வடமேல் மாகாண முஸ்லிம் கிராமங்களில் பள்ளிகள் , கடைகள் , வீடுகள் மீது தாக்குதல்
ஆயிரக்கணக்கானோர் வயல்வெளிகளில் தஞ்சம்
வடமேல் மாகாணத்திற்குட்பட்ட பல்வேறு முஸ்லிம் கிராமங்களில் நேற்று முன்தினம் இரவும் நேற்று பகல் வேளையிலும் கட்டவிழ்க்கப்பட்ட வன்முறைகள் காரணமாக 10 இற்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் சேதமாக்கப்பட்டுள்ளதுடன் பல வீடுகள், கடைகள் மற்றும் வாகனங்களும் தாக்கி சேதமாக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக அப் பகுதி வாழ் முஸ்லிம்கள் பெரும் பதற்றமடைந்ததுடன் அச்சம் காரணமாக தமது வீடுகளை விட்டும் வெளியேறி வயல் வெளிகளில் தஞ்சமடைந்தனர்.
வட மேல் மாகாணத்தில் குறிப்பாக குருணாகல் மாவட்டம், குளியாபிட்டி மற்றும் நிக்கவரட்டி பகுதிகளிலுள்ள முஸ்லிம் கிராமங்களை இலக்குவைத்து திட்டமிட்ட குழுவொன்றினால் தொடர் தாக்குதல்கள் நடாத்தப்பட்டன. இவ்விரு பிரதான நகரங்களையும் மையப்படுத்திய சுமார் 30 முஸ்லிம் கிராமங்கள் வரை நேற்று இரவு 7 மணியுடன் நிறைவடைந்த 48 மணி நேரத்தில் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.
கினியம, அனுக்கன, கொட்டம்பிட்டிய ஹெட்டிபொல, பூவெல்ல, தோராகொட்டுவ உள்ளிட்ட கிராமங்களிலேயே அதிகளவு சேதங்கள் பதிவாகியுள்ளன.
5 ஜும்ஆ பள்ளிவாசல்கள் உட்பட 9 பள்ளிவாசல்கள், முஸ்லிம்களுக்குச் சொந்தமான வர்த்தக நிலையங்கள், வீடுகள் மற்றும் வாகனங்கள் இதன்போது சேதமாக்கப்பட்டுள்ளன.
இந் நிலையில் இந்த வன்முறைச் சூழல் குருநாகல் மாவட்டத்தின் ஏனைய பகுதிகளுக்கும் பரவும் அளவுக்கு தீவிரமடைந்தமையால் அதனைக் கட்டுப்படுத்த நேற்று மாலை 4.00 மணி முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் முழு வட மேல் மாகாணத்துக்கும் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
ஊரடங்கின் போது வன்முறைகள் இடம்பெறுவதை தடுக்க பிரதேசத்தின் பொலிசாருக்கு மேலதிகமாக இராணுவத்தினரும் கடற்படையினரும் பாதுகாப்பு பணிகளுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று முன் தினம் குளியாபிட்டிய பொலிஸ் பிரிவில் ஹெட்டிபொல வீதியில் நான்கு முஸ்லிம் கடைகள் மீது திட்டமிட்ட கும்பல் ஒன்று நடாத்திய தாக்குதல்களுடன் குளியாபிட்டிய பகுதியில் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் ஆரம்பமாகியிருந்தன. குறித்த தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தில் நால்வர் கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், நேற்று முன் தினமும் நேற்றும் குளியாபிட்டிய, பிங்கிரிய, தும்மலசூரிய மற்றும் ஹெட்டிபொல ஆகிய பொலிஸ் பிரிவுகளில் பிற்பகல் 2.00 மணியாகும் போது பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.
நிலைமை மோசமடைந்ததை அடுத்து பின்னர் நிக்கவரட்டி பொலிஸ் வலயத்தில் பதிவான சம்பவங்களை மையப்படுத்தி கொபேய்கனே மற்றும் ரஸ்னாயக்கபுர பகுதிகளுக்கும் பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. எனினும் அவற்றையும் மீறி வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்படலாம் எனும் அச்சம் மற்றும் சில உளவுத் தகவல்களை மையப்படுத்தி பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் உத்தரவுக்கு அமைய முழு வட மேல் மாகாணத்துக்கும் பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.
நேற்று முன் தினம் குளியாபிட்டிய பொலிஸ் வலயத்துக்குட்பட்ட, பிங்கிரிய, தும்மலசூரிய மற்றும் குளியாபிட்டியவில் பொலிஸ் ஊரடங்கு அமுலில் இருந்த போது, பிங்கிரிய பொலிஸ் பிரிவில் பாரிய வன்முறைகள் பதிவாகியுள்ளன.
