சமூக வலைத்தளங்களை நிதானமாக பயன்படுத்துவோம்
சமூக வலைத்தளங்கள் சமூகத்தின் நலனுக்கும், சமூக மேம்பாட்டுக்குமே பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால், எமது நாட்டில் சமூக வலைத்தளங்கள் இனவாதக் கருத்துக்களையும், உணர்ச்சியூட்டும் இனவாத புகைப்படங்களையும் பதிவேற்றி வருகின்றமை மிகவும் ஆபத்தானதாகும். அண்மைக்காலமாக நாட்டில் இனவாத வன்முறைகள் பரவுவதற்கு சமூக வலைத்தளங்களே காரணமாய் அமைந்துள்ளன.
நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மதியம் சிலாபத்தில் ஒரு பதற்றநிலை உருவாகுவதற்கு முஸ்லிம் வர்த்தகர் ஒருவரின் முகநூல் பதிவொன்றே காரணமாய் அமைந்துள்ளது. முகநூல் பதிவினையடுத்து சிலாபத்தில் வன்முறைகள் பதிவாகின. முகநூலில் பதிவேற்றிய முஸ்லிம் வர்த்தகர் தாக்கப்பட்டார். சிலாபத்திலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் உடனடியாக மூடப்பட்டன.
சிலாபம் – மைக்குளம் ஜும்ஆ பள்ளிவாசல் மற்றும் வட்டக்கலி தௌஹீத் பள்ளிவாசல் என்பன தாக்குதல்களுக்குள்ளாகின. இராணுவத்தினரும், பொலிஸாரும் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். ஞாயிறு மதியம் முதல் திங்கள் அதிகாலை 4 மணி வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டது.
சமூகம் பீதியிலும், அச்சத்திலும் உறைந்து போயுள்ள நிலையில் முகநூல் பதிவுகள் ஏனைய இன மக்களை உணர்ச்சியூட்டும் வகையில் அமையக்கூடாது. முஸ்லிம் சமூகம் இது விடயத்தில் மிகவும் பொறுப்புடன் செயற்படவேண்டும்.
அரசாங்கம் நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கு சமூக வலைத்தளங்களுக்கு தற்காலிக தடை விதித்துள்ளது. சமூக வலைத்தளங்களே இன்று இனவாதத்துக்கும், வன்முறைகளுக்கும் தூபமிடுபவைகளாக மாறியுள்ளன.
சிலாபம், வர்த்தகர் தனது முகநூல் பக்கத்தில் ‘Don’t laugh more 1 day u will cry’ என்றே பதிவேற்றம் செய்திருந்தார். ஆங்கிலத்திலான இந்தப் பதிவை தவறாக விளங்கிக் கொண்ட குழுவொன்றே குழப்பம் விளைத்துள்ளது.
‘அளவுக்கதிகமாக சிரித்தால் ஒருநாள் அழ வேண்டும்’ என்ற முகநூல் பதிவினை மொழிபெயர்த்த சிங்கள இளைஞர்கள் ‘இன்று மட்டும்தான் நீங்கள் சிரிப்பீர்கள். நீங்கள் அழ இன்னும் ஒருநாள் இருக்கிறது’ என பதிவிட்டுள்ளதாக எண்ணி அதன் உண்மைத் தன்மையை கேட்டு வர்த்தகரின் கடைக்கும், பொலிஸுக்கும் சென்று வாதிட்டதனையடுத்தே பிரச்சினை உருவாகியிருக்கிறது.
சமூக வலைத்தளங்களை பலர் தவறாகப் பயன்படுத்துவதே நாட்டில் இன, மத ரீதியிலான முறுகல் நிலைக்குக் காரணமாகும். பாதுகாப்புச் செயலாளர் சாந்த கோட்டேகொட சமூக வலைத்தளங்கள் நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளதாக கருத்து தெரிவித்துள்ளார்.
நாட்டிலுள்ள சிங்கள, பௌத்த மக்களை வெட்டிக் குத்தி கொலை செய்வதற்குத் திட்டங்கள் இருப்பதாக பௌத்த குருமார் சிலர் பிரசாரம் செய்வதாக சில சமூக வலைத்தளங்கள் போலியான தகவல்களை வெளியிட்டுள்ளன. இத்தகவல்கள் சமூக நடவடிக்கைகளுக்குப் பெரும் பாதிப்பையே ஏற்படுத்தும் என்பதை மக்கள் உணர வேண்டும் எனவும் பாதுகாப்புச் செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளர்.
தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படுத்தும் ஏதேனும் தகவல் ஒன்று கிடைக்குமாயின் அதனை சமூக வலைத்தளங்களில் உலாவவிடுவதற்கு முன்பு பாதுகாப்பு தரப்பினருக்குத் தெரியப்படுத்த வேண்டும். அல்லாதபட்சத்தில் அது பொது மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
முஸ்லிம்கள் சந்தேக கண் கொண்டு நோக்கப்பட்டுவரும் இன்றைய சூழலில் முஸ்லிம்களின் முகநூல் பதிவேற்றங்களை இடும்போது ஒரு முறைக்கு பல தடவைகள் வாசித்து சிந்தித்தே இட வேண்டும். சிலாபத்தில் இடம்பெற்றுள்ள சம்பவங்கள் இதற்கு சிறந்த உதாரணமாகும்.
இனவாத நோக்கற்ற சிலாபம் வர்த்தகரின் முகநூல் பதிவு திரிபுபடுத்தப்பட்டு நோக்கப்பட்டுள்ளமையை நாம் பாடமாகக் கொள்ள வேண்டும்.
நாட்டில் வன்முறைகளும், இனவாதமும் தோற்றம் பெறும்போது மாத்திரம் சமூக வலைத்தளங்களை தற்காலிமாக தடை செய்வதால் நிரந்தர தீர்வு கிடைக்கப் போவதில்லை. இதற்கொரு நிரந்தர தீர்வினை அரசாங்கம் இனங்கண்டு செயற்படுத்த வேண்டும்.
vidivelli