தங்கொட்டுவ வாராந்த சந்தையில் முஸ்லிம்கள் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் வென்னப்புவ பிரதேச சபைத்தலைவர் தங்கொட்டுவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு அறிவித்தமை தொடர்பில் விளக்கமளிப்பதற்கு வென்னப்புவ பிரதேச சபைத் தலைவர் உட்பட 6 பேரை நீதிமன்றில் ஆஜராகுமாறு மாரவில நீதிவான் நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பி வைத்துள்ளது.
தங்கொட்டுவ வாராந்த சந்தையில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட முஸ்லிம்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தங்கொட்டுவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. பொலிஸார் நீதிமன்றத்துக்கு வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே வென்னப்புவ பிரதேச சபைத் தலைவர் உட்பட 6 பேரை நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 28 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகி தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட மைக்கான காரணத்தை விளக்குமாறு வென்னப்புவ பிரதேச சபைத் தலைவர் கே.வி.சுசந்த உட்பட 6 பேர் கோரப்பட்டுள்ளனர்.
தங்கொட்டுவ வாராந்த சந்தையில் முஸ்லிம் வியாபாரிகள் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அசாதாரண நிலைமை உருவாகலாம். ஏனைய வர்த்தகர்களும் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். எனவே அங்கு அமைதியான சூழ்நிலையினை ஏற்படுத்த முஸ்லிம் வியாபாரிகளுக்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக வென்னப்புவ பிரதேச சபைத் தலைவர் தங்கொட்டுவ பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஏ.ஆர்.ஏ.பரீல், எம்.எஸ்.எம்.முஸப்பிர்
vidivelli