இராஜினாமா செய்த முன்னாள் அமைச்சர்கள் கபீர் ஹாசிமும், ஹலீமும் மீண்டும் அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்பது குறித்து முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீமுடன் ஏற்கனவே கலந்துரையாடியிருக்கிறார்கள். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்களான பதவி விலகிய அமைச்சர்கள் கட்சியின் உயர் பீடத்தின் அனுமதியினைப் பெற்றுக்கொண்டு பதவி விலகவில்லை. அது போன்று மீண்டும் அமைச்சுப்பதவிகளை கையேற்பதா இல்லையா என்பது தொடர்பில் அவர்களாகவே தீர்மானம் மேற்கொள்வார்கள் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தவிசாளர் எம். நயீமுல்லாஹ் விடிவெள்ளிக்குத் தெரிவித்தார்.
இராஜினாமா செய்து கொண்ட தமது அமைச்சுப் பதவிகளை முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் பெற்றுக்கொள்வார்களா? என்பது தொடர்பில் வினவியபோதே முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தவிசாளர் எம். நயீமுல்லாஹ் இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலையடுத்து கட்சியின் உயர்பீட கூட்டம் நடைபெறவில்லை. நோன்பு காலத்திலும் கூட்டப்படவில்லை. அதனால் உயர்பீடத்தில் ஆலோசிக்கப்படாமலே கட்சியின் தலைவருக்கு அவசர நிலைமைகளின்போது சொந்த தீர்மானம் மேற்கொள்ளலாம் என்ற அடிப்படையில் அவர்கள் பதவியிலிருந்தும் விலகினார்கள். அது சமூகநலன் கருதிய தீர்மானமாகும்.
அதனைப் பிழையாகக்கொள்ள முடியாது. இதேபோன்று மீண்டும் பதவிகளை ஏற்பது தொடர்பில் அவர்கள் மேற்கொள்ளும் தீர்மானம் எதுவாக இருந்தாலும் அதற்கு கட்சி பதில் சொல்லியாக வேண்டும் என்றார்.
-Vidivelli