எனது இராஜினாமா மூலம் இலங்கை முஸ்லிம் சமூகம் பாதுகாக்கப்படும் என நம்புகிறேன்
இராஜினாமாக் கடிதத்தில் ஹிஸ்புல்லாஹ் சுட்டிக்காட்டு
நான் எனது பதவியை இராஜினாமாச் செய்யாவிட்டாலோ அல்லது பதவி நீக்கம் செய்யப்படாவிட்டாலோ என்னைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் சமூகத்தின் உயிர்களையும் உடைமைகளையும் அழித்தொழிப்பதற்கான காரணமாக அமைந்து விடக்கூடிய வகையிலான அச்சுறுத்தல்களை அவதானிக்க முடிகிறது. எனவேதான் இந்த இராஜினாமா எனது சமூகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் உங்களது கைகளை பலப்படுத்தும் என நான் மிக உறுதியாக நம்புகிறேன் என கிழக்கு மாகாண ஆளுநர் பதவியை இராஜினாமாச் செய்தமை தொடர்பில் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் சுட்டிக்காட்டியுள்ளார். அக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக உலமாக்களும் முஸ்லிம் சமூகமும் தமது கண்டனங்களை பாரிய அளவில் வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில் முஸ்லிம் சமூகத்தை மேலும் அவமானப்படுத்தி மலினப்படுத்தும் வகையில் மிக நுண்ணியமாகத் திட்டமிடப்படுகின்ற செயற்பாடுகள் மூலம் முஸ்லிம் சமூகத்தை அச்சமான சூழ்நிலையில் மூழ்கடிக்கின்ற சூழ்நிலைகளை அவதானிக்க முடிகிறது.
ஆளுநராக நேர்மையாகவும்,விசுவாசமாகவும் சகல சமூகங்களினது நலன்களை பேணும் வகையிலும் நாட்டின் நலன் கருதியும் சேவையாற்றினேன். எனினும் எனது சமூகம் மிக மோசமாக குறி வைக்கப்படுவதுடன் இனவாத சக்திகள் எவ்வித அடிப்படைகளுமின்றி நான் இராஜினாமா செய்ய வேண்டும் என கோருகின்றன. அத்தோடு நான் எனது பதவியை இராஜினாமா செய்யாவிட்டாலோ அல்லது பதவி நீக்கம் செய்யப்படாவிட்டாலோ நான் பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் சமூகத்தின் உயிர்களையும் உடைமைகளையும் அழித்தொழிப்பதற்கான காரணமாக அமைந்துவிடக் கூடிய வகையிலான அச்சுறுத்தல்களை அவதானிக்க முடிகிறது. நான் இராஜினாமா செய்யாவிட்டாலோ அல்லது பதவி நீக்கம் செய்யாவிட்டாலோ எனது சமூகத்தின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படமாட்டாது என்பதும் என்பதையும் நான் உணரத்தலைப்பட்டுள்ளேன்.
எனவே, இவ்வாறானதொரு சூழ்நிலையில் நான் எனது சமூகத்தின் நன்மை கருதி எனது இராஜினாமாவை சமர்ப்பிக்கிறேன். எனது இந்த இராஜினாமா எனது சமூகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் உங்களது கைகளை பலப்படுத்தும் என நான் மிக உறுதியாக நம்புகிறேன் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-Vidivelli