நாட்டில் அசாதாரண நிலைமையொன்று உருவாகியுள்ளபோதும் இவ்வருடத்துக்கான ஹஜ் ஏற்பாடுகளில் எந்தத் தாமதமும் ஏற்படாதெனவும், இவ்வருடத்துக்கான ஹஜ் கடமைக்காக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் தெரிவு செய்யப்பட்டுள்ள ஹஜ் விண்ணப்பதாரிகள் தங்களது பயணத்திற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறு அரச ஹஜ் குழு வேண்டியுள்ளது.
இதேவேளை இவ்வருட ஹஜ் முகவர்களுக்கான அனுமதிப்பத்திரங்கள் நாளை புதன்கிழமை வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹஜ் ஏற்பாடுகள் தொடர்பில் அரச ஹஜ் குழுவின் தலைவர் கலாநிதி எம்.ரி.சியாத் கருத்து தெரிவிக்கையில், இவ்வருடம் தெரிவுசெய்யப்பட்டுள்ள 92 ஹஜ் முகவர்களில் 50 ஹஜ் முகவர் நிலையங்களுக்கு நாளை அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படவுள்ளன. பல ஹஜ் முகவர்கள் கூட்டாகச் சேர்ந்து ஒரு ஹஜ் முகவர் நிலையத்தின் அனுமதிப்பத்திரத்தின் கீழ் பயணிக்கவுள்ளமையினாலே அனுமதிப்பத்திரங்களின் எண்ணிக்கையில் குறைவு ஏற்பட்டுள்ளது.
தெரிவுசெய்யப்பட்டுள்ள ஹஜ் விண்ணப்பதாரிகள் தாம் பயணிக்கவுள்ள ஹஜ் முகவர் நிலையங்களுக்கு தம்மால் இயலுமான தொகையை முற்பணமாகச் செலுத்துவதில் எந்தத் தடையுமில்லை என்றார்.
vidivelli