ஹிஸ்புல்லாஹ் ரிஷாட் பதியுதீன் அசாத் சாலியிடம் விசாரணைகளுக்கு 2 பொலிஸ் குழுக்கள்
பொலிஸ் தலைமையகம் அறிவிப்பு
முன்னாள் ஆளுநர்கள் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், அசாத் சாலி மற்றும் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஆகியோருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக இரு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
பயங்கரவாத தாக்குதல்களின் பின் பல குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகிவந்த முன்னாள் ஆளுநர்கள் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், அசாத் சாலி மற்றும் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்
ஆகியோர் குறித்த முறைப்பாடுகள் தொடர்பில் பொலிஸ் தலைமையகத்தால் மூவரடங்கிய குழுவொன்று கடந்த 4 ஆம் திகதி நியமிக்கப்பட்டது. இந்தக் குழுவிற்கு இவர்களுக்கு எதிராக 27 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இவர்கள் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து, விசாரணைகளை மேற்கொள்வதற்காக இரு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இந்தக் குழுக்களிலே குற்றப் புலனாய்வு மற்றும் நிதி குற்ற விசாரணை பிரிவின் அதிகாரிகள் உள்ளடங்குவாதாகவும் தெரியவந்துள்ளது.
இதேவேளை, இந்த முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், இந்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் சாட்சியங்கள் பெற்றுக் கொள்ளப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடதக்கது.
-Vidivelli