கஹட்டோவிட்ட முஹிடீன் இஸ்லாஹி
அரசியலமைப்புக்கு ஏற்பவும், பாராளுமன்ற சம்பிரதாயங்களைப் பேணியும் சபாநாயகர் செயற்படும் வரையில் பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்து விலகியிருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற சபைத் தலைவர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற நடவடிக்கைகள் கடந்த 23 ஆம் திகதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று 27 ஆம் திகதி பிற்பகல் 1.00 மணிக்கு மீண்டும் கூடவுள்ளது.
பாராளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலம் இல்லாமல் பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவின் அரசாங்கத்துக்கு எந்தவித நடவடிக்கையையும் முன்னெடுக்க முடியாமல் உள்ளது. இதுதான் உண்மைத்தன்மை என்பது சாதாரண அரசியல் அறிவுள்ள அத்தனைபேரினதும் கருத்தாகும்.
பெரும்பான்மையில்லாத ஒரு குழுவுக்கு அரசாங்கத்தை கொண்டுநடாத்த அதிகாரமளிப்பது அரசியலமைப்புக்கு முரணானது என்பது ஏகோபித்த கருத்தாகும். தமக்கு சட்ட முரணாக செயற்பட சபாநாயகர் இடமளித்தாலேயே பாராளுமன்றத்துக்கு வருகின்றேன் எனத் தெரிவிப்பது போன்று தினேஷ் எம்.பி.யின் அறிவிப்பு இருப்பதாக முன்னாள் பிரதமர் ரணில் தரப்பு அரசியல்வாதிகள் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
பாராளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலத்தை சரிசெய்யும் முயற்சி தொடர்ந்தும் தோல்வியிலேயே இருக்கின்றது என்பதையே அரசாங்க தரப்பின் ஒவ்வொரு நடவடிக்கையும் படம் போட்டுக் காட்டுவதாக ஐ.தே.க.வின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் கடந்த 24 ஆம் திகதி கண்டி பொதுக் கூட்டத்தில் கூறியிருந்தார்.
எது எப்படிப் போனாலும் முன்வைத்த காலை பின்னோக்கி நகர்த்த மாட்டேன் என்ற பிடிவாதத்தில் நிருவாகத் தலைமை இருக்கும் வரையில் இந்த இழுபறி நிலைமை தொடரும் என்பது மட்டும் விளக்கம் தேவையில்லாத உண்மையாகும்.
தனது நிலைப்பாட்டை சரியென நிறுவும் முயற்சியில் ஜனாதிபதியும், அரசாங்கத்தை ஏற்றதன் பின்னர் விட்டுக்கொடுக்க முடியாத மானப் பிரச்சினையில் பிரதமர் மஹிந்த தரப்பும், இழந்ததை மீண்டும் எடுக்காமல் ஓயமாட்டோம் என முன்னாள் பிரதமர் ரணில் தரப்பும், சட்டம் மீறப்பட்டுள்ளதாகவும், அதனை அங்கீகரித்தால் அராஜக நிலை ஏற்படுமெனவும், ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதே தமது ஒரே குறிக்கோள் என பாராளுமன்றத்திலுள்ள அணிசேராத கட்சிகளும் தெரிவித்து வருகின்றன.
சிவில் அமைப்புக்களும், தொழிற்சங்க குழுக்களும் இந்த அரசாங்கத்துக்கு எதிராக பாதைக்கு இறங்கியுள்ளன. தம்பர அமில தேரர் தலைமையில் சத்தியாக்கிரகம் வரையில் இந்த எதிர்ப்பு நடவடிக்கை சென்றுள்ளது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை பொது வேட்பாளராக நிறுத்திய பின்னணிச் சக்தியாகவிருந்த மறைந்த மாதுலுவாவே சோபித தேரரின் அமைப்பும் ஜனாதிபதியின் நடவடிக்கைகளுக்கு எதிராக வீதியில் இறங்கியுள்ளமை குறிப்பிட வேண்டிய ஒரு முக்கிய அம்சமாகும்.
இத்தனை பிரச்சினைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாகவுள்ளார். போதாக்குறைக்கு சவால்களை வேறு விடுத்துள்ளார். அவற்றைப் பாதுகாப்பதும் அவருடைய தனிப்பட்ட பிரச்சினையாக மாறியுள்ளது.
கட்சி தாவும் சிந்தனையுள்ளவர்களுக்கும் அதிகார தளம்பல் சூழ்நிலையில் தீர்மானம் ஒன்றுக்கு வரமுடியாதுள்ளது. இதனால், தானோ என்னவோ, மஹிந்த அரசாங்கம் 2020 வரை முன்னெடுத்துச் செல்லப்படும் என எஸ்.பி. திஸாநாயக்க அறிவித்திருந்தார்.
முதலில் மாகாண சபைத் தேர்தல் நடைபெறுமெனவும் அடுத்து ஜனாதிபதித் தேர்தல் எனவும் பொதுத் தேர்தல் இறுதியிலேயே நடைபெறும் எனவும் எஸ்.பி. திஸாநாயக்க கட்சி தாவ நினைப்பவர்களுக்கு ஒர் உறுதிப்பாட்டை வழங்கியிருந்தார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் பதற்ற நிலைமையை நிறுத்துவதற்கு இடைக்கால அரசாங்கம் ஒன்றுக்கு வருமாறு பாராளுமன்ற உறுப்பினர் லக் ஷ்மன் யாபா அபேவர்தன ஐக்கிய தேசியக் கட்சிக்கு அழைப்பு விடுத்திருந்தார். எந்தவித நிபந்தனையுமின்றி ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாகவும் கடந்த 23 ஆம் திகதி அவர் ஊடகங்களிடம் பகிரங்கமாக கூறியிருந்தார்.
