- அலி றிசாப்
எமது கனவுகள், இலட்சியங்கள் மற்றும் எதிர்கால எதிர்பார்ப்புக்களையும் முற்றாக அழித்துவிட்டு வாழப்போகும் வாழ்க்கையில் ஒரு கேள்விக்குறியை தீவிரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான கொலை வெறித்தனமான குண்டுத் தாக்குதல்கள் இந்நாட்டில் ஏற்படுத்திவிட்டது. இது வரலாற்றில் என்றும் மன்னிக்கமுடியாத பெரும் குற்றமாகும். அத்துடன் இக் கொலை வெறியர்கள் இஸ்லாத்தின் மீதும் இந்நாட்டின் முஸ்லிம்கள் மீதும் அழிக்க முடியாத அவப்பெயரை உண்டாக்கிவிட்டார்கள். இதனால் ஏற்பட்ட பொருளாதார இழப்புக்களைவிட இனங்களுக்கிடையிலான உறவு விரிசலினால் ஏற்பட்டுள்ள இழப்பு மதிப்பிட முடியாததொன்றாகும்.
இதற்கு யார் பொறுப்பு?
அரச புலனாய்வுத் துறையிலும் பாதுகாப்புப் பொறிமுறைகளிலும் ஏற்பட்ட பலவீனமே இத்தாக்குதலுக்குக் காரணமென அந்நிய சமூகங்களும் எமது சமூகத்தின் தலைமைகளும் அறிக்கைகள் விட்டுக் கொண்டிருக்கின்றன. அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். அதற்காக அரசாங்கத்தையே முழுவதுமாகக் குற்றம் சாட்ட முடியாது. உதாரணமாக ஜனாதிபதி சர்வமத தலைவர்களுடன் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் அஷ்ஷெய்க் றிஸ்வி முப்தி, “தாம் ஏற்கனவே 2014 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் ISIS என்ற பயங்கரவாத இயக்கம் அதன் செயற்பாட்டாளர்கள் பற்றிய தகவல் அறிக்கையொன்றை புலனாய்வுத்துறைக்கு வழங்கியதாகக் குறிப்பிட்டார்” அவர் அவ்வாறு சொன்னதன் பிற்பாடே சமூகத்திற்கு அவ்வறிக்கை தொடர்பில் தெரிய வந்திருக்கும். ஆனால் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா இப்பயங்கரவாத இயக்கம் பற்றிய போதுமான தெளிவை எமது சமூகத்திற்கோ அல்லது எமது இளைஞர்களுக்கோ வழங்க முயற்சிக்கவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும். அவ்வாறு வழங்கப்பட்டிருந்தால் அல்லது இளைஞர்கள் வழிகாட்டப்பட்டிருந்தால் இப்பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெற்றிருக்க வாய்ப்பேற்பட்டிருக்காது.
அடுத்ததாக முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் சமூகத்தின் மீதுள்ள தனது பொறுப்பை சரியாகச் செய்யவில்லை என்பது தெளிவாகின்றது. ஹஜ், உம்ரா மற்றும் வக்பு சபைச் செயற்பாடுகளுடன் தனது பொறுப்பைச் சுருக்கிக் கொண்டுவிட்டது. பதியப்பட்டுள்ள அல்லது பதியப்படாத மஸ்ஜிதுகளின் செயற்பாடுகள் மற்றும் நோக்கங்கள் பற்றியோ எவ்வித கரிசனையையும் அவை மேற்கொண்டதாக இல்லை. சமூகநல இயக்கங்களைப் பதிவு செய்வதுடன் அதன் காரியங்களை வரையறுத்துக் கொள்கின்றது. குறித்த இயக்கங்களின் செயற்பாடுகள், அதன் வருமான மூலங்கள், அதன் மீதான உள்ளகக் கணக்காய்வுகள் மற்றும் அவ்வியக்கங்களின் செயற்பாடுகளின் மீதான கள மீளாய்வு போன்ற எதையுமே முறையாகச் செய்யவில்லை என்பது இப்பயங்கரவாதத் தாக்குதல் சாட்சி