ஜாமிஆ நளீமியாவின் பணிப்பாளர் கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரி அவர்களுக்கு எதிர்வரும் ஜூன் 24 இல் 79 வயது பூர்த்தியாவதையொட்டி இக் கட்டுரை பிரசுரமாகிறது
கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரி மாத்தறையில் 1940, ஜூன் 24 அன்று பிறந்தார். சென் தோமஸ் கல்லூரியில் ஆரம்பக் கல்வியைக் கற்ற இவர் பின்னர் தர்கா நகர் அல்-ஹம்றா பாடசாலையில் இணைந்தார். அங்குதான் Senior School Certificate (SSC) பரீட்சைக்குத் தோற்றினார். பின்னர் Higher School Certificate (HSC) கற்பதற்காக கொழும்பு ஸாஹிரா கல்லூரியில் இணைந்து கொண்டார்.
அங்கு சிறந்த கல்வி அடைவை வெ ளிப்படுத்திய அவர், 1960 இல் இலங்கை பல்கலைக்கழகத்திற்கு அனுமதி பெற்றார். பின்னர் பிரித்தானியாவின் எடின்பரோ பல்கலைக்கழகத்தில் தனது கலாநிதிப் பட்டத்தை (Ph.D) நிறைவு செய்தார். தனது கல்வித்துறை அடைவுகளுக்கு தனது ஆசிரியர்களே காரணம் என கலாநிதி சுக்ரி அடிக்கடி நினைவுகூர்வார்.
தனக்கு கற்பித்த ஹரீஸ் ஆசிரியரின் சிறப்பம்சம் மாணவர்களது திறமைகளைத் தூண்டிவிடுவது.நான் அல்லாஹ்வின் உதவியினால் ஓர் பேச்சாளராக வருவதற்கு இவரே காரணம் என்று கூறுகின்றார்.
ஸாஹிராவில் முஹம்மத் சமீம்,எம்.எம்.மஹ்ரூப், பேராசிரியர் சிவத்தம்பி ஆகியோர் கலாநிதி சுக்ரிக்கு கற்பித்த முக்கிய ஆசிரியர்களாவர்.
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் அறபு மொழியை சிறப்பாக கற்றுக் கொடுத்து தனக்கு எப்போதும் ஆத்மார்த்த ரீதியாக வழிகாட்டிய பேராசிரியர் இமாம் அவர்களை எப்போதும் நன்றியுணர்வுடன் நினைவு படுத்துவார்.
பின்னர், தனது வாழ்வில் முக்கிய தீர்மானம் எடுப்பதாயின் ஏ.எம்.ஏ.அஸீஸிடம் கலந்தாலோசிப்பதாகக் கூறுவார்.
அதேபோல் கலாநிதி சுக்ரி ஆய்வுக்காக பேராசிரியராக நியமிக்கப்பட்ட மொன்ட் கொமரி வொட் பற்றியும் சிலாகித்துப் பேசுவார்.
கலாநிதி சுக்ரியின் விஷேட சிறப்பம்சம் என்னவெனில், ஸலபுஸ் ஸாலிஹீன்களை, அறிஞர்களை மதிக்க வேண்டும் என்ற உயரிய பண்பாடு கொண்டவர். இதனை ஊட்டியவர் பேராசிரியர் இமாம் எனக் குறிப்பிடும் இவர், அதற்கான அழகிய ஒரு சம்பவத்தையும் கூறுகிறார்.
” ஒருமுறை பேராசிரியர் இமாம் அவர்கள், திடீரென வந்து வாசிகசாலையின் மூன்றாவது மாடிக்கு என்னை அழைத்துச் சென்று, தூசுபடிந்த ஒரு நூலை எடுக்கச் சொல்லி அதனை எனது கைக்குட்டையால் துடைக்கச் சொல்லி கண்ணியத்துடன் கையில் எடுக்கச் சொல்லிவிட்டு ‘நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன்.’ என்றார்.
இது என்ன என்று கேட்டார்? பின்னர் அவரே சொன்னார்.இது பேராதனைப் பல்கலைக்கழகத்தின் மூன்றாவது மாடி. இங்கு மின்விசிறி சுழன்று கொண்டிருக்கிறது. நீங்கள் வெளியே பாருங்கள்.நல்ல சூழல், அழகிய காட்சிகள், உங்களிடம் அழகிய பேனை உள்ளது. அழகிய தாள் உள்ளது. இதுவெல்லாம் அல்பிரூனி இந்த நூலை எழுதுகின்ற வேளை அவரிடம் இருந்தனவா?
