வெள்ளிக்கிழமைகளில் பள்ளிவாசல்களில் நிகழும் குத்பாக்கள் சிங்கள மொழியிலும் அமைய ஏற்பாடு செய்யப்போவதாக தபால் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் கூறியுள்ளார். நாம் நீண்ட காலமாகப் பெரும்பான்மை இனத்தோடு நெருக்கமாக வாழ்ந்துவரும் சமூகமாவோம். அது மென்மேலும் நீடிக்க வேண்டும். அதற்காக வெள்ளிக்கிழமை குத்பாக்களை சிங்கள மொழியில் நிகழ்த்துங்கள்.
இச்சமயங்களில் ஏனைய மதங்களின் குருமார்களையும் அங்கு அழையுங்கள். அதுபோல் 317 அரபு மத்ரஸாக்களையும் முறையாக நிர்வகிக்கப் புதிய சட்டத்திருத்தத்தையும் அறிமுகப்படுத்த எதிர்பார்க்கிறேன் எனவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில், கடந்த காலத்தில் மத்ரஸாக்களின் பாடத்திட்டத்தில் ஒரு குறிப்பிட்ட முறை இருக்கவில்லை. அதனால்தான் இவ்விடயத்தில் இப்பிரச்சினை ஏற்படும் என முன்பே நான் ஒரு தீர்மானத்துக்கு வந்திருந்தேன். புதிதாக மத்ரஸாக்கள் ஆரம்பிக்கப்படுவதைத் தடுக்க வேண்டும் என முடிவு செய்திருந்தேன். அதுபோல் தற்போதிருக்கும் மத்ரஸாக்களையும் கூட சரியான முறைக்குள் கொண்டு வரவேண்டும் எனவும் சிந்தித்திருந்தேன். இவற்றில் கற்பிக்கப்படுவதைப் பற்றி விசேஷ ஒரு முகப்பட்ட பாடத்திட்டம் அவசியமாகும். இவற்றைச் சோதிக்க வேண்டும். மதக்கல்வியோடு நாட்டின் அடிப்படைக் கல்வியும்கூட போதிக்கப்பட வேண்டும். இவை யாவுமுள்ள பாடத்திட்டத்தையே எதிர்காலத்தில் மத்ரஸாக்களில் அமுலாக்க எண்ணுகிறேன் என்றார்.
நாடு முழுக்க நூற்றுக்கணக்கான பள்ளிவாசல்கள் இருக்கின்றன. ஒரு சில ஆலிம்களுக்கு மட்டுமே சிங்கள மொழி தெரியும். ஏனைய பெரும்பான்மை ஆலிம்களின் நிலை என்ன? எடுத்த எடுப்பில் அதில் தேர்ச்சி பெற்றுவிட முடியுமா? ஐந்து வருட தவணை கொடுத்தாலாவது பலர் கற்றுக்கொள்ள வாய்ப்பு ஏற்படும். ஜும்ஆ தொழ வருவோரில் 100 க்கு 90 சதவீதமானோருக்கு சிங்கள மொழி தெரியாது. வடக்கு கிழக்கைப் பொறுத்தவரை இந்த விதிப்புரை அங்குள்ள ஆலிம்களுக்கும் தொழவருவோருக்கும் அறவே பொருந்தாது.
ஆக சிங்கள மொழியைக் குத்பாக்களில் கட்டாயப்படுத்துவதானது தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட 90 வீத முஸ்லிம்களுக்கும் மிகப் பெரும் பாதிப்பாகும். தமக்குரிய மார்க்கத்தை உரிய முறையில் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியாத நிலை இதனால் உருவாகிவிடுகிறது. முறைப்படி சிங்களமொழி தெரியாத கதீப்மார் எதையும் தப்பும் தவறுமாகக் கூற இடப்பாடும் உண்டு.
