பயங்கரவாதிகளை காப்பாற்ற முடியாது
ஐ.எஸ். இல் பயிற்சியெடுத்தோர் மீது பாய்ச்ச நாட்டில் சட்டம் போதாது என்கிறார் பிரதமர்
பிரபாகரனுக்கு பின்னர் கே.பியை கொண்டுவந்து சலுகைகள் கொடுத்தது போன்று எம்மால் பயங்கரவாதிகளை காப்பாற்ற முடியாது. சிரியா சென்று ஐ.எஸ். அமைப்பில் ஆயுதப் பயிற்சியெடுத்த பின்னர் இலங்கையில் நீண்ட காலமாக வசிக்கும் நபர்கள் குறித்து தகவல்கள் இருந்தும் இலங்கையில் சட்டதிட்டங்களை மீறாத வகையில் அவர்களை கைதுசெய்ய முடியாது. அவ்வாறு கைதுசெய்யும் சட்டம் எமது நாட்டில் இல்லை. இந்த சட்டத்தில் அவ்வாறான எந்த சலுகைகளும் இல்லை. இதற்கு மேலும் பல சட்டங்களை உள்வாங்கிக்கொள்ள முடியும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை பிரதமரிடத்திலான கேள்வி நேரத்தின் போது மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயாக, புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் குறித்தும், கடந்த 2014 ஆம் ஆண்டு தொடக்கம் ஐ. எஸ். செயற்பாடுகள் நாட்டுக்குள் இருந்தும் ஏன் அப்போது இந்த சட்டம் குறித்து அரசாங்கம் பேசவில்லை? இப்போது ஏன் உடனடியாக இந்த சட்டத்தில் அக்கறை செலுத்தி வருகின்றீர்கள் என்ற கேள்விகளை எழுப்பிய வேளையில் அதற்குப் பதில் தெரிவிக்கையில் பிரதமர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்.
யாழ்ப்பாணம் மேயராக கடமையாற்றிய அல்பிரட் துரையப்பா 1975 ஜூலை மாதம் கொல்லப்படும் வரையில், அதன் பின்னர் பயங்கரவாதம் ஒன்று உருவாக்கப்பட்ட காலத்தில் அதனை கட்டுப்படுத்தும் சட்டதிட்டங்கள் எமது நாட்டில் இருக்கவில்லை. குற்றவியல் சட்டத்தின் முறைமைகள் மட்டுமே நடைமுறையில் இருந்தன. அதற்கமையவே 1979 ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச் சட்டம் உருவாக்கப்பட்டது. இதுவே பயங்கரவாதம் தவறானது என்றதை வெளிப்படுத்தும் சட்டமாக அமைந்தது. ஆனால் இது இலங்கையின் எல்லைக்குள் மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டது. இந்த நிலைமை இங்கிலாந்தில் இருந்தது, பின்னர் அவர்கள் பலமான சட்டங்களை உருவாக்கினர். சர்வதேச பயங்கரவாதம் உருவாக்கப்பட்ட பின்னர் பல நாடுகள் பயங்கரவாத சட்டத்தை சர்வதேச எல்லைவரை நீடித்துக்கொண்டன. இன்று கெரில்லா யுத்தமொன்று இல்லை, அதையும் தாண்டி பயங்கரவாதம் விரிவடைந்துள்ளது. ஆகவே அவை அனைத்திற்கும் முகங்கொடுக்கும் வகையில் எமது சட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். சர்வதேச பயங்கரவாத அச்சுறுத்தலை நாம் கருத்திற்கொண்டு செயற்பட வேண்டும். இந்த முயற்சிகளை நாம் கடந்த காலத்திலும் முன்னெடுத்துள்ளோம். பல சந்தர்ப்பங்களில் இந்த பாராளுமன்றத்தில் பலருடன் பேசியுள்ளோம். சில சந்தர்ப்பங்களில் இவற்றை முன்னெடுக்க முடியாத அரசியல் சூழல் நிலவியது.