நீங்கள் ஹிஜ்ரி ஐந்தாம் நூற்றாண்டுக்குச் செல்லுங்கள். மத்திய ஆசியாவைப் பாருங்கள். மாரி காலத்தில் கடும் குளிர், கோடை காலத்தில் கடும் வெப்பம். எழுதுவதற்கு கடதாசி இருக்கவில்லை. தொட்டுத் தொட்டு எழுதும் கலம் எனும் உபகரணம்தான் இருந்தது. இந்நிலையில்தான் அவர்கள் தமது பங்களிப்பை செய்திருக்கிறார்கள். அதனைத்தான் நாம் இன்று பார்க்கிறோம்.எனவே நீங்கள் எல்லா கண்ணியமிக்க இமாம்களையும் மதிக்க வேண்டும்.அவர்களுக்கு உரிய அந்தஸ்தைக் கொடுக்க வேண்டும்’ என்றார். நான் மெய்சிலிர்த்துப் போனேன்.
கலாநிதி சுக்ரி இதுவரை பல நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.
1. காலத்தின் அறைகூவலும் முஸ்லிம்கள் பணியும், 2. தஃவாவும் நவயுகத்தின் சவாலும், 3. நளீம் ஹாஜியார் வாழ்வும்,பணியும், 4. ஹதீஸ் வரலாறும் முக்கியத்துவமும், 5. பேரறிஞர் இமாம் கஸ்ஸாலி, 6. இஸ்லாமியக் கல்வி (ஆங்கிலம்), 7. இலங்கை முஸ்லிம்கள் (ஆங்கிலம்), 8. ஹதீஸும் சுன்னாவும், 9. இஸ்லாமும் மனித உரிமைகளும், 10. இஸ்லாமியப் பண்பாட்டு மத்திய நிலையங்கள், 11. இலங்கை முஸ்லிம்களின் தொன்மைக்கான வரலாற்றுப் பாதை, 12. மாலிக் பின் நபி சிந்தனைகளும், கருத்துக்களும், 13. இஸ்லாமிய வாழ்வியல் கோட்பாடுகள், 14. மதமும் அறிவியலும், 15. அல்குர்ஆனும் அதன் வாழ்வியலும்.
நளீம் ஹாஜியாருடன் நெருங்கிய உறவு கொண்டு அவரால் உருவாக்கப்பட்ட ஜாமிஆ நளீமிய்யாவுக்கு இன்று வரை கௌரவ பணிப்பாளராக இருந்து மாபெரும் அறிவு, ஆன்மீக பணி செய்துகொண்டு வருகிறார்.
ஒரு முறை நளீம் ஹாஜியாரிடம், ஸாஹிராவுக்கு சிறிது காலம் கலாநிதி சுக்ரியை விடுவியுங்கள் என அதன் நிர்வாகிகள் கேட்டபோது, கலாநிதி சுக்ரியின் நிறைக்கு தங்கத்தை தருகிறேன். ஆனால் கலாநிதி சுக்ரியை ஸாஹிராவுக்குத் தரமாட்டேன் என நளீம் ஹாஜியார் மறுத்து விட்டார். அல்ஹம்து லில்லாஹ். கலாநிதி சுக்ரியின் ஆளுமையின் வெளிப்பாட்டுக்கு இதைவிட வேறென்ன சான்று வேண்டும்.
கலாநிதி சுக்ரியில் நான் கண்ட ஒரு விஷேட அம்சம், ஒரு குறிப்பிட்ட சிந்தனை வட்டத்தைச் சேர்ந்த அறிஞர்களின் சிந்தனைகளை மட்டும் உள்வாங்கி அந்த பார்வையோடு மட்டும் நின்றுவிடாமல் பலதரப்பட்ட சிந்தனை முகாம்களிலுள்ள நல்ல பல சிந்தனைகளையும் உள்வாங்கி,பகுப்பாய்வு செய்து வரவேற்பதாகும்.
கலாநிதி சுக்ரி அவர்களின் கல்விப் பணி தொடரவும் அவரது தேகாரோக்கியத்துக்காகவும் பிரார்த்திப்போமாக.
நௌபாஸ் ஜலால்தீன்
மருதமுனை