ஒருவனுக்குத் தெரியாத மொழியில் அவனை விசாரிக்கவும் முடியாது. அவனுக்குத் தெரியாத மொழியில் அவனது வாக்கு மூலத்தைப் பதிவு செய்யவும் முடியாது. அவனுக்குத் தெரியாத மொழியில் தீர்ப்பு வழங்கவும் முடியாது. குறைந்த பட்சம் அசல் மொழி பெயர்ப்பு இருக்க வேண்டும். ஏனெனில் மொழியாதிக்கமும் மனித உரிமை மீறலாகும்.
சுருங்கக் கூறின் காணி உறுதிப்பத்திரம், பிறப்பு இறப்பு, திருமண அத்தாட்சிப்பத்திரங்கள், கொடுக்கல் வாங்கல் அடமானப் பத்திரங்கள், வாடகைகளுக்கான உறுதிப்பத்திரங்கள் யாவும் ஒவ்வொருவருக்கும் புரிந்த மொழியிலேயே அமைந்திருக்க வேண்டும். இந்நிலையில் சிங்கள மக்களுக்கு மட்டுமே உரிய சிங்கள மொழியிலேயே தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட முஸ்லிம்களும் செயற்பட வேணடும் என வற்புறுத்தப்படுவதற்குக் காரணங்கள் என்ன?
· சிங்கள மக்கள் மொழி அடிப்படையிலுள்ள சமூகம் என்பதால் அந்த மொழியில் அனைத்தும் நிகழ்வதையே வற்புறுத்துகிறார்கள்.
· சிங்கள மக்கள் நாகரிக முன்னேற்றத்துக்காக ஆங்கில மொழி மீது அலாதி மோகம் கொள்வதோடு கடல் கடந்து தொழில் தேட ஜப்பான், கொரியா முதலிய நாடுகளின் மொழிகளையும் விருப்புடன் கற்கிறார்கள். தேசிய மொழியாக தமிழ் அங்கீகரிக்கப்பட்டிருப்பதால் பரீட்சைப் பெறுபேற்றுக்காகவே தமிழ் கற்கிறார்கள்.
1956ஆம் ஆண்டு சிங்களம் மட்டும் அரச கரும மொழியாக ஆக்கப்பட்ட போது தமிழ் மக்கள் தமிழையும் சம அரச கரும மொழியாகக் கோரியபோது முஸ்லிம்கள் அதை ஆதரித்திருக்க வேண்டும். அல்லது சிங்களத்தைத் தாய் மொழியாக ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால் இப்போது சிங்கள கதீப்மாரும் சிங்களத்தைத் தாய்மொழியாகக் கொண்ட முஸ்லிம்களும் இருப்பார்கள். இஸ்லாம் மொழியை அடிப்படையாகக் கொண்டதல்ல. மதத்தை அடிப்படையாகக் கொண்டோரே முஸ்லிம்களாவர். எனினும் சிங்களவரும் தமிழர்களும் மொழியை அடிப்படைகளாகக் கொண்டவர்கள். எனினும் சிங்களவரதும் தமிழரதும் மத கலாசாரங்கள் முஸ்லிம்களுக்கு மாறுபட்டவையாகும்.
அதனால் தான் தமிழரின் இன ரீதியிலான தனித்துவ அடையாளங்களைப் பேரினவாதிகள் ஒடுக்குவதுபோல் முஸ்லிம்களின் மத ரீதியினால தனித்துவ அடையாளங்களையும் ஒடுக்க நினைக்கிறார்கள். அதற்கு நல்ல வசதியாக பாஸ்கு ஞாயிறு தினத்தில் ஒரு முஸ்லிம் தீவிரவாதக் குழு கிறிஸ்தவ ஆலயங்களையும் உல்லாச உணவகங்களையும் தாக்கியமை அமைந்துவிட்டது.
