தற்போதைய சூழ்நிலையில் முஸ்லிம்கள் பாதுகாப்புப் பிரிவினரால் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்படும் போது ஏற்படுகின்ற பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதற்காக அதிகாரம் வழங்கப்பட்ட அதிகாரியாக பதில் பொலிஸ் மா அதிபர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் வை.ஜி.ஆர்.எம். ரிபாத்தை நியமித்துள்ளார்.
மேலும் இணைப்பு அதிகாரிகளாக முஸ்லிம் சிவில் சமூக அமைப்புகளைச் சேர்ந்த 8 பேர் பதில் பொலிஸ் மா அதிபரினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டில் எந்தப் பகுதியிலும் சந்தேகத்தின் பேரில் முஸ்லிம்கள் கைதுசெய்யப்படும் போது பிரச்சினைகளை எதிர்நோக்கினால் சிவில் சமூக பிரதிநிதிகளான முஸ்லிம் இணைப்பு அதிகாரிகளூடாக உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் வை.ஜி.ஆர்.எம். ரிபாத்தை தொடர்பு கொண்டு தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் முஸ்லிம் சிவில் சமூக அமைப்புகளின் இணைப்பு மத்திய நிலையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில் தலைவர் என்.எம். அமீன் கருத்துத் தெரிவிக்கையில்;
உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரிபாத்துடன் நேற்று கொள்ளுப்பிட்டியிலுள்ள முஸ்லிம் சிவில் சமூக மத்திய நிலையத்தில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. கலந்துரையாடலையடுத்து சிறு காரணங்களுக்காக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த சிலரை விடுதலை செய்துகொள்ள முடிந்தது என்றார்.
முஸ்லிம் சிவில் சமூக அமைப்புகள் பொலிஸ் மா அதிபரிடம் விடுத்த வேண்டுகோளினையடுத்தே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படும் போது ஏற்படுகின்ற பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகள் பெற்றுக்கொள்ள உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவித்தார்.
-Vidivelli