இலங்கையில் ஹலால் சான்றுறுதி பேரவைக்கும் (HAC) ஹலால் சான்றிதழ் நடவடிக்கைகளுக்கும் எதிராக கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் சுதந்திரமானதும் அதிகார முடையதுமான ஜனாதிபதி விசாரணைக்குழு அல்லது ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டு விசாரணை நடத்தி விசாரணை அறிக்கை நாட்டு மக்கள் அனைவருக்கும் பகிரங்கப்படுத்தப்படவேண்டும். அப்போது இதன் உண்மைத் தன்மையை அவர்கள் அறிந்துகொள்வார்கள் என ஹலால் சான்றுறுதி பேரவை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஹலால் சான்றுறுதி பேரவையின் (HAC) பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அலி பத்தாரலி கையொப்பமிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
‘ஹலால் சான்றுறுதி மன்றுக்கும் ஹலால் சான்றிதழ் நடவடிக்கைகளுக்கும் தொடர்ந்து கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. கலகொட அத்தே ஞானசார தேரர் இற்றைக்கு 6 வருடங்களுக்கு முன்பு 2013 இல் இந்தக் குற்றச்சாட்டுகளை மிகவும் அழுத்தமாகப் பகிரங்கமாக முன்வைத்தார்.
இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்தும் இருந்து கொண்டிருக்கின்றன. குற்றச்சாட்டுகள் தொடர்பான உண்மை நிலை உறுதி செய்யப்படாததினாலேயே இந்த சந்தேகம் தொடர்ந்தும் நிலவுகிறது.
அன்று முதல் பல்வேறு வேறு குழுக்களும், தனியார்களும் காலத்துக்காலம் இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்து பரபரப்பான நிலைமையினை உருவாக்குகிறாகள். அரசியல் ரீதியான சம்பவங்கள் நாட்டில் நிகழும் போது ஹலால் விவகாரமும் அதற்கெதிரான குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படுகின்றன.
2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலை யடுத்து முஸ்லிம்களின் முழுவாழ்க்கை முறைக்கும் நடவடிக்கைகளுக்கும் சவால்கள் எழுந்துள்ளன. இவற்றுள் ஹலால் சான்றிதழும் உள்ளடங்குகிறது. இது தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது.
இந்த நிலைமையினையடுத்து தற்போதைய சூழலில் ஹலால் சான்றிதழுக்கு எதிராக பொது மக்களின் கருத்தினைத் திருப்புவதற்கு மிகவும் சாதகமான நிலையாகியுள்ளது.
நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல், மக்களின் உயிர்ப் பலிகள் அனைத்து சமூகத்தின் மத்தியிலும் வேதனையையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது.
ஹலால் சான்றிதழுக்கு எதிராகவும் ஹலால் சான்றுறுதி பேரவைக்கு எதிராகவும் எதிர்ப்பு வெளியிட்டு ஒமல்பே சோபித தேரர் கடந்த மே மாதம் 13 ஆம் திகதி நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு கடிதமொன்றினைக் கையளித்தார்.
அந்தக் கடிதத்தில் பல கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
அவற்றில் மிகவும் கடுமையான குற்றச்சாட்டு. ஹலால் சான்றிதழ் வழங்குவதற்கு அளவு கடந்த கூடிய கட்டணம் அறவிடப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ள தாகும்.
இந்த கூடிய கட்டணம் முஸ்லிம் அல்லாத நுகர்வோருக்கே அறவிடப்படுவதாகவும் பில்லியன் கணக்கான வருமானம் பெற்றுக் கொள்ளப்படுவதாகவும் குறிப்பிடப் பட்டுள்ளது. இந்த நிதி பள்ளிவாசல்கள் நிர்மாணிப்பதற்கும் மற்றும் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு நிதி வழங்குவதற்குமே பயன்படுத்தப்படுகிறது என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இவ்வாறான குற்றச்சாட்டுகளை முழுமையாக விசாரிப்பதற்கு சுதந்திரமான அதிகாரமிக்க ஜனாதிபதி விசாரணையொன்று நடத்தப்படவேண்டும் அல்லது ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும். விசாரணை அறிக்கை வெளியிடப்பட்டு ஹலால் விவகாரத்தின் உண்மை நிலை பகிரப்படுத்தப்பட வேண்டும்.
ஹலால் சான்றுறுதி நிறுவனம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சுதந்திரமானதும் நேர்மையானதுமான விசாரணையொன்றினை நடத்துமாறு வேண்டிக் கொள்கிறது.
ஜனாதிபதி விசாரணைக்குழு அல்லது ஆணைக்குழு ஹலால் சான்றுறுதி நிறுவனம் தொடர்பில் விசாரணை நடத்தி ஆய்வு செய்வதன் மூலம் தற்போதைய பிரச்சினைகள் அல்லது சமூக அமைதியின்மையின் வீரியத்தைத் தடுக்கலாம். இல்லையேல் அது முழு நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் பொருளாதாரத்துக்கும் தீங்கினை ஏற்படுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-Vidivelli