இஸ்லாமிய பாடப்புத்தகங்களில் இனமுறுகல்களை ஏற்படுத்தக்கூடிய அடிப்படை வாதம் மற்றும் பயங்கரவாத கருத்துகள் இருந்தால் அவற்றை நீக்கி பாடப்புத்தகங்களில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் தேசிய பாடசாலைகளுக்குப் பொறுப்பான பணிப்பாளர் ஜயந்த விக்ரமநாயக்க தெரிவித்தார்.
அடிப்படைவாதி ஸஹ்ரான் போன்றோர் உருவாகுவதற்கு கல்வி அமைச்சினால் 1980 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வெளியிடப்பட்ட இஸ்லாமிய பாடநூல்களே காரணம் என அண்மையில் பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த இஸ்லாம் மதத்திலிருந்தும் வெளியேறிய ரிஸ்வின் முஹமத் தெரிவித்திருந்தார்.
1980 ஆம் ஆண்டு தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் கல்வி பயிலும் 9,10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வெளியிடப்பட்ட இஸ்லாமிய பாட நூல்களில் “இஸ்லாமிய தண்டனைகள் ஒழுங்காக அமுல்நடத்தப்படுமாயின் உலகில் குற்றங்கள் அமைவது மிக அரிதாகவே இருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை” என்று கூறப்பட்டு அதன் கீழ் உள்ள குற்றங்களும் தண்டனைகளும் என்று தலைப்பிடப்பட்ட பட்டியலில் ஒன்றில் குற்றமாகக் கருதப்படும் செயல்கள் மற்றும் அவற்றுக்கான தண்டனைகள் ஆகியன குறிப்பிடப்பட்டுள்ளன.
இஸ்லாம் மதத்தின் முக்கிய கருத்துகளை உள்ளடக்கிய குர்ஆனில் குறிப்பிடப்படாத சட்டங்கள் 1980 ஆம் ஆண்டு தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் கற்கும் 9,10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வெளியிடப்பட்ட இஸ்லாமிய பாடப்புத்தகங்களில் அடங்கியுள்ளன என தெரிவுக்குழு முன் சாட்சியமளித்த ரிஸ்வின் தெரிவித்தார்.
மேலும் அவர் அதில் “ரித்தத்” என்ற சொல் குறிப்பிடப்பட்டு அதற்குத் தண்டனையாக எச்சரிக்கைகளின் பின்கொலை என்பது குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் “ரித்தத்” என்ற சொல்லின் பொருள் மதம் மாறல் என்றும் ஒருவர் இஸ்லாத்திலிருந்து அல்லது இஸ்லாத்தை ஏற்றுவிட்டு பின்னர் மீண்டும் இஸ்லாத்திலிருந்து வெளியேறுதல் அல்லது வேறு மதங்களுக்கு மாறுதல் எனவும் தெரிவித்துள்ளார்.
அத்தோடு 2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் வெளியிடப்பட்டுள்ள இஸ்லாமிய பாடநூல்களிலும் சில பாரதூரமான வசனங்கள் உள்ளடங்கியுள்ளதாகவும் அவர் சாட்சியமளித்துள்ளார்.
இதேவேளை பாடசாலைகளில் இஸ்லாம் மதத்தைக் கற்பிக்கும் பாடநூல்களில் அடிப்படைவாதம் மற்றும் பயங்கரவாதம் உள்ளடங்கப்பட்டுள்ளன எனவும் அவற்றை நீக்குமாறும் கோரி சிங்களே அமைப்பும் பௌத்த தகவல் கேந்திர நிலையமும் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளன.
இந்நிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள இஸ்லாமிய பாடநூல்களில் தவறான கொள்கைகள் எதுவும் உள்ளடங்கப்பட்டில்லை என கல்வி அமைச்சின் தேசிய பாடசாலைகளுக்குப் பொறுப்பான பணிப்பாளர் ஜயந்த விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார். மேலும் இஸ்லாமிய பாடநூல்களை ஆராய்ந்து அவ்வாறான அடிப்படைவாத கருத்துக்கள் இருந்தால் அவற்றை நீக்கி திருத்தங்களைச் செய்வதற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
விடிவெள்ளி