொள்ளப்படுகின்றது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.
vidivelli