அண்மையில் குருநாகல், கம்பஹா மாவட்டங்களில் இனவாதிகளால் முஸ்லிம்களுக்கெதிராகப் பாரிய அழிவு நாசகாரம் விளைவிக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானோர் ஈடுபட்டுள்ள போதிலும் மிகவும் சொற்பதொகையினரே கைது செய்யப்பட்டுள்ளனர். அதுவும் அவசரகாலச் சட்டம் அமுலில் இருந்த போதிலும் மினுவாங்கொடையில் கைதான 32 பேரை பிணையில் விடுவித்துமுள்ளனர். இதற்குப் பொறுப்புக்கூற வேண்டியது யார்? இந்நிலையில் அரசின் சட்டம், ஒழுங்கு குறித்து சந்தேகமே எழுந்துள்ளது என்று பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கூறினார்.
கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்றக் கூட்டத்தொடரில் உரையாற்றும்போதே முஜிபுர் ரஹ்மான் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அதன் போது அவர் மேலும் கூறியதாவது,
ஏப்ரல் 21 தாக்குதலில் 250 க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ மக்கள் பலியானார்கள். 500 க்கும் மேற்பட்டோர் சிறு, பெருங்காயங்களுக்குள்ளாகினார்கள். இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். அது விடயமாக அரசும் பாதுகாப்புத் தரப்புகளும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன. இச் செயலில் ஈடுபட்டோர், உடந்தையானோர், ஆதரவாக இருந்தோர் என்று பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது நடந்து மூன்று வாரங்களின் பின்னர் நாடு சுமுக நிலைக்குத் திரும்பியுள்ளது. அரச, தனியார் நிறுவனங்களின் பணிகள் வழமைக்குத் திரும்பியுள்ளன. இந்த வகையில் திருப்திப்படலாம்.
நாட்டிலிருந்து பயங்கரவாதம் முற்றாகத் துடைத்தெறியப்பட வேண்டும். இது விடயத்தில் அரசு கூடிய கவனம் செலுத்தவேண்டும். ஏனெனில் 30 வருட யுத்தத்தில் நாம் நன்கு அனுபவங்களைப் பெற்றுள்ளோம். அதனால் அத்தகையதொரு சூழ்நிலை மீண்டும் உருவாக யாரும் விரும்பமாட்டார்கள். ஆனால் சுமார் 9 வருடங்கள் அமைதியாக இருந்த நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் தலைகாட்டியுள்ளது. இதனையும் கண்டிப்பாக ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது.
இப்பயங்கரவாதத்தைக் காரணம் காட்டி இதன் போர்வையில் குழுவொன்று நாட்டில் இன வன்செயல்களுக்கு தூபமிட்டுக்கொண்டிருக்கிறது.
ஏப்ரல் 21 தற்கொலைத் தாக்குதல் இடம்பெற்று மூன்று வாரங்களின் பின்னர் குருநாகல் மாவட்டத்தில் சில பகுதிகளிலும் கம்பஹா மாவட்டத்தில் மினுவாங்கொடைப் பிரதேசத்திலும் மிகவும் திட்டமிட்ட அடிப்படையிலேயே மிகப் பிரமாண்டமான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முஸ்லிம்கள் பாரிய அழிவு நாசங்களைச் சந்தித்துள்ளனர்.
கடந்த சில காலங்களாக ஒரு சில குழுக்கள் சிங்கள – முஸ்லிம் மோதல்களுக்கு தூபமிட்டுக் கொண்டு வந்ததை நாம் அறிவோம். சுமார் 4 ½ வருடங்களுக்கு முன்னர் அளுத்கம – தர்ஹா நகரில் இன வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. கடந்த வருடம் மார்ச் மாதம் கண்டி –திகனயில் கோரத்தாண்டவமாடியது. ஆனால் வன் செயலில் சம்பந்தப்பட்ட குழுக்களின் கைது விடயத்தில் அரசு அசமந்தமாகவே நடந்துவந்தது. கைது செய்யப்படவோ, அக்குழுக்களின் நடவடிக்கைகளைத் தடுக்கவோ அரசு தவறி விட்டது. இதன் விளைவாகவே நாசகாரக் குழுக்களின் கை ஓங்கியே வருகிறது.
அதன் எதிரொலியாகவே குருநாகல், நாத்தாண்டியா பகுதிகளில் திட்டமிட்ட நாசகாரம் விளைவிக்கப்பட்டுள்ளது.
இவற்றுடன் தொடர்புள்ள மாகாண, பிரதேச சபை அரசியல்வாதிகள் இனம்காணப்பட்டுள்ளனர். இவர்கள் குறித்து பொலிஸாருக்கும் முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் இதுவரை இவர்கள் கைது செய்யப்படவில்லை.
பல நூற்றுக்கணக்கானோர் இவ் வன்முறைகளில் ஈடுபட்டபோதிலும் கைதுகள் மிகவும் சொற்பமாகவே இடம்பெற்றுள்ளன. பாதுகாப்புக்குப் பொறுப்பாகவுள்ள ஜனாதிபதியிடம் இது விடயமாக எனது அதிருப்தியை முன்வைக்கிறேன். நடுநிலையாகச் செயற்பட்டு தராதரம் பாராது நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இப்பயங்கரவாதம் தொடராது முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். தவறினால் நாட்டின் முன்னேற்றமே தடைப்பட்டுப்போகும்.
