ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் உயர்பீடம் கட்சியின் அரசியல் களநிலைமை தொடர்பில் நேற்று முன்தினம் இரவு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமின் தலைமையில் ஒன்றுகூடி கலந்துரையாடியது. இக்கூட்டம் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமின் இல்லத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த அரசியல் உயர்பீட உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்து கொண்டுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்கள் மீண்டும் அமைச்சுப்பதவிகளைப் பொறுப்பேற்பதா? இல்லையா? என்பது தொடர்பில் நீண்ட நேரம் ஆலோசிக்கப்பட்டது.
மீண்டும் அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்பது தொடர்பில் ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்டுள்ள முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகள் தொடர்பான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை அமைச்சுப் பொறுப்புகளை ஏற்றக்கூடாது என்று சிலரும், அமைச்சுப் பதவிகளை ஏற்கவேண்டும் என்று சிலரும் வாதங்களை முன்வைத்தனர்.
பெரும்பான்மை சமூகத்தைப் பகைத்துக்கொள்ளாது நகர்வுகளை முன்னெடுக்க வேண்டும் என ஒரு தரப்பினர் கருத்துத் தெரிவித்தனர். முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உத்தரவாதம் வழங்கும்வரை அமைச்சுப் பதவிகளை ஏற்கக்கூடாது என்பதே பெரும்பாலானோரின் நிலைப்பாடாக இருந்தது.
அரசியல் உயர்பீட கூட்டம் தீர்மானம் ஒன்று எட்டப்படாத நிலையில் நிறைவுற்றதாகவும் தொடர்ந்தும் கலந்துரையாடல்களை நடத்துவதென தீர்மானிக்கப்பட்டதாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தவிசாளரும், அரசியல் உயர்பீட உறுப்பினருமான எம்.நயீமுல்லாஹ் தெரிவித்தார்.
-Vidivellli