கடந்த மாதம் நாட்டில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்களையடுத்து அச்ச நிலைக்குத் தள்ளப்பட்டிருந்த முஸ்லிம் சமூகம் கடந்த 5 ஆம் திகதி நீர்கொழும்பு பகுதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களால் மேலும் பீதிக்குள்ளாகியுள்ளது.
முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைச் சம்பவங்களின் போதெல்லாம் முஸ்லிம்கள் பொறுமை காத்திருக்கிறார்கள். அளுத்கம, அம்பாறை, திகன வன்முறைகள் இதற்கு சிறந்த உதாரணங்களாகும்.
நீர்கொழும்பு, கொச்சிக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போருதொட்ட, பலகத்துறை பிரதேசத்தில் முச்சக்கரவண்டி சங்கங்களைச் சேர்ந்த இரு குழுக்களிடையே கடந்த 5 ஆம் திகதி மாலை ஏற்பட்ட முறுகல் நிலையே வன்முறைகளுக்குக் காரணமாக அமைந்துள்ளது. பலகத்துறையில் உருவான கைகலப்பு நீர்கொழும்பில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதிகளில் வன்முறைகளைத் தோற்றுவித்துள்ளது.
பெரியமுல்ல, செல்லக்கந்த, தெனியாவத்த பகுதிகளிலே வன்முறைகள் பரவலாக இடம்பெற்றுள்ளன. 50 வீடுகள் தாக்கப்பட்டுள்ளதாகவும், 10 முச்சக்கர வண்டிகள், 6 மோட்டார் சைக்கிள்கள் சேதங்களுக்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும் பெரியமுல்ல ஜும்ஆ பள்ளிவாசல் தரவுகள் தெரிவிக்கின்றன. ஒரு முச்சக்கர வண்டி எரியூட்டப்பட்டுள்ளது. வீடுகளின் முன்னாலுள்ள கேட்கள் கோடரியினால் வெட்டப்பட்டு வீடுகள் தாக்கப்பட்டுள்ளன.
‘நீர்கொழும்பு வன்முறைகளுக்குக் காரணம் மதுபோதையே’ என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இதுவே காரணமென முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளும் தெரிவிக்கின்றன. ஆனால் அப்பகுதி மக்கள் இது திட்டமிடப்பட்ட தாக்குதல்கள் என்றே தெரிவிக்கின்றனர். திகனயில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் போன்று ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த சந்தர்ப்பத்திலே இடம்பெற்றதாக பெரியமுல்ல மக்கள் தெரிவிக்கின்றனர். பெரியமுல்ல ஜும்ஆ பள்ளிவாசல் செயலாளர் இஸ்மதுல் ரஹ்மானும் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
நீர்கொழும்பு பொலிஸ் பிரிவில் சம்பவம் இடம்பெற்ற கடந்த 5 ஆம் திகதி இரவு 7 மணி முதல் மறுதினம் 6 ஆம் திகதி காலை 7 மணிவரை ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தது. பெரியமுல்லயில் அன்றைய தினம் இரவு 8 மணிக்கும் 12 மணிக்கும் இடையிலே வன்முறைகள் அரங்கேற்றப்பட்டுள்ளன.
ஊரடங்குச் சட்டம் அமுலிலிருந்த வேளையில் கடமையிலிருந்த இராணுவம், விமானப்படை, பொலிஸார் ஏன் வன்முறைகளைத் தடுத்து நிறுத்தவில்லை என்ற சந்தேகம் எழுகிறது. இந்த வன்முறைகள் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதா? இதன் பின்னணியில் ஏதும் சக்திகள் செயற்பட்டுள்ளதா? என்பதை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தேடிப்பார்க்க வேண்டும்.
தெனியாவத்தை–அசனார் தக்கியா பள்ளிவாசல் தாக்கப்பட்டுள்ளது. பள்ளிவாசலின் 8 கண்ணாடிகள் மற்றும் குர்ஆன் பிரதிகள் வைக்கப்பட்டிருந்த பெட்டியின் கண்ணாடிகள் உடைத்து நொறுக்கப்பட்டுள்ளன. இச்சம்பவமானது மீண்டும் இன ரீதியிலான கலவரம் ஒன்றினை உருவாக்குவதற்கான முயற்சியாகவே நோக்க வேண்டியுள்ளது.
இதேவேளை பொலிஸார் வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவரைக் கைது செய்துள்ளனர். இனங்காணப்பட்டுள்ளவர்களைக் கைது செய்வதற்கு நான்கு பொலிஸ் குழுக்களும் நியமிக்கப்பட்டுள்ளன. வன்முறைகளுடன் தொடர்புடையவர்கள் அனைவரும் கைதுசெய்யப்பட்டு அவர்களுக்கு உச்ச தண்டனை வழங்கப்பட வேண்டும்.
நேற்றுக் காலை பெரியமுல்ல பிரதேசத்தில் விமானப்படையினர், இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அச்சந்தர்ப்பத்தில் பல முஸ்லிம் இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்களது கையடக்கத் தொலைபேசியில் வன்முறை சம்பவங்களின் பதிவுகள் இருந்ததாலே கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இவ்வாறான கைதுகள் நியாயமற்றவை என மக்கள் தெரிவிக்கின்றார்கள்.
இச்சம்பவத்தில் சேதங்களுக்குள்ளாக்கப்பட்ட சொத்துகளுக்கு உரிய நஷ்டயீடுகள் வழங்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. வழங்கப்படும் வாக்குறுதிகள் கட்டாயம் நிறைவேற்றப்பட வேண்டும். அம்பாறையில் வன்செயல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டு ஒரு வருடத்துக்கும் மேலாகிறது. உரிய நஷ்டங்கள் மதிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் நஷ்டயீடுகள் பாதிக்கப்பட்ட சொத்துகளுக்கு இதுவரை வழங்கப்படவில்லை என்பதை நாம் சுட்டிக்காட்டுகிறோம். அம்பாறை நஷ்டயீடுகளுக்கு ஏற்பட்ட நிலைமை நீர்கொழும்புக்கும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதை வலியுறுத்துகிறோம்.
வன்முறைகள் நிகழ்ந்து விட்டதன் பின்பு நஷ்டயீடுகள் வழங்குவதை விடுத்து வன்முறைகள் நிகழாமலிருப்பதற்கு நடவடிக்கை எடுப்பதே அரசாங்கத்தின் கடமையாக அமைய வேண்டும்.
-Vidivelli