அரசாங்க ஊழியர்களின் ஆடை தொடர்பாக பொது நிர்வாக அமைச்சினால் வெளியிடப்பட்ட 13/2019 ஆம் இலக்க 29.05.2019 ஆம் திகதியிட்ட சுற்று நிருபத்தை அமுல்படுத்த வேண்டாமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் செயலாளர் ஈ.எம்.எஸ்.பி. ஏக்கநாயக்க பொது நிர்வாகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவம், கிராமிய பொருளாதார விவகார அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிரிக்கு நேற்று கடித மூலம் அறிவித்துள்ளார்.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி என்.டி. உடகம பொது நிர்வாக அமைச்சின் செயலாளரான தங்களுக்கு 03/06/2019 ஆம் திகதி அனுப்பி வைத்துள்ள சிபாரிசுகளுக்கு அமைய 13/2019 ஆம் இலக்க சுற்று நிருபம் உடனடியாக வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பதை கவனத்திற் கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறேன் எனவும் பிரதமரின் செயலாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் உடகம பொது நிர்வாக அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அரசாங்க அலுவலகங்களில் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காக பொது நிர்வாக அமைச்சினால் வெளியிடப்பட்ட 13/2019 ஆம் இலக்க 29/05/2019 ஆம் திகதியிடப்பட்ட சுற்றுநிருபம் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது. ஆணைக்குழுவுக்கு பல முறைப்பாடுகள் கிடைத்தன. இச்சுற்றுநிருபம் அரச ஊழியர்களின், குறிப்பாக பெண் ஊழியர்களின் அடிப்படை உரிமை மீறல் என முறைப்பாடுகள் கிடைத்தன.
சுற்றுநிருபத்தை ஆராய்ந்த பின் மனித உரிமை ஆணைக்குழு குறிப்பிட்ட சுற்று நிருபம் ஊழியர்களினது அடிப்படை உரிமைகளை மீறியுள்ளமையை உறுதிப்படுத்தியுள்ளதுடன் அச்சுற்றுநிருபம் உடனடியாக வாபஸ் பெற்றுக் கொள்ளப்பட வேண்டுமென பரிந்துரைக்கிறது. ஆண் அரச ஊழியர்கள் காற்சட்டையுடன் மேற்சட்டை அல்லது தேசிய உடையும் பெண் உத்தியோகத்தர்கள் சாரி அல்லது ஒஸரி அணிய வேண்டுமெனவும் சுற்று நிருபம் தெரிவிக்கிறது. கர்ப்பிணி ஊழியர்கள் குறிப்பிட்ட ஆடைக்கு மேலால் மேலதிக உடையொன்று அணியலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது அவர்களது மத அடையாள ஆடையாக இருக்கலாமெனவும் முகம் மறைக்கப்பட்டிருக்கக் கூடாதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த மேலதிக ஆடை என்பது என்னவென தெளிவுபடுத்தப்படவில்லை.
ஆடை தொடர்பான இந்த சட்ட ஒழுங்குகள் அரச அலுவலகங்களுக்கு சேவையினைப் பெற்றுக்கொள்ள வருபவர்களுக்கும் அமுலில் உள்ளது. இந்த சுற்று நிருபத்தினால் ஆண் உத்தியோகத்தர்களுக்குப் பாதிப்பில்லை. ஆனால் பெண் உத்தியோகத்தர்கள் ஸ்கர்ட், பிளவ்ஸ், அபாயா, சல்வார் கமீஸ் போன்ற ஆடைகளை அணிந்து வருகிறார்கள். இந்த சுற்றுநிருபத்தினால் பெண் உத்தியோகத்தர்கள் பல அசௌகரியங்களுக்கு உள்ளாகுவார்கள். முஸ்லிம்கள் தங்கள் கலாசார ஆடை அணிய முடியாத நிலை உருவாகும். ஆரம்பத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக முழுமையாக முகத்தை மறைக்கும் ஆடைக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் அரச அலுவலகங்களில் பாதுகாப்பு கருதி புதிய சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும் அரசதுறை ஊழியர்களுக்கும் சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்காக அரச அலுவலகங்களுக்கு வருகை தருபவர்களுக்கும் இவ்வாறான கட்டாய ஆடையை அமுல்படுத்துவது விவேகமற்ற திட்ட ஒழுங்கற்ற, அரசியலமைப்பின் 12 (1) பிரிவினை மீறுகிற செயற்பாடாகும்.
அத்தோடு பெண்கள் தங்களுக்கு விருப்பமான ஆடையைத் தெரிவுசெய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன் குறிப்பாக சிறுபான்மைப் பெண்களுக்கு பாதிப்பாக அமைந்துள்ளது.
அத்தோடு இந்த சுற்றுநிருபம் காரணமாக குறிப்பாக சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த சாரி மற்றும் ஒசரி அணியாத பெண்கள் அரச தொழில்களிலிருந்தும் விலகிச்செல்லும் நிலைமை ஏற்படும் அல்லது அரச துறையில் தொழில் வாய்ப்புகளை எதிர்பார்க்காத நிலைமை ஏற்படும். இது சுதந்திரமாக தொழிலில் ஈடுபடுவதற்கான உரிமையினை மீறுவதாகவும் தெரிவு செய்யும் உரிமையினை மீறுவதாகவும் அமையும். குறிப்பிட்ட சுற்றுநிருபம் அனைத்துச் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு, குறிப்பாக சாரி மற்றும் ஒஸரி அணியாத பெண்களுக்கு பல அசௌகரியங்களை ஏற்படுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-Vidivelli