வன்முறைகளில் ஈடுபடுவோருக்கு அவசரகால சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை
அரசாங்கம் திட்டவட்டமாக அறிவிப்பு
வன்முறைகளில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக சிவில் மற்றும் அரசியல் சட்டத்தின் கீழும், அவசரகால சட்டத்தின் கீழும் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இம்மாதம் 12 மற்றும் 13 ஆகிய தினங்களில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் பொலிஸார் மற்றும் முப்படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதோடு, வன்முறைகளுடன் தொடர்புடைய குழு கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கடந்த 13 ஆம் திகதி குருநாகல் மாவட்டத்தில் குருநாகல் , வாரியபொல, குளியாபிட்டிய மற்றும் நிகவரெட்டிய ஆகிய பிரதேசங்களிலும், புத்தளம் மாவட்டத்தில் சிலாபத்திலும், கம்பஹா மாவட்டத்தில் மினுவாங்கொடை ஆகிய பிரதேசங்களில் இவ்வாறு வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியிருந்தன. இந்த விடயம் தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அமைச்சரவைக்குமிடையில் விசேட கலந்துரையாடலொன்று சம்பவ தினத்தன்று இரவு இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலின் பின்னர் எடுக்கப்பட்ட தீர்மானத்தினடிப்படையில் குறித்த பிரதேசங்களில் ஊடரங்குச் சட்டம் பிறப்பிக்குமாறு பொலிஸாருக்கு பிரதமர் பணிப்புரை விடுத்தார்.
மினுவங்கொடை பிரதேசத்தில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய 14 சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மினுவாங்கொடை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ஏனைய 5 பேரும் நேற்று முன்தினம் (14) கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர்களும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
வடமேல் மாகாணத்தில் இடம்பெற்ற வன்முறைகளுடன் தொடர்புடைய 60 இற்கும் மேற்பட்ட சந்தேகநபர்கள் நேற்று முன்தினம் 14 ஆம் திகதி மாலை 4 மணியளவில் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 9 பேர் ஹெட்டிபொல நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் இம்மாதம் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களுக்கு எதிராக சிவில், அரசியல் உரிமைகள் தொடர்பாக சர்வதேச சமவாய திட்டத்தின் கீழ் விசாரணைகளை முன்னெடுக்குமாறு பிரதமரால் பொலிஸாருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
அத்தோடு இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதற்கு பதில் பொலிஸ் அதிகாரிகள் இருவர் தலைமையில் இரு குழுக்களை நியமித்து கொழும்பு மற்றும் ஏனைய பிரதேசங்களில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுமாறு பதில் பொலிஸ்மா அதிபருக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
நிலைமையை பார்வையிடுவதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க சம்பவ இடத்திற்கு நேரடியாக விஜயம் செய்ததன் பின்னர் அங்கு முன்னெடுக்கப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சரவையுடனும் கலந்துரையாடியுள்ளார்.
-Vidivelli