தென்னிலங்கை அரசியல் தலைவர்கள் முஸ்லிம்களுக்கு எதிரான அநீதிக்காக குரல்கொடுக்க முன்வரவேண்டும்
தென்னிலங்கை அரசியல் தலைவர்கள் முஸ்லிம்களுக்கு எதிரான அநீதிக்காக குரல்கொடுக்க முன்வரவேண்டும்
தென்னிலங்கை அரசியல் தலைவர்கள் முஸ்லிம் சமுகத்தின் குறைகளை மாத்திரம் விமர்சித்துக் கொண்டிருக்காமல் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அநீதிக்காகவும் குரல்கொடுக்க முன்வரவேண்டும். இனங்களுக்கிடையில் பரஸ்பர நல்லுறவு இருந்தால்தான் நாட்டின் பொருளாதாரதத்தை கட்டியெழுப்பலாம் என பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.
பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர் தென்னிலங்கை அரசியல் தலைமைகள் முஸ்லிம்கள் தொடர்பாக கடைப்பிடித்துவரும் நடவடிக்கை தொடர்பில் தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர் தென்னிலங்கை அரசியல் தலைமைகளின் பேச்சுக்கள் முஸ்லிம் மக்களுக்கு அறிவுரை செய்வதிலும் அவர்களின் கலாசாரம் மற்றும் ஆடைகள் தொடர்பாக விமர்சிப்பதிலுமே இருக்கின்றன. ஆனால் முஸ்லிம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அழுத்தங்கள் கெடுபிடிகள் தொடர்பாக குரல்கொடுப்பதை மிகவும் குறைவாகவே பார்க்கின்றோம். அது மிகவும் துர்ப்பாக்கியமான நிலையாகும்.
ஏப்ரல் 21ஆம் திகதிக்கு முன்னர் ஞானசார தேரர் போன்றவர்களின் நடவடிக்கைகளை எதிர்த்து குரல்கொடுக்கும் தலைமைகள் தெற்கில் இருந்தனர். பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா போன்றவர்கள் முஸ்லிம்களுக்கு எதிரான அநீதிகளை தட்டிப்பேசக்கூடியவர்களாக இருந்தார்கள். ஆனால் இப்போது இவர்களும் முஸ்லிம்களின் செயற்பாடுகள் நடை உடைகளில் குறைகாண்பதிலே இருக்கின்றனர். இது முஸ்லிம் சமூகத்துக்கு ஒருவகையில் மன அழுத்தத்தை கொடுக்கும் வகையிலே இருக்கின்றது.
அத்துடன் பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டில் அமைதியான சூழலை ஏற்படுத்த முஸ்லிம் சமூகம் ஒத்துழைத்து வருகின்றது என்பது அவர்களுக்குத் தெரியும். அதனால் நியூசிலாந்தில் பயங்கரவாதி ஒருவரின் தாக்குதலுக்கு பின்னர் அந்நாட்டு பிரதமர் எவ்வாறு நடந்துகொண்டார் என்பதை உதாரணமாக கொண்டு செயற்படவேண்டும். எமது அண்டைநாடான இந்தியாவில் 20கோடிக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் சகல மாநிலங்களிலும் வாழ்கின்றார்கள். அந்த நாடும் இன்று காஷ்மீர் பிரச்சினை என்றும் நக்சலைட் போன்ற ஆயுததாரிகளின் போராட்டத்துக்கு முகம்கொடுத்துவருகின்றது.
என்றாலும் இந்திய அரசாங்கமும் அந்நாட்டு அரசியல்வாதிகளும் ஒருபோதும் அந்நாட்டு முஸ்லிம்களை வெறுப்பூட்டும் கருத்துக்களை எதிரொலிப்பதில்லை. பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருக்கும் அந்த நாட்டில் புர்கா, நிகாப் பாவனையில் இருக்கின்றது. அரபு மொழி பதாதைகள் தாராளமாக காணப்படுகின்றன. அரபு மத்ரசாக்கள் தாராளமாக இருக்கின்றன.முஸ்லிம் விவாக சட்டம் என்றும் வக்பு வாரியம் என்றும் தனியாக இயங்குகின்றன. குறிப்பாக ஹஜ்ஜுக்கு செல்பவர்களுக்குக் கூட அந்த அரசாங்கம் மானியம் வழங்குகின்றது.
எனவே எமது நாட்டில் திடீரென ஒரு குழு மேற்கொண்ட குண்டுத் தாக்குதலுக்காக ஆயிரம் வருடத்துக்கும் மேற்பட்ட உறவை கேள்விக்குட்படுத்தும்வகையில் தெற்கில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்கின்ற நடவடிக்கை மிகவும் துரதிஷ்டவசமானதாகும். இதனை தகர்த்தெறிய தெற்கில் இருக்கும் அரசியல் தலைவர்கள் துணிந்து முன்வரவேண்டும். இனங்களுக்கிடையில் பரஸ்பர நல்லுறவு இருந்தால்தான் நாட்டின் பொருளாதாரதத்தை கட்டியெழுப்பலாம். எம்மனைவருக்கும் நாடு முக்கியம் என்பதை உணர்ந்து செயற்படவேண்டும் என்றார்.
-Vidivelli