கினியமவில் தாக்குதல்:
பிங்கிரிய தொகுதி, பிங்கிரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கினியம பகுதியில் நேற்று முன்தினம் இரவு இனவாதிகளினால் மூன்று பள்ளிவாசல்கள் தாக்கி பலத்த சேதங்களுக்குள்ளாக்கப்பட்டுள்ளன. பள்ளிவாசல்களின் கண்ணாடிகள் உடைத்து நொறுக்கப்பட்டுள்ளதுடன், மின்விசிறிகளும் தளபாடங்களும் சேதங்களுக்குள்ளாக்கப்பட்டுள்ளன.
நேற்று முன்தினம் ஊரடங்குச் சட்டம் அமுலிலிருந்த வேளையிலே பள்ளிவாசல்கள் தாக்குதல்களுக்குள்ளாக்கப்பட்டதாக சம்பவத்தை நேரில் கண்ட கினியம கிராமத்து மக்கள் ‘விடிவெள்ளி’யிடம் தெரிவித்தனர்.
கினியம குளத்திலிருந்து துப்பாக்கி ரவைகள் கண்டெடுக்கப்பட்டதாக பிரசாரம் செய்தே இந்தத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இக் கிராமத்தில் 8 மோட்டார் சைக்கிள்களும் சேதமாக்கப்பட்டுள்ளன. அப்ரார் தக்கியா பள்ளிவாசலுக்குள் நுழைந்த இனவாதிகள் அங்கு சிறுநீர் கழித்து பள்ளி வாசலை அசுத்தப்படுத்தியிருக்கிறார்கள். இப்பள்ளிவாசல் பலத்த சேதங்களுக்குள்ளாக்கப்பட்டுள்ளன. பள்ளிவாசல் உடைமைகளும் உடைத்து நொறுக்கப்பட்டுள்ளன.
கினியம ஆயிஷா தக்கியா பள்ளிவாசலுக்குள் நுழைந்த காடையர்கள் அங்கிருந்த குர்ஆன் பிரதிகளைத் தீயிட்டு எரியூட்டியுள்ளார்கள். நூற்றுக்கணக்கானோர் இந்தத் தாக்குதல் சம்பவத்தில் பங்குகொண்டதாகவும் அதிகமானோர் வெளிப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் கினியம மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனையடுத்து கினியம பகுதியில் பள்ளிவாசல்களுக்குப் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின்பேரில் 6 பேர் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை ” கினியமவில் பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது. முஸ்லிம்கள் பீதியில் முடங்கிக் கிடக்கிறார்கள். ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கிறது. திங்கட்கிழமை இரவு இனவாதிகள் கினியமவில் மூன்று பள்ளிவாசல்களைத் தாக்கி சேதப்படுத்தி விட்டார்கள். அப்ரார் பள்ளிவாசல் பலத்த சேதங்களுக்குள்ளாகியுள்ளது. அவர்கள் பள்ளிவாசலினுள் சிறுநீர் கழித்து அசுத்தப்படுத்தியிருக்கிறார்கள். ஆயிஷா தக்கியா பள்ளிவாசலின் குர்ஆன் பிரதிகள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன” என பள்ளிவாசல்களின் தலைவர் மௌலவி எம்.ஐ.எம். சித்தீக் விடிவெள்ளியிடம் தெரிவித்தார்.
கினியமவில் நேற்று முன்தினம் இடம்பெற்ற வன்செயல்கள் தொடர்பில் விளக்கமளிக்கையிலே அவர் இவ்வாறு கூறினார். இந்த தாக்குதல்கள் திட்டமிட்டே மேற்கொள்ளப்பட்டுள்ளன. கினியம குளத்தில் ஆயுதங்கள் இருப்பதாகக் கூறி பாதுகாப்புப் படையினர் இரண்டு நாட்களாக தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். அதன் பின்பு குளத்திலிருந்து எவ்வித சந்தேகத்திற்கிடமான பொருட்களும் கிடைக்கவில்லை எனக்கூறி திரும்பிச் சென்றார்கள்.
இதனையடுத்து சிலர் குளத்திலிருந்து துப்பாக்கி ரவைகள் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறியே இந்தத் தாக்குதல்களை மேற்கொண்டனர். 8 மோட்டார் சைக்கிள்களும் சேதமாக்கப்பட்டுள்ளன. ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த போதே இந்த வன்முறைகள் நடந்துள்ளன. அமைச்சர் நளின் பண்டார ஸ்தலத்துக்கு வந்து நிலைமையைப் பார்வையிட்டார்.
கினியம பிரதேசத்தில் 550 முஸ்லிம் குடும்பங்கள் வாழ்கின்றன. இதுவரைகாலம் இப்பகுதியில் எவ்வித பிரச்சினையும் இடம்பெறவில்லை. தாக்குதல்களை நடாத்தியவர்களில் வெளியாரும் சம்பந்தப்பட்டிருந்தனர்.
தொடர்ந்தும் முஸ்லிம்களாகிய நாம் ஏனைய இனத்தவர்களுடன் சமாதானமாகவே வாழ விரும்புகிறோம். இரு தரப்பினரும் சமாதானமாக பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுவது நல்லதென நினைக்கிறேன். அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளத் திட்ட மிட்டுள்ளோம்” என்றார்.
