ரிஷாத், ஹிஸ்புல்லாஹ், அசாத்சாலி இன்று நண்பகலுக்கு முன் பதவி நீக்கப்பட வேண்டும்
இன்றேல் நாடு முழுவதும் திருவிழா என்கிறார் ஞானசார
அமைச்சர் ரிசாத் பதியுதீனும், கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வும், மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலியும் நாளை (இன்று) பகல் 12 மணிக்கு முன்பு பதவி நீக்கப்பட வேண்டும். இல்லையேல் அவர்களாகவே பதவி விலக வேண்டும். 12 மணிவரையுமே காலக்கெடு இல்லையென்றால் நாடு முழுவதும் திருவிழாவை காண வேண்டி நேரிடும் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
நேற்று கண்டிக்கு விஜயம் செய்த ஞானசார தேரர், கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் செய்து தலதா மாளிகை வளாகத்தில் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரரைச் சந்தித்து அவரது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார். அதன்பின்பு ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளியிடுகையிலே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்;
‘அத்துரலிய ரதன தேரர் நாட்டினதும் நாட்டு மக்களினதும் நன்மை கருதியும் முஸ்லிம் அடிப்படைவாதத்தை நாட்டிலிருந்தும் துடைத்தெறிவதற்காகவுமே குறிப்பிட்ட மூவரையும் பதவி விலக்கக் கோரி போராட்டத்தில் இறங்கியுள்ளார். இது நியாயமான போராட்டமாகும். சிறை சென்ற எனக்கு மரணம் ஒரு பொருட்டல்ல. எனது உயிரைக் கொடுத்தேனும் நாட்டை முஸ்லிம் அடிப்படைவாதத்திலிருந்தும் மீட்டெடுப்பேன். நாட்டு மக்கள் தங்களுக்குள் உள்ள கருத்து வேறுபாடுகளைப் புறந்தள்ளி முஸ்லிம் பிரச்சினையில் ஒன்றிணைய வேண்டும்.
அமைச்சர் ரிசாத் பதியுதீன், மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி, கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் மூவரையும் அரசாங்கம் திங்கட்கிழமை (இன்று) 12 மணிக்கு முன்பு பதவி விலக்கவேண்டும். அரசாங்கம் தவறினால் நாடு முழுவதும் பெளத்த தேரர்கள் போராட்டத்தில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
முஸ்லிம் அடிப்படைவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் எந்த அரசியல் கட்சியுடனும் நிபந்தனைகளின்றி இணைந்து கொள்வதற்கு தயாராக இருக்கிறேன்’ என்றார்.
பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் கடந்த வெள்ளிக்கிழமை அமைச்சர் ரிசாத் பதியுதீன் மற்றும் ஆளுநர்கள் அசாத் சாலி, ஹிஸ்புல்லாஹ் ஆகியோரை உடன் பதவி விலக்கக்கோரி சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார்.
எனது உயிரைக் கொடுத்தேனும் நாட்டைக் காப்பாற்றுவதற்கு நான் தீர்மானித்து விட்டேன். அடிப்படைவாதிகளான ரிசாத் பதியுதீன், அசாத் சாலி, ஹிஸ்புல்லாஹ் மூவரையும் ஜனாதிபதி பதவி விலக்குவார் என்ற நம்பிக்கை எனக்குண்டு என அத்துரலியே ரதன தேரர் தெரிவித்தார்.
-Vidivelli