‘நாட்டு மக்கள் அனைவருக்கும் ஒரு சட்டமே அமுலில் உள்ளது. சமய ரீதியில் சட்டங்கள் மாறுபடமாட்டாது. அரபு மொழி, அரேபிய சட்டம் மற்றும் ஷரீஆ சட்டம் என்பனவற்றை ஒரு போதும் இந்நாட்டில் நடைமுறைப்படுத்த முடியாது’ என உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சில் நடைபெற்ற அரச அதிகாரிகளைத் தெளிவு படுத்தம் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது, நாட்டில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளுடன் கூடிய பெயர் பலகைகளையும் அறிவிப்புப் பலகைகளையும் மாத்திரமே காட்சிப்படுத்த முடியும். அரபு மொழியில் எந்த அறிவிப்புகளையும் காட்சிப்படுத்த முடியாது. வீதிகளின் பெயர்கள் கூட சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மாத்திரமே பொறிக்கப்பட்டிருக்க வேண்டும். அரபு மொழியில் காட்சிப் படுத்தப்பட்டுள்ள பெயர்பலகைகள் மற்றும் அறிவிப்புப் பலகைகளை அப்புறப்படுத்துமாறு அரச அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளேன்.
கிழக்கு மாகாணத்தில் சில பகுதிகளில் அரபு மொழியிலான பெயர்ப்பலகைகள், அறிவிப்புப் பலகைகள் காணப்படுவதாக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. இதனால் அரபு மொழியிலான அனைத்து அறிவிப்புக்களையும் பெயர் பலகைகளையும் அகற்றி விடுமாறு கோரி அனைத்து திணைக்களங்களின் செயலாளர்கள் மற்றும் அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்கள், மாகாண உள்ளூராட்சி நிறுவனங்களின் செயலாளர்கள் என்போருக்கு சுற்று நிருபம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மற்றும் ஜனாதிபதியின் ஆலாசனையின் பேரிலே சுற்றுநிருபம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் அரசியலமைப்பு யாப்பின் அடிப்படையில் மூன்று மொழிகளை மாத்திரமே உபயோகிக்க முடியும். மூன்று மொழிகளும் சிங்களம், தமிழ், ஆங்கிலமாகும். அரபு மொழியில் பெயர் மற்றும் அறிவிப்பு பலகைகள் காட்சிப் படுத்தப்பட்டிருந்தால் அவை அப்புறப்படுத்தப்பட வேண்டும்.
நாட்டில் இரண்டு சட்டங்கள் இருக்க முடியாது. ஒரு சட்டமே அமுலில் இருக்க வேண்டும். எந்த சமயத்தைச் சேர்ந்தவர்களென்றாலும் அவர்கள் இந்தச் சட்டத்துக்கு கட்டுப்பட்டவர்களாவர். ஷரீஆ சட்டத்தை இங்கு அமுல் நடத்த முடியாது. கல்லெறிந்து கொலை செய்வது, கழுத்தை வெட்டி கொலை செய்வதெல்லாம் இங்கு முடியாது. அதற்கு ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது.
இந்நாட்டில் 2010 –2015 ஆண்டு காலப்பகுதியில் பாராளுமன்றத்தில் அவசர சட்டங்கள் சில நிறைவேற்றிக் கொள்ளப்பட்டுள்ளன. இந்த சட்டங்களுக்குள் ஷரீஆ சட்டமும் உள்ளடங்கியிருக்கிறது. சில அரச வர்த்தமானிகள் கூட இக்கால கட்டத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த அரச வர்த்தமானிகள் அனைத்தையும் இரத்துச் செய்வதற்குத் தீர்மானித்துள்ளோம். தவறான முறையில் நிறைவேற்றிக்கொள்ளப்பட்டுள்ள சட்டங்களில் திருத்தங்களைச் செய்யவுள்ளோம்.
அவசர அவசரமாக நிறைவேற்றிக் கொள்ளப்பட்ட சட்டத்தின் கீழ் பல அரச சார்பற்ற நிறுவனங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவை தொடர்பில் தேடிப்பார்த்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளோம். ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசனையின் பேரில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றார்.
-Vidivelli