2015 ஆம் ஆண்டிலிருந்தே இனவாதம் இல்லாமலாக்கப்படும் என்று பாரிய எதிர்பார்ப்புடனேயே நாம் இருந்து வந்தோம். இனக் குரோதத்துக்கெதிரான சட்ட மூலம் ஒன்று கொண்டு வரப்படும் என்று எதிர்பார்த்தோம். தேர்தல் மேடைகளில், குறிப்பாக ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்களின்போது இனக்குரோதத்திற்கெதிரான சட்டமூலம் கொண்டு வரப்படுவது குறித்து நாம் மேடைதோறும் முழங்கினோம். ஆனால் 4 ½ வருடங்கள் கடந்த நிலையிலும் அது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை.
அண்மைய வன்செயலாளர்கள் குறித்த ஏராளமான முறைப்பாடுகள் உள்ளன. இதில் எதிரணியைச் சேர்ந்த பலர் உள்ளனர். எதிரணி ஆதரவாளரான பாடகர் மதுமாதவ அரவிந்த வன்செயல் நடக்கும் இடத்தில் நடமாடுவது சீ.சீ.ரீ.வி. காணொலியில் நன்கு பதிவாகியுள்ளது. சம்பவம் நடந்து கொண்டிருக்கும் குறித்த தினம் இரவு 7.25 மணிக்கு அவர் தோன்றும் காட்சியைக் காணக்கூடியதாகவுள்ளது. ஆனால் இன்னும் அவர் கைது செய்யப்படவில்லை. இதே போன்று குருநாகலில் ஈடுபட்ட அரசியல்வாதிகளும் கைதாகவில்லை. இவர்கள் விடயத்தில் அழுத்தம் கொடுப்போர் யார்?
(குறுக்கீடு – பிரதி பாதுகாப்பு அமைச்சர்) சம்பந்தப்பட்டோரைக் கைது செய்து நடவடிக்கை எடுக்கும்படியே ஜனாதிபதியால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி யாருக்கும் அழுத்தம் கொடுக்கவில்லை.
முஜிபுர் ரஹ்மான் தொடர்ந்து தெரிவிக்கையில்,
வன்முறையில் மினுவாங்கொடை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு நூற்றுக்கணக்கானோர் அடாவடித்தனம் புரிந்தும் 32 பேரே கைது செய்யப்பட்டனர். அவசரகால சட்டத்தின்கீழ் கைதுகள் இடம்பெற்ற போதிலும் 32 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்நாட்டின் சட்டம் கேள்விக்குறியாகியுள்ளது. மக்கள் சட்டம், நீதித்துறைமீது நம்பிக்கையிழந்துள்ளனர். இவர்களை விடுவிக்க அழுத்தம் கொடுத்தது யார்? இதற்கு யார் பொறுப்புக்கூறுவது? இனவாத வன்முறைகள் மேலும் வளரவே இந்நடவடிக்கைகள் வழிவகுத்து விடுகின்றன.
நாம் பல இன மோதல்களுக்கும் முகம் கொடுத்து அனுபவம் பெற்றுள்ளோம். அப்பாவி மக்களின் சொத்துகள் அழிக்கப்படுவதும் சூறையாடப்படுவதும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இனியாவது அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வரசும் இதனைச் செய்யத் தவறினால் இதற்கும் அதேகதிதான் ஏற்படும்.
சட்டம் ஒரு தரப்புக்குச் சாதகமாகவும் மற்றத் தரப்புக்கு இறுக்கமாகவும் பிரயோகிக்கப்படும் பாரபட்சம் மாற்றியமைக்கப்பட வேண்டும். பாரபட்சம் காட்டி நாட்டை மனிதாபிமானமற்ற காட்டுமிராண்டி யுகத்துக்குத் தள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இந்த வன்முறைகளின் போது 34 பள்ளிவாசல்கள் உடைத்தும் எரித்தும் சேதமாக்கப்பட்டுள்ளன. 180 வீடுகள் நாசமாக்கப்பட்டுள்ளன. 140 க்கும் மேற்பட்ட கடைகள், 45 வாகனங்கள் சேதமாக்கப்பட்டுள்ளன. மிகவும் பாரிய இரு தொழிற்சாலைகள் முற்றாக நாசமாக்கப்பட்டுள்ளன. அதில் ஒரு தொழிற்சாலை 700 மில்லியன் ரூபா அளவில் நஷ்டமேற்பட்டுள்ளது. இத்தொழிற்சாலை உள்ள திவுலப்பிட்டியைச் சேர்ந்த சுமார் 90 வீதமான ஏழைத் தொழிலாளிகளே வேலை செய்து வந்துள்ளனர். இது நாட்டின் பொருளாதாரத்திற்கு விழுந்த பாரிய அடியாகும்.
இப்பாதிப்புக்குள்ளானோருக்கு வழங்கும் நஷ்டஈட்டுப் பணமும் மக்கள் பணம் என்பதை உணரவேண்டும். எனவே வன்முறையில் ஈடுபடுவோரை எத்தகைய தராதரமும் பாராது கைதுசெய்து விசாரணைக்குட்படுத்தி உரிய தண்டனைகளைப் பெற்றுக்கொடுப்பதில் அரசு பின்நிற்கக் கூடாது. தவறினால் அது நாட்டுக்குத்தான் பாதிப்பாக அமையும். நாட்டின் முன்னேற்றத்திற்குத் தடையாக அமையும்.
VIDIVELLI