சர்வதேச பயங்கரவாத செயற்பாடுகளுக்கு எம்மால் நடவடிக்கை எடுக்க முடியும், அதனை புரிந்துகொண்டு இதனை ஆதரிக்க வேண்டும். மாறாக பயங்கரவாதிகளுக்கு சலுகை கொடுக்க நாம் சட்டத்தை உருவாக்கவில்லை. இலங்கையிலோ அல்லது இலங்கைக்கு வெளியிலோ இலங்கை அரசாங்கத்திற்கு உரித்தான எந்த சந்தர்ப்பத்திலும் பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்றால் அதற்கான சட்ட நடவடிக்கை எடுக்க முடியும். மேலும் பல ஆரோக்கியமான விடயங்கள் உள்ளன. பிரபாகரனுக்கு பின்னர் கே.பியை கொண்டுவந்து சலுகைகள் கொடுத்தது போன்று எம்மால் பயங்கரவாதிககளை காப்பாற்ற முடியாது. இந்த சட்டத்தில் அவ்வாறான எந்த சலுகைகளும் இல்லை. இதற்கு மேலும் பல சட்டங்களை உள்வாங்கிக்கொள்ள முடியும். பயங்கரவாதம், அடிப்படைவாதம் போன்றவற்றை நிராகரிக்கும் வேலைத்திட்டத்திற்கு அனைவரும் இணக்கம் தெரிவிக்க வேண்டும்.
அதேபோல் 2014 ஆம் ஆண்டு தொடக்கம் பயங்கரவாத செயற்பாடுகள் இருந்தன என்பது அனைவருக்கும் தெரியும். இது குறித்து பாராளுமன்றத்தில் பலர் பேசியுள்ளனர். வெளியிலும் பலர் கூறியுள்ளனர். ஆனால் சட்டத்தை மீறாத வகையில் அவர்களுக்கு எதிராக செயற்பட முடியவில்லை. சிரியா சென்ற பலர் இப்போது கைதுசெய்யப்பட்டனர். ஆனால் இவர்களுக்கும் அப்பால் பலர் இந்த தாக்குதலுடன் தொடர்பானவர்கள் உள்ளனர். இவர்களை கைதுசெய்ய வேண்டும் என்றால் அவசரகால சட்டம் வேண்டும். ஆகவே தான் சாதாரண சட்டத்தை இப்போது நிறைவேற்றி பின்னர் ஆழமாக இந்த விடயத்தில் கைவைக்கலாம் என்பதே எமது கோரிக்கை. சாட்சிகள் உள்ளன. அவற்றுக்கேற்ப நடவடிக்கை எடுக்க சட்டம் வேண்டும். மேலும் சட்டம் குறித்து பல தடவைகள் சபையில் கேட்டுக்கொண்டுள்ளேன். பாராளுமன்ற குழுக்களில் பல தடவைகள் பேசியுள்ளோம். இன்று கேள்வி எழுப்பும் அனைவரும் அந்தக் குழுக்களில் இருந்துள்ளீர்கள். அப்போது எவரும் கேள்வி எழுப்பவில்லை. சிரியா சென்று வந்தவர்கள் குறித்து இதற்கு முன்னரும் கூறப்பட்டுள்ளது. அப்போதெல்லாம் எதிர்க்கட்சியினர் எவரும் கேள்வி எழுப்பவில்லை. கேள்வி எழுப்பியிருந்தால் நாம் பதில் தெரிவித்திருப்போம். எமது சட்டத்தில் குறைபாடுகள் உள்ளன என்பதை நான் ஆரம்பத்திலிருந்தே கூறியுள்ளேன். இந்த பயங்கரவாத நகர்வுகளில் எந்த இரகசியமும் இல்லை. ஆனால் இந்த சூழ்ச்சி இந்த ஆண்டில் தான் திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து முதலில் எமது தரப்பில்தான் சந்தேகக் கேள்விகள் எழுப்பினர் என்றார்.
-Vidivelli