2013 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை (5 ஆண்டு வரை) இலங்கை முஸ்லிம்கள் பேரினவாதிகளின் கொடூர தாக்குதல்களுக்கு உட்பட்டிருந்தார்கள். 2018 ஆம் ஆண்டு ஆட்சிமாற்றம் ஏற்பட்டு அவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில் முஸ்லிம் தீவிரவாதிகள் கிறிஸ்தவ ஆலயங்களிலும் உல்லாச ஹோட்டல்களிலும் அழிவை ஏற்படுத்தியதானது பேரினவாத சக்திகள் மீண்டும் தாம் இடை நிறுத்தியிருந்த முஸ்லிம் விரோத பேரழிவுகளைத் தொடர களம் அமைத்துக் கொடுத்திருக்கிறது. அந்த அழிவுகளால் ஏற்பட்ட அச்ச உணர்வாலேயே அமைச்சர் ஹலீம் மார்க்க விடயத்திலும் பாரிய விட்டுக்கொடுப்பைச் செய்ய நினைக்கிறார். சந்தர்ப்ப சூழலுக்கேற்ப இத்தகைய விட்டுக்கொடுப்பு மதியூகமானது என்றபோதும் தற்காலிக நிவாரணம் பெறும் இந்நோக்கம் மார்க்கத்தையே முதன்மையாகக் கொண்ட முஸ்லிம்களுக்கு எதிர்காலத்தில் பாரிய பின்னடைவையே ஏற்படுத்திவிடும்.
உதாரணமாக 1948 ஆம் ஆண்டு ஆங்கிலேய ஆட்சியாளர் முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகளுக்கும் காப்பீடாக 29 ஆம் ஷரத்தை வழங்கியிருந்தார்கள். 1972 ஆம் ஆண்டு குடியரசு யாப்பில் அது இயற்றப்படாததால் அடிப்படை உரிமைகள் யாவும் சலுகைகளாகின. அதாவது பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையாலும் சிறுபான்மைகளின் எந்த உரிமையையும் பறிக்க முடியாது என்பதே காப்பீடாகும். 29 ஆம் ஷரத்து நீக்கப்பட்ட பின் அடிப்படை உரிமை இல்லை. சலுகை மட்டுமே என்றாகியது. அதாவது பெரும்பான்மைச் சமூகம் விரும்பினால் விரும்பிய அளவு சிறுபான்மைகளுக்குக் கிடைக்கும் என்றாகியது.
முடிவில் 1954 ஆம் ஆண்டு கிடைத்த முஸ்லிம் தனியார் சட்டமும் 1978 ஆம் ஆண்டு கிடைத்த முஸ்லிம் விவகார அமைச்சுமே எஞ்சின. தற்போது முஸ்லிம் விவாக விவாகரத்து வகுப்பு வாரிசுரிமை அடங்கி முஸ்லிம் தனியார் சட்டம் தீர்வின்றி கிடப்பிலேயே இருக்கின்றது. முஸ்லிம் விவகார அமைச்சும் கூட முஸ்லிம்களின் செயற்பாடுகளுக்கு வாய்ப்பாக்கக் கிடைத்தும் இருக்கும் வசதிகளையும் இழக்கப்பார்க்கிறது.
குத்பாக்களின் போது ஏனைய மதங்களின் குருமார்களையும் அங்கு அழையுங்கள் எனக் கூறப்படுகிறது. சிங்கள மொழியில் குத்பா ஓதுவதாயினும் கூட ஏனைய மதங்களின் குருமார்களும் அங்கு அமர்ந்திருக்க வேண்டுமாம். இந்த வலியுறுத்தல்கள் முஸ்லிம்கள் தீவிரவாதிகளோ பயங்கரவாதிகளோ அல்லர் என்பதை நிரூபிக்கவேயாகும். இதே நிலைப்பாட்டை அரபு மத்ரஸாக்கள் விடயத்திலும் கையாள அமைச்சர் ஹலீம் விழைகிறார்.
· 317 அரபு மத்ரஸாக்களையும் முறையாக நிர்வகிக்கப் புதிய சட்ட திருத்தத்தையும் அறிமுகப்படுத்தப்போகிறாராம்.
· கடந்த காலத்தில் மத்ரஸாக்களின் பாடத்திட்டங்களில் ஒரு குறிப்பிட்ட வரைமுறை இருக்கவில்லையாம்.
· இத்தகைய பிரச்சினை ஏற்படும் என அமைச்சர் ஹலீம் முன்பே தீர்மானத்துக்கு வந்திருந்தாராம்.
· புதிதாக மத்ரஸாக்கள் அமைக்கப்படுவதை இவர் தடுக்கப்போகிறாராம்.
· தற்போது இயங்கிக்கொண்டிருக்கும் அரபு மத்ரஸாக்களையும் கூட சரியான வரைமுறைக்குள் இவர் கொண்டு வருவாராம்.
· அவற்றில் கற்பிக்கப்படுவது பற்றி விசேட ஒருமுகப்பட்ட பாடத்திட்டம் அவசியமாம்.
· மத்ரஸாக்கள் சோதிக்கப்பட வேண்டுமாம்.
· மார்க்கக் கல்வியோடு நாட்டின் அடிப்படைக் கொள்கையையும் கூட போதிக்கப்பட வேண்டுமாம்.
· இவையாவுமுள்ள பாடத்திட்டத்தையே எதிர்காலத்தில் மத்ரஸாக்களில் அமுலாக்கப்படுமாம்.
இவையும் கூட இலங்கை முஸ்லிம்கள் தீவிரவாதிகளோ பயங்கரவாதிகளோ அல்லர் என்பதை நிரூபிக்கவேயாகும் என நினைக்கிறேன். இதனால் புதிய ஒத்தொருமித்த பாடத்திட்டத்தை 317 அரபு மத்ரஸாக்களுக்கும் வகுக்கவேண்டியிருக்கிறது. இதன் அடிப்படை தடை செய்யப்பட்ட அமைப்புக்களின் கருத்துக்களை அகற்றுவதேயாகும் என நினைக்கிறேன்.
வருடாந்தம் ரமழான் மாதம் பிறை பார்க்கும் விடயத்திலேயே அடிபிடிபட்ட சமுதாயத்தை, அடுத்தடுத்த நாட்களில் தலை நோன்பு நோற்ற சமுதாயத்தை, இரு பெருநாட்கள் கொண்டாடிய சமுதாயத்தை, முஸ்லிம் தனியார் சட்டத்தில் ஏக முடிவுக்கு வர 10 ஆண்டுகள் கழிந்தும் கூட முடியாத சமுதாயத்தையே அமைச்சர் ஹஸீம் ஒரே பாடத்திட்டத்துக்கு கொண்டுவர விழைகிறார்.
அதாவது, 317 அரபு மத்ரஸாக்களிலும் ஒரே வகையான பாடத்திட்டம் அமைய வேண்டும். ஒரே வகையான விளக்கமே இருக்க வேண்டும். சிங்கள மொழி கட்டாயமாக்கப்பட வேண்டும். நாட்டைப் பற்றிய பொது அறிவும் இருக்க வேண்டும் என்பதே இதற்கான அர்த்தமாகும். குத்பாவின் போது ஏனைய மதங்களின் குருமார் ஆஜராக வேண்டும் என்பதன் அர்த்தம் என்ன? ஓதப்படும் குத்பாக்களில் தீவிரவாதமோ பயங்கரவாதமோ இல்லை என்பதை உறுதி செய்து கொள்வதற்காகவா?
இதுகால வரை முழு நாட்டுக்கும் பொதுச் சட்டம் கொண்டு வருமாறு பலரும் வலியுறுத்தி வந்தனர். புதிதாக நாட்டின் தலைமை பிக்குவும் கூட அதை வலியுறுத்தியிருக்கிறார். ஜனாதிபதிக்கும் கடிதமும் எழுதியிருக்கிறார். (ரெச 14.05.2019) இதன்மூலம் யாழ்ப்பாணத்துக்கு ஒல்லாந்தர் வழங்கி தற்போதும் நடைமுறையில் இருக்கும் தேச வழமைச் சட்டமும் ஆங்கிலேயர் வழங்கிய கண்டியர் சட்டமும் முஸ்லிம் தனியார் சட்டமும் நீக்கப்பட்டு விட வேண்டும் என்றே ஆகிறது. யாழரசும் கண்டியரசும் முஸ்லிம்களும் அக்காலத்தில் தனித்தனி கலாசார அடையாளங்களைக் கொண்டிருந்ததாலேயே அவ்வாறு வழங்கப்பட்டிருந்தன.