கினியம கிராமத்தைச் சேர்ந்த ஏ.எஸ். ஜவுபர் சம்பவத்தை விளக்குகையில், தக்வா பள்ளிவாசலுக்கு அருகில் இருக்கும் குளத்தில் துப்பாக்கி ரவைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் பள்ளிவாசலுக்கு வருவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது. நாம் 119 ஐ தொடர்பு கொண்டு முறைப்பாடு செய்தோம். பொலிஸ் ஜீப்பொன்று வந்தது. இதனைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கானவர்கள் பள்ளிவாசலைத் தாக்குவதற்கு வந்தார்கள். அவர்களிடம் கற்கள் இருந்தன. கூச்சலிட்டார்கள். பள்ளிவாசலை கற்களால் தாக்கினார்கள். அதன் பின்பு இராணுவம் வந்தது. இராணுவம் வந்த சந்தர்ப்பத்திலே பள்ளிவாசலை உடைத்து உள்ளே சென்றார்கள்.
இன்று (திங்கட்கிழமை) அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினருமான எம்.என்.நஸீர் வந்து பார்வையிட்டார். ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த போதே அவர்கள் பள்ளிவாசல்களைத் தாக்கினார்கள் என்றார்.
இதேவேளை, பள்ளிவாசல்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் தாக்கப்பட்டு பதற்றமான நிலைமை உருவாகியுள்ள குளியாப்பிட்டி, ஹெட்டிபொல, பிங்கிரிய மற்றும் தும்மலசூரிய பொலிஸ் பிரிவுகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு பிரிவினருக்கு மேலதிகமாக இராணுவத்தையும் கடமையில் ஈடுபடுத்தும்படி எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கத்திடம் கோரியுள்ளதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன முஸ்லிம் முன்னணியின் பொதுச் செயலாளர் அப்துல் சத்தார் தெரிவித்தார்.
குருநாகல் மாவட்டத்தின் பல பகுதிகளில் பள்ளிவாசல்களும், வர்த்தக நிலையங்களும் தாக்கப்பட்டுள்ள நிலையில் முஸ்லிம்களுக்கும், பள்ளிவாசல்களுக்கும் உரிய பாதுகாப்பினை வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு வேண்டுகோள் விடுத்ததையடுத்தே எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கத்தை தொடர்பு கொண்டு இக்கோரிக்கையை விடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
குளியாபிட்டி சம்பவம்
குளியாப்பிட்டி நகரில் ஆறு முஸ்லிம் கடைகள் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளன. மேலும் ஒரு கடையும், வீடொன்றும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. இச்சம்பவத்தின்போது ஒருவர் படுகாயமடைந்துள்ளார். கரந்திப்பொலயில் தாக்கியா ஒன்றும் தாக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நேற்று பண்டுவஸ்நுவர, ஹெட்டிபொல நகர் பள்ளிவாசலும், கொட்டம்பிட்டிய பள்ளிவாசல்களும் தாக்கப்பட்டுள்ளன. யாயவத்த கிராமத்தில் 5 வீடுகள் மற்றும் கடையொன்றும் தாக்குதல் களுக்குள்ளாகியுள்ளன.
சிலாபத்தின் அமைதி:
இதேவேளை நேற்று முன்தினம் முகநூலில் இடப்பட்ட பதிவு ஒன்றை மையப்படுத்தி சிலாபம் நகரில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்க்கப்பட்டன. இதன் காரணமாக அங்கு 5 பள்ளிவாசல்கள் தாக்குதலுக்கு இலக்காகின. இதில் ஒரு பள்ளிவாசல் முற்றாக சேதமடைந்துள்ளது. இதன்போது முகநூலில் பதிவிட்ட நபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை நேற்றைய தினம் சிலாபம் நகரில் அமைதிய நிலவியதாகவும் எனினும் மக்கள் அச்சத்துடனேயே இருப்பதாகவும் சிலாபம் பிரதி மேயர் சட்டத்தரணி சாதிகுல் அமீன் தெரிவித்தார்.
மினுவாங்கொடையிலும் தாக்குதல்:
இதற்கிடையில் நேற்று மாலை மினுவாங்கொடை பிரதேசத்திலும் முஸ்லிம்களுக்குச் சொந்தமான கடைகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதனையடுத்து கம்பஹா மாவட்டத்தில் இன்று காலை 6 மணி வரை ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.
நாடளாவிய ரீதியில் ஊரடங்கு:
இதேவேளை வன்முறைச் சம்பவங்கள் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு பரவுவதை தடுக்கும் வகையில் நேற்றிரவு 9 மணி முதல் இன்று அதிகாலை 4 மணி வரை ஏனைய பிரதேசங்களுக்கு ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது.
vidivelli