இடைக்கால அரசாங்கம் அமைக்க பொதுஜன பெரமுன ஐக்கிய தேசியக் கட்சியை அழைத்துள்ளமையானது, அக்கட்சியின் வங்குரோத்து நிலைமையை எடுத்துக் காட்டுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் பதிலளித்திருந்தார்.
பாராளுமன்றத்திலுள்ள பெரும்பான்மைக் கட்சியே இடைக்கால அரசாங்கத்துக்கு அழைப்பு விடுக்க வேண்டும். ஐக்கிய தேசிய முன்னணிக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ளது. தமக்கு அரசாங்கம் அமைக்க முடியும். தாம் விரைவில் அரசாங்கத்தை அமைப்போம். அதன்பின்னர், கட்சித் தலைவர்களை ஆலோசித்து தேர்தலுக்கு செல்வது குறித்து தீர்மானிப்போம் எனவும் அகிலவிராஜ் காரியவசம் சுட்டிக்காட்டியிருந்தார்.
அரசாங்க தரப்பின் எதிர்பார்ப்பு வீழ்ச்சியடைந்துள்ளது. பிரதமரை நியமித்து, அரசியலமைப்பை மீறி பாராளுமன்றத்தைக் கலைத்து, பின்னர் தாம் அரசாங்கம் அமைத்துக் காட்டுவதாகவும், தமக்குப் பெரும்பான்மை உண்டு என்றும் கூறிய ஸ்ரீல.பொ.ஜ.பெ. கட்சி இப்போது இடைக்கால அரசாங்கத்துக்கு இறங்கி வந்துள்ளது. இவர்களின் இந்த அழைப்பைக் கேட்கும் போது வெட்கப்படவேண்டியுள்ளது எனவும் ஐ.தே.க. பொதுச் செயலாளர் கிண்டல் செய்திருந்தார்.
இதேவேளை, பிரதமர் மஹிந்த அரசாங்கத்திலுள்ள தரப்பினர் பல்வேறு முரண்பாடான கருத்துக்களை தெரிவித்து வருவதும் ஒரு பிரச்சினையாக மாறியுள்ளது. மஹிந்த ராஜபக் ஷ தலைமையில் பிரதமர் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் முரண்பாடான கருத்துக்களை தெரிவித்த அரசாங்க தரப்பு எம்.பி.க்கள் ஒருவர் மற்றவரினால் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளனர். இதில், எஸ்.பி. திஸாநாயக்கவும் விட்டு வைக்கப்படவில்லை.
அரச பாடசாலை மாணவர்களுக்கு அடுத்த வருடத்துக்கான இலவச சீருடை வழங்குவது தொடர்பிலான அமைச்சரவைப் பிரேரணையை இதுவரையில் கல்வியமைச்சுக்கு கிடைக்கவில்லையெனவும், இதனால், எந்தவித நடவடிக்கையும் எடுக்க முடியாதுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சீருடை விநியோகிப்பதற்கான விலைமனுக் கோரல் நடைபெற்றதன் பின்னர் பாடசாலை மாணவர்களின் கைக்கு சீருடைத் துணி போய்ச் சேர்வதற்கு 3 மாத கால அவகாசம் தேவைப்படும் எனவும், தற்பொழுதுள்ள அரசியல் சூழ்நிலையில் பாடசாலை மாணவர்களுக்கான இலவச சீருடைத் துணி போய்ச் சேர்வதற்கு அடுத்த வருடம் மார்ச் மாதத்தையும் தாண்டி விடும் எனவும் அமைச்சின் உயரதிகாரியொருவர் கூறியுள்ளார்.
அமைச்சரவை அனுமதி கிடைக்கப் பெற்றதன் பின்னர் மதிப்பீட்டுக் குழுவொன்று அமைக்கப்பட வேண்டும். அதன் பின்னரே விலைமனுக் கோரல் இடம்பெறும். விலை மனுக் கோரல் இடம்பெற்று விலை தீர்மானிக்க 21 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் எனவும் அவ்வதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
அதுமட்டுமல்லாமல், அரச ஊழியர்களுக்கான சம்பளப் பிரச்சினையும் எதிர்வரும் நாட்களில் புதுவடிவம் எடுக்கப் போகின்றது. வரவு – செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டாலேயே அரச ஊழியர்களுக்கான சம்பளம் வழங்க முடியுமென நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன.
டொலரின் விலையேற்றத்தைத் தொடர்ந்து அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் உள்ளடங்காத அவசியத் தேவையுள்ள பொருட்களின் விலையேற்றம் காரணமாக மக்களின் வாழ்க்கைச் சுமை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.
போலி நியாயங்களைக் கூறிக்கொண்டு தங்களது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களை முன்னெடுத்துச் செல்லும் அரசியல்வாதிகள் குறித்து மக்கள் கவலையடைந்துள்ளனர். தொழில்நுட்ப யுகத்தில் வாழ்ந்து வரும் இக்கால மக்களை கடந்த காலங்களைப் போன்று பொய் கூறியும், விலை கொடுத்தும் ஏமாற்றி விடலாம் என நினைப்பது முட்டாள்தனமாகும் என்பதை அரசியல்வாதிகள் புரிந்துகொள்ள வேண்டும்.
இந்த அரசியல் நிலைமைகளை நாட்டு மக்கள் நன்கு அவதானித்துக் கொண்டே இருக்கின்றார்கள். நாடும் நாட்டு மக்களும் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை, எமது அரசியல் அதிகாரம்தான் முக்கியம் என்று செயற்படும் போக்கை, மக்கள் வெறுக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பது மட்டும் உண்மையாகும்.
-Vidivelli