- எம்.எப்.எம்.பஸீர்
வெள்ளை வேனில் 5 மாணவர் உள்ளிட்ட 11 பேரை கடத்திய விவகாரத்தில் பிரதான சந்தேக நபர் நேவி சம்பத்துக்கு அடைக்கலம் கொடுத்தமை தொடர்பில் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள முப்படைகளின் அலுவலக பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அதுகுறித்த விசாரணைகளின் நிமித்தம் இன்று சி.ஐ.டி.க்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இன்று காலை 10.00 மணிக்கு சி.ஐ.டி.யின் சமூக கொள்ளை தொடர்பிலான விசாரணைப் பிரிவில் அவரை ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக சி.ஐ.டி. தெரிவித்தது.
ஐந்து மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை வெள்ளை வேனில் கடத்திச்சென்று சட்டவிரோதமாகத் தடுத்துவைத்து கப்பம் பெற்றமை மற்றும் காணாமலாக்கியமை தொடர்பில் பிரதான சந்தேகநபரான நேவி சம்பத் எனப்படும் கடற்படை புலனாய்வுப் பிரிவின் முன்னாள் லெப்டினண்ட் கொமாண்டர் ஹெட்டியாராச்சி முதியன்சலாகே சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சிக்கு சட்டத்தின் பிடியிலிருந்து தப்பி மறைந்திருக்க உதவியமை தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் முன்னாள் கடற்படை தளபதியும் தற்போதைய முப்படைகளின் அலுவலக பிரதானியுமான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் அவரை கைது செய்ய நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ள நிலையிலேயே இன்று அவர் இவ்வாறு விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli