இலங்கை முஸ்லிம்கள் ஏனைய சமூகங்களிடமிருந்து தூரப்பட்டுள்ளனர்
எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த விசேட அறிக்கை
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் பின்னரான அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த
ராஜபக் ஷ நேற்றைய தினம் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன் முழு விபரம் வருமாறு:
கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாத குண்டுத் தாக்குதலானது இந்நாட்டின் வரலாற்றில் முக்கியதொரு சம்பவமாகும். அந்த சம்பவத்தின் ஊடாக தமது சமயக் கொள்கைகளுக்கு இணங்காத மக்களை கொலை செய்யும் பயங்கரவாதமொன்று பற்றிய அதிர்ச்சியொன்று முழு நாட்டிலும் பரவியது. நாட்டின் பொருளாதார செயற்பாடுகளும் தடைப்பட்டன. தற்போது மீண்டும் யுத்த காலத்தைப் போன்று பெற்றோர்கள் பாடசாலைகளில் காவல் புரிகின்றனர். யுத்த காலத்தில் இருந்ததை விடவும் இன்று எம்மால் சமய வழிபாடுகளிலும் பாதுகாப்பிற்கு மத்தியிலேயே ஈடுபட வேண்டியுள்ளது. வெசாக், பொசனையும் முன்பு போன்று கொண்டாட முடியாது. விஹாரைகள், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள் என்பவற்றிற்கும் சோதித்ததன் பின்னரே உள்ளே அனுமதிக்கின்றனர்.
தற்போது இலங்கையின் முஸ்லிம் சமூகம் மற்றும் பிற சமயங்கள் என்பவற்றிற்கு இடையில் பாரிய இடைவெளியொன்று காணப்படுகின்றது. குருநாகல் வைத்தியசாலையில் பணிபுரிந்த மருத்துவர் ஒருவரின் கடும்போக்கான சமய சித்தாந்தம் காரணமாக முஸ்லிம் அல்லாத பிற சமயத் தாய்மார்களை கருத்தரியாமைக்கு உள்ளாக்கியுள்ளார் என்ற குற்றச்சாட்டு காரணமாகவும் இந்த அவநம்பிக்கையானது மிகவும் பயங்கரமாக நோக்கும் நிலைக்கு உள்ளாகி வருகின்றது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் நாட்டுத் தலைவர்களும் மிகவும் பொறுப்புடனே செயற்படல் வேண்டும்.
பயங்கரவாதத் தாக்குதலின் இரண்டு மூன்று வாரங்களின் பின்னர், திட்டமிட்ட குழுக்கள் நாட்டின் ஒருசில பிரதேசங்களில் இனவாதக் கலவரம் ஒன்றினை ஏற்படுத்துவதற்காக முஸ்லிம் கடைகளை தாக்குவதை நாம் கண்டோம். எனினும் அதற்கு எதிராக எழுந்த மக்களின் எதிர்ப்பு காரணமாக அந்த வன்முறைகள் விரைவில் முடிவுற்றது. சமூகத்திலும் அந்த வன்முறைகளுக்கு பாரிய எதிர்ப்பு எழுந்தது. கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னரும் இவ்வாறான சம்பவங்கள் 2014 ஆம் ஆண்டிலே இடம்பெற்றன. 2015 ஜனவரி மாதம் 09 ஆம் திகதி பார்க்கும்போது அடித்தவர்களும் அடி வாங்கியவர்களும் பொது வேட்பாளரின் பக்கத்திலேயே இருந்தார்கள். அவ்வாறான சரித்திரம் ஒன்றைத்தான் இம்முறையும் மேற்கொள்ளப் பார்த்தார்கள். எனினும் அந்த முயற்சி கைகூடவில்லை.
தற்போது இடம்பெற்று வருகின்ற அனைத்து விடயங்களும் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுடன் நெருங்கிய தொடர்பினைக் கொண்டுள்ளன என்பதனை நாம் அனைவரும் விளங்கிக்கொள்ள வேண்டும்.
தற்போதைய அரசாங்கமானது 2015 இற்கு முன்னர் பல்வேறு தந்திரங்கள் ஊடாக தம்மைச் சுற்றி அமைத்துக் கொண்ட முஸ்லிம் வாக்குகளை அடுத்த தேர்தலின் போதும் அவ்வாறே தக்கவைத்துக் கொள்ள எதிர்பார்க்கின்றது. எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தின் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஒருவருக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்புள்ளது என்ற அடிப்படையின் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றினைக் கொண்டுவந்தனர். நம்பிக்கையில்லாப் பிரேரணை என்பது பாராளுமன்ற மரபிலே பிரதானமானதொரு விடயமாகும். அது எதிர்க்கட்சியின் உரிமையுமாகும்.
அவ்வாறானதொரு நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டால் பொதுவாக இடம்பெற வேண்டிய விடயம் யாதெனில், அந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்திற்கு எடுத்துக் கொண்டு வாக்கெடுப்பு ஒன்றிற்கு உட்படுத்துவதாகும். அல்லது குறித்த அமைச்சர் பதவியை இராஜினாமா செய்துவிட்டு குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுபட்டதன் பின்னர் மீண்டும் அப்பதவியில் சத்தியப்பிரமாணம் செய்துகொள்வதாகும். அந்த மரபானது சிங்கள, தமிழ், முஸ்லிம் அமைச்சர்கள் அனைவருக்கும் பொதுவானதாகும். முன்னைய காலத்தில் எம்.ஏ. பாக்கிர் மாக்கார், எம்.எச். மொஹமட் போன்ற முஸ்லிம் சபாநாயர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் கொண்டுவரப்பட்ட போதும் அதன் பக்கம் எவரும் இனவாத சிந்தனையில் நோக்கவில்லை.
எனினும், இம்முறை ஒரு முஸ்லிம் அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்ட போது அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் இராஜினாமாச் செய்தார்கள். அது பாராளுமன்ற சம்பிரதாயமல்ல. யு.என்.பி. அரசாங்கம் இந்த சந்தர்ப்பத்தில் முஸ்லிம் அரசியல்வாதிகளை அணிதிரட்டிக் கொண்டு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது அவர்களது வாக்குகளை முழுமையாக பெற்றுக்கொள்வதற்கு முயற்சிக்கின்றமை இதன் மூலம் தெரியவருகின்றது. இவைதான் இதனுள்ளே இடம்பெறுகின்ற விளையாட்டாக உள்ளது. அனைவரும் கூட்டாக இராஜினாமாச் செய்வதன் ஊடாக நம்பிக்கையில்லாப் பிரேரணையையும் இரத்துச் செய்து கொண்டார்கள். ஏனைய பிரச்சினைகளை மறந்து விடுவதற்கும் அதனை பயன்படுத்துகின்றனர்.
தற்போது பிணைமுறி மோசடி பற்றி கதையில்லை. நாட்டின் கடன் சுமை பற்றியும் கதையில்லை. உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பின்னர் இன்னமும் காயப்பட்டோர் மருத்துவமனைகளில் உள்ளனர். அவர்களையும் மறந்துள்ளனர். அடிப்படைவாதிகள் பற்றியும் கதையொன்றுமில்லை. தேடுதல்களும் நின்றுவிட்டன. ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்படுவதுமில்லை. கைது செய்த பயங்கரவாதிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் பற்றியும் கதையில்லை. இந்தச் சூட்டுடன் அரசாங்கமானது நாட்டின் சொத்துக்களை விற்பனை செய்ய முயற்சிக்கின்றது. ஒரே கல்லால் நூற்றுக்கும் மேற்பட்ட குருவிகளைக் கொன்றுள்ளார்கள்.
தமது அரசியல் கருத்திட்டத்திற்காக அவர்கள் இந்நாட்டின் முஸ்லிம் சமூகத்தையும் நன்றாகப் பயன்படுத்தி வருகின்றனர். ஐக்கிய தேசியக் கட்சிக்கு நடுநிலை முஸ்லிம்களைப் போன்றே கடும்போக்கு முஸ்லிம்களின் வாக்கும் தேவை. வாக்குக் கிடைப்பது யாரிடமிருந்து என்று அவர்களுக்கு முக்கியமில்லை. அவ்வாறே முஸ்லிம் தலைவர்களுக்கு தமக்கு அடங்கிச் செல்லும் அரசாங்கமொன்று தேவை. எனினும் இந்த இணைப்பின் மூலம் சாதாரண முஸ்லிம் மக்கள் முகம்கொடுத்துள்ள பிரச்சினைக்கு தீர்வு ஏதும் கிட்டப்போவதில்லை. இந்நாட்டின் பொதுமக்களுக்குத் தேவைப்படுவது சமயவாத பயங்கரவாதத்தில் இருந்து தமது உயிரைப் பாதுகாத்துக் கொள்வதாகும். இந்நாட்டின் சாதாரண முஸ்லிம் மக்களுக்குத் தேவைப்படுவதும் தமது சமூகத்திலிருந்து பயங்கரவாதிகளை அகற்றிவிட்டு இயல்பு வாழ்க்கைக்கு மீண்டும் திரும்புவதாகும்.
இன்று பிற சமயத்தினரை கொலை செய்யும் கொடூர சமயவாத பயங்கரவாதமொன்று உருவாகி உள்ளது. பௌத்த, இந்து, கிறிஸ்தவ அனைத்து சமயத்தவர்களும் தமது பாதுகாப்பிற்காக அந்தப் பயங்கரவாதத்திற்கு எதிராக அணி திரண்டு வருகின்றனர். இந்த சந்தர்ப்பத்தில் நடுநிலை போக்குடைய அதிகமான முஸ்லிம் மக்கள் பயங்கரவாதத்திற்கு எதிராக அந்த அணிதிரள்தல் மூலம் தனிமைப்படுத்தப்படக் கூடாது. கடும்போக்குக் கருத்துக்கள் நாட்டினுள் வந்தமையால் இலங்கை முஸ்லிம் மக்கள் படிப்படியாக ஏனைய இலங்கை சமூகத்தினரிடம் இருந்து விலகிச் சென்றதை முஸ்லிம் சமயத் தலைவர்களும் புத்திஜீவிகளும் உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பின்னர் சுய விமர்சனத்துடன் ஏற்றுக் கொண்டனர்.
1980 காலப் பகுதியிலிருந்து தனியான முஸ்லிம் கட்சிகள் உருவாக்கப்பட்டமையால் அரசியல் துறையிலும் அவர்கள் தனியான ஒரு பயணத்தை ஆரம்பித்தனர். இலங்கை முஸ்லிம் சமூகம் ஏனைய இலங்கைப் பிரசைகளிடமிருந்து தூரப்படுத்தும் இச்செயற்பாட்டின் மோசமான விளைவைத்தான் அண்மையில் அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் இராஜினாமாச் செய்ததன் மூலம் நாம் காணக்கூடியதாக இருந்தது. இவ்வாறு இராஜினாமா செய்த அமைச்சர்கள் எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் என்னைச் சந்திக்க வந்தபோது நான் இவ்விடயம் பற்றி அவர்களை எச்சரித்தேன்.
1980 காலப் பகுதியில் முதல் முறையாக தனியான முஸ்லிம் அரசியல் கட்சி ஒன்றினை ஆரம்பித்த எனது நண்பர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள், சமயவாத அரசியல் கட்சி ஒன்றினை உருவாக்கியதன் தவறை உணர்ந்திருந்தார். அதனால்தான் அவர் இறுதிக் காலத்தில் தேசிய ஐக்கிய முன்னணி எனும் பெயரில் அனைத்து சமயத்தவர்களுக்கும் பொதுவானதொரு அரசியல் கட்சியை உருவாக்கினார். அவரது மரணத்தின் பின்னர், அந்த இணைவு இல்லாது போனது. தனிமையாக செயற்படும் போக்கு மேலும் தீவிரமானது.
இன்றுள்ள முஸ்லிம் அரசியல் தலைவர்கள் முஸ்லிம் வாக்குகளில் மாத்திரம் தங்கி வாழ்வதனால் அவர்களுக்கு அந்தச் சமூகத்திலே உள்ள கடும்போக்காளர்களும் தேவைப்படுகின்றனர். கடந்த காலப் பகுதி முழுவதும் முஸ்லிம் கடும்போக்குவாதம் இந்நாட்டில் விருத்தியடைந்த போதிலும் அதற்கு எதிராக செயற்பட அரசியல் தலைமைகளால் முடியவில்லை. பயந்தனர். அதனால்தான் முஸ்லிம் அரசியல்வாதிகள் சிங்களத்தில் நல்லிணக்கம் பற்றி பேசிவிட்டு தமிழில் இனவாதத்தைக் கக்குகின்றார்கள் என்ற பாரிய குற்றச்சாட்டு எழுந்தது.
இலங்கை முஸ்லிம் சமூகத்திலே கடும்போக்குவாதம் வளர்ந்த விடயம் இன்று நேற்று திடீரென உருவான ஒன்றல்ல. இது பல வருட காலமாக வாதப் பிரதிவாதங்கள், அச்சுறுத்தல்கள், மோதல்கள், பள்ளிவாசல்களுக்கு தீவைத்தல், வீடுகளுக்கு தீ வைத்தல், கொலைகள் அவை அனைத்துடனும் இடம்பெற்ற ஒரு செயற்பாடாகும். அவை அனைத்தும் இடம்பெறுகின்ற போதும் இலங்கையின் அரசியல் தலைவர்கள் தமது அரசியல் ஸ்திரத்தன்மைக்காக அந்தத் தீவிரவாதிகளுக்கு அனுசரணை வழங்கி வளரவிட்டனர். உயிர்த்த ஞாயிறு குண்டு வெடித்ததன் பின்னர் சில தலைவர்கள் “நாம் இந்தளவு நடக்குமென்று எதிர்பார்க்கவில்லை” என்று கூறினர்.
எனவே, நாம் இன்று இடம்பெற்றுள்ள அந்த விடயத்திற்கு தீர்வு ஒன்றினைக் காண வேண்டும். பயங்கரவாதத்திற்கு இந்நாட்டின் ஏனைய மக்கள் சமூகம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை. இந்தப் பயங்கரவாதத்தை நாம் எந்த வழியிலாவது அழித்தொழித்தல் வேண்டும். மக்கள் விடுதலை முன்னணியின் பயங்கரவாதம் காரணமாக சிங்களவர்கள் கைது செய்யப்பட்டனர். சிங்கள வீடுகள் மற்றும் விஹாரைகளில் தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டன. புலிப் பயங்கரவாதம் காரணமாக தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். தமிழ் வீடுகள் மற்றும் கோவில்களில் தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டன. முஸ்லிம் சமூகத்திலிருந்தும் எழுகின்ற பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டுமாயின் நிச்சயமாக முஸ்லிம்களை கைது செய்ய வேண்டும். முஸ்லிம் வீடுகள், வர்த்தக நிலையங்கள், பள்ளிவாசல்கள் என்பவற்றினை தேடுதலுக்கு உட்படுத்த வேண்டும். அவ்வாறு செய்யாது வேரூன்றியுள்ள தீவிரவாதம் ஒன்றின் மூலம் உருவாகியுள்ள பயங்கரவாதம் ஒன்றினை கட்டுப்படுத்த முடியும் என்பது போலியான கருத்தாகும்.
மதவாதப் பயங்கரவாதம் என்பது எமக்கு புதியதொன்றல்ல. உலகின் அனைத்து முஸ்லிம் நாடுகளுக்கும் இது மிகவும் நன்கு பழக்கமான ஒன்றாகும். நடுத்தர போக்கினை உடைய முஸ்லிம் சமூகங்கள்தான் உலகில் அதிகம் உள்ளன. இந்தோனேசியா, மலேசியா முதல் ஓமான், டுபாய், மொரொக்கோ வரையும் முஸ்லிம்கள் அதிகம் வாழ்கின்ற நாட்டு மக்கள் எம்மை போன்று சாதாரண வாழ்க்கையினை வாழ்ந்து வருகின்றனர். முஸ்லிம்கள் அதிகமாக வாழ்கின்ற நாடுகளில் பிற மதங்களைப் பின்பற்றும் ஆயிரக்கணக்கான, இலட்சக் கணக்கான மக்கள் உள்ளனர். தீவிரவாதத்தை ஒழித்திருக்கும் அளவுடன் ஒப்பிடுகையில் அந்த நாடுகளில் பிற மதத்தவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுகின்றது.
இலங்கையில் மாத்திரமல்ல, உலக முஸ்லிம் சமூகத்தின் பிரதான எதிரிதான், தீவிரவாதப் பயங்கரவாதம். முஸ்லிம் நாடுகளை அழிப்பதற்கு ஏகாதிபத்திய பலம் பொருந்தியவர்கள் பயன்படுத்தும் ஒரே ஆயுதம்தான் இந்த இனவாதப் பயங்கரவாதம். அந்த செயற்பாட்டிற்கு வேண்டுமென்றே உதவி செய்து ஏகாதிபத்திய அதிகாரம் படைத்தவர்கள் ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா, லிபியா, யேமன் போன்ற நன்றாக இருந்த நாடுகளை முழுமையாக அழித்துவிட்டனர். எமது நாட்டிற்கும் இன்று நுழைந்திருப்பது தீவிரவாதப் போக்குடைய பயங்கரவாதம் ஊடாக இலங்கைவாழ் முஸ்லிம் சமூகத்திற்கு தீங்கு ஏற்படுவதைத் தவிர எதுவித நன்மையும் ஏற்படப் போவதில்லை. சிறிய பிரிவினரின் அரசியல் தேவைக்காக இந்நாட்டு முஸ்லிம் மக்கள் மற்றைய சமூகத்திலிருந்து ஒதுக்கி தனிமைப்படுத்தி வைப்பதன் பயங்கரமான தன்மையினை தற்போதாவது அவர்களது தலைவர்கள் புரிந்து கொள்வார்களென நான் நம்புகிறேன்.
ஏனைய அனைத்து சமூகத்தினரும் இணைந்து இச்சந்தர்ப்பத்தில் எமது நாட்டிலுள்ள நடுநிலைப் போக்குடைய பெரும்பான்மை முஸ்லிம் மக்களுக்கு பாதுகாப்பினை வழங்குதல் வேண்டும். அவர்களை தனிமைப்படுத்தலாகாது. இந்த நேரத்தில் அனைத்து முஸ்லிம் நபர்களும் தமது புத்திசாதுர்யத்தைப் பயன்படுத்தி, இலங்கை கலாசாரத்தை மதித்து, தமது சமூகத்தை மென்மேலும் படுகுழிக்கு இட்டுச் செல்கின்ற குறுகிய நோக்கம் கொண்ட இனவாத அரசியலிலிருந்து விடுபட வேண்டும். அந்த மாற்றமானது முஸ்லிம் சமூகத்திலிருந்தே வரவேண்டும்.
பயங்கரவாதத்திற்கு எதிராக நாட்டின் பல்வேறு சமூகத்தினர் அணிதிரண்டு வருகின்ற இச்சந்தர்ப்பத்தில் உலகின் பெரும்பான்மை முஸ்லிம்களின் வழியில் சென்று, நடுநிலையான இலங்கை முஸ்லிம் சமூகமும் அந்த அணியில் இணைவார்கள் என்று நாம் எதிர்பார்க்கின்றோம். நான் தலைமைத்துவம் வழங்கும் ஒரு அரசாங்கத்தின் கீழ், எந்தவொரு பயங்கரவாதமும் இந்நாட்டிலே தலைதூக்க இடமளிக்க மாட்டேன் என இச்சந்தர்ப்பத்தில் மக்கள் முன்னிலையில் உறுதியாகக் குறிப்பிட விரும்புகின்றேன்.
vidivelli