தேச வழமைச்சட்டமும் கண்டியர் சட்டமும் குறிப்பிட்ட இரு பிரதேசங்களை மட்டுமே குறிப்பிடும் சட்டங்களாகும். முஸ்லிம் தனியார் சட்டம் அவ்வாறானதல்ல. முழு இலங்கை முஸ்லிம்களையும் உள்ளடக்கியதாகும். எனவே முஸ்லிம் தனித்துவ தனியார் சட்டத்தை முஸ்லிம்கள் இழந்துவிடுவார்களாயின் தேசத்தின் தனிப்பிரிவினர் என்னும் அடையாளத்தையே பறிகொடுத்து விடுவார்கள். முஸ்லிம்களின் இத்தகைய தேசிய அடையாளத்தைக் காட்டவே ஆங்கிலேயர் முஸ்லிம் தனியார் சட்டத்தை வழங்கியிருந்தார்கள். இது முழுமையான ஷரீஆ அல்ல முஸ்லிம் சமூகத்தை தனியாக அடையாளப்படுத்தும் ஏற்பாடாகும். பொதுச்சட்டத்தின் பெயரால் இது எடுபட்டுப்போகுமாயின் முஸ்லிம்களின் தனித்துவம் அழிந்து காலப்போக்கில் பேரின தேசியத்தால் கரைந்துபோவார்கள். சிலர் மட்டும் ஒரு விடயத்தில் ஈடுபட்டதற்காக அந்த சமூகமே பொறுப்பு எனக் கூறலாமா? சில தமிழர் ஆயுதம் தூக்கிப் போராடினார்களே தவிர எல்லா தமிழர்களும் அல்லவே. அதுபோல் மக்கள் விடுதலை முன்னணி ஆயுதப் போராட்டம் நிகழ்த்தியதே தவிர எல்லா சிங்களவர்களும் அல்லர். இத்தகைய அறிவு பூர்வ அணுகுமுறைக்கு மாறாக உணர்ச்சிபூர்வ அணுகுமுறை உருவானதே பாரிய அழிவுகளுக்கு வித்திட்டிருந்தது.
தீவிரவாதம் சிங்கள, தமிழ், முஸ்லிம் ஆகிய மூன்று சமூகத்தினர் மத்தியிலும் உருவாகியிருக்கிறது. இவற்றுக்கான காரணங்களைக் கண்டறிந்து தீர்வு காணுவதே பரிகாரமாகும். முதலாளித்துவத்துக்கு எதிராகவே சிங்கள தீவிரவாதம் போராடியது. சம அந்தஸ்தைக் கோரியே தமிழ்த் தீவிரவாதம் போராடியது. மொழி வேறுபாடுகளே இவ்விரண்டினதும் எதிரெதிர் நிலைப்பாடுகளாக இருக்கின்ற போதும் தமிழரின் கடவுள்களை சிங்களவர் சிலரும் பூஜிக்கிறார்கள். புத்தரை வழிபட்ட தமிழர் சிலரும் அக்காலத்தில் வாழ்ந்திருக்கிறார்கள்.
இலங்கையில் முஸ்லிம்கள் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிருந்த போதும் தமிழர் என அடையாளப்படுத்தப்படவில்லை. காரணம் முஸ்லிம் சமூகம் மதத்தைக் கொண்டு அடையாளப்படுத்தப்பட்ட சமூகமாகும். 2013 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை காபிர், ஜிஹாத், ஷிர்க் என்னும் விடயங்களை உரிய முறையில் கூற வேண்டுமே. அரபு மொழியையும் கூட சந்தேகத்துடன் பார்க்கிறார்களே. அப்படியானால் குத்பாக்களில் ஒரு அரபுச் சொல்லையும் கூட கூற முடியாமற் போகுமே. அதன் அர்த்தத்தை சிங்களத்தில் கூறி விளக்கி அனுமதி பெற வேண்டும் எனவும் கூறப்பட்டு விடுமே. அந்த சிரமத்தைப் போக்க சிங்கள மொழியிலேயே அனைத்தையும் ஓத வேண்டும் எனக் கூறப்பட்டு விடாதா? பாளி மொழியை பெளத்தரும் சமஸ்கிருதத்தை ஹிந்துக்களும் லத்தீன் மொழியை கிறிஸ்தவரும் மதிப்பது போலத்தானே முஸ்லிம்கள் அரபு மொழியை மதிக்கிறார்கள். அப்படியானால் அரபு மொழிவிடயத்தில் எதற்கு இத்தனை கெடுபிடி ஏன் குர்ஆன் ஹதீஸ் விடயத்தில் இத்தனை இழுவழுப்பு? முஸ்லிம் போதகர்கள் சர்வதேசத்திலிருந்து இலங்கைக்கு வருவதைத் தடுக்க வேண்டும் என ஏன் வலியுறுத்துகிறார்கள்.
முஸ்லிம்களை முஸ்லிம் பயங்கரவாதத்திடமிருந்து காப்பாற்றவே என்கிறார்கள். அப்பாவி தமிழர்களை பயங்கரவாத புலிகளிடமிருந்து காப்பாற்றவே மனிதாபிமான நடவடிக்கை எடுத்ததுபோல் அப்பாவி முஸ்லிம்களையும் பயங்கரவாத முஸ்லிம்களிடமிருந்து காப்பாற்றவே இவ்வாறெல்லாம் செய்கிறோம் என்பார்களோ?
குறித்த விடயங்களை உபதேசிக்கவோ குத்பாக்களில் ஓதவோ கூடாது. குறித்த விடயங்களை மத்ரஸாக்களில் கற்பிக்கவோ கற்கவோ கூடாது. குறித்த விடயங்களை எழுதவோ பிரசுரிக்கவோ கூடாது. குறித்த விடயங்களை ஒலிபரப்பவோ ஒளிபரப்பவோ கூடாது எனக் கண்காணிப்பது சிரமம் அவற்றை விடவும் சிரமம் எல்லா விடயங்களிலும் தலையிட்டு சல்லடை போடுவதாகும். எனவே இவற்றை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிடமே விட்டுவிட வேண்டும். அதன் ஒருங்கிணைப்பு இனிமேலாவது ஏற்பட வேண்டும். இதில் அரசோ அரசியல்வாதிகளோ தலையிடக்கூடாது.
அரபு நாகரிகத்தைப் பேணி இலங்கையராய் வாழ விரும்பாதோர் இலங்கையிலிருந்தும் போய்விட வேண்டும் என விமல் வீரவன்ச விரட்டுகிறார். இவர் நீண்ட காற்சட்டையோடு கைச்சட்டையும் அணிந்திருக்கிறாரே இவை ஆங்கிலேயரின் ஆடைகள் அல்லவா? இடுப்பைச் சுற்றிய சீத்தைத் துணி எங்கே? ஓசரி எங்கே? உடலோடு ஒட்டிய ஆபாச ஆடைகளா இலங்கையருக்குரியன? இப்படியே போனால் அரபு மொழியில் பெயர்கள் வைக்கவே கூடாது என்பார்கள் போல் தெரிகிறது.
இஸ்லாம் சுன்னத் செய்வதை சுகாதாரத்துக்காக வலியுறுத்துகிறது. அது இலங்கையருக்கு உரியதல்ல. முஸ்லிம் நாட்டுக்குப் போய் விடுங்கள் எனக் கூறுவார்களா? இலங்கை ஒரு பல்லின நாடு என்பதை அறியாமல்தான் பேரினவாதிகள் பிதற்றுகிறார்கள்.
vidivelli