பகர்கின்றது. திணைக்களம் ஒவ்வொரு வருடமும் ஹஜ்ஜுக்காக வேண்டியும் மற்றும் ஏனைய சேவைகளுக்காகவும் அறவிடும் கட்டணத்தைக் கொண்டே சமூக நல அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்ளலாம். நாட்டிலுள்ள 250 க்கு மேல் பதியப்பட்டுள்ள அறபிக் கல்லூரிகள் மீதான தரநியமங்கள் மற்றும் தொழிற்பயிற்சியுடன் கூடிய பொதுவான பாடத்திட்டம் தொடர்பிலும் போதுமான திட்டங்களோ முயற்சிகளோ திணைக்களத்தினால் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை என்பது சமூகத்தின் துரதிஷ்டமோ அல்லது திணைக்களப் பொறுப்பாளர்களின் செயற்றிறனற்ற, சமூகப் பொறுப்பற்ற தன்மையோ காரணமாக இருக்கலாம். முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் அதன் பெயரிலுள்ள விரிவான கருத்துக்கு அதன் செயற்பாடுகள் இல்லை எனும்போது வருத்தமாக இருக்கின்றது. அதன் பொறுப்பற்ற தன்மையினால் தற்போது எவ்வித குற்றங்களுமற்ற அப்பாவியான அறபிக் கல்லூரிகளின் அதிபர்களும் மஸ்ஜித் நிர்வாகிகளும் பயங்கரவாத சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
நாட்டிலுள்ள இஸ்லாமிய இயக்கங்களும் தன்னை மட்டுமே வளர்த்துக் கொள்வதிலும் மற்றைய இயக்கங்கள் மீது சேறு பூசுவதிலும் காலத்தைக் கடத்தியதே தவிர தேசிய நன்மைக்காக ஒன்றிணைய மறந்துவிட்டன. ஒரு சில பிக்ஹ் கருத்து முரண்பாட்டுக்காக ஒரு பேரியக்கம் பல துண்டுகளாகப் பிரிந்து தனக்குள்ளே சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றன. உதாரணமாக தவ்ஹீத் ஜமாஅத் இன்று எத்தனை துண்டுகளாகப் பிரிந்துள்ளன. அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளும் அண்மைய பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பொறுப்பு சொல்லியாக வேண்டும். அத்துடன் ஏதோவொரு தவ்ஹீத் ஜமாஅத்திலிருந்து பிரிந்து தீவிரவாதக் கருத்துக்களால் உள்வாங்கப்பட்டு தற்கொலை செய்து கொண்டவர்களின் இறப்புக்கும் ஏனைய தவ்ஹீத் ஜமாஅத்துக்கள் பொறுப்பு சொல்லியாக வேண்டும். அவர்கள் பிரிந்து போகும்போது அவர்களை நல்வழிப்படுத்தியிருக்கலாம். ஆனால் அவர்கள் அப்படிச் செய்யாததற்குக் காரணம் விட்டுக் கொடுப்பும் புரிந்துணர்வும் மற்றும் தலைமைத்துவப் போட்டியுமே காரணமாக இருந்திருக்கும்.
இன்னும் சில இயக்கங்கள் பழமையான தஃவா முறைகளுடன் தம்மை வரையறுத்துக் கொண்டு செயற்படுவதனால் தீவிர போக்கினால் ஈர்க்கப்பட்டுள்ளவர்களை அணுகி அவர்களை தன் பக்கம் ஈர்த்துக் கொள்ளக் கூடியவாறான அணுகுமுறைகள் அற்றவர்களாகக் காணப்படுகின்றார்கள். அத்துடன் அந்நிய நாடுகளுக்கு தஃவா பணிக்காக இலட்சக்கணக்கில் செலவழித்துக் கொண்டு செல்லும் அவர்களினால் தன் நாட்டில் அந்நிய சமூகத்தின் மத்தியில் இஸ்லாத்தைப் பற்றிய தெளிவான பார்வையை முன்வைக்க அவர்களால் முடியாமல் போய்விட்டது என்பது கவலைக்குரிய விடயம். தனிப்பட்ட அமல்களில் மட்டும் கவனம் செலுத்தி சமூகநலன் சார்ந்த விடயங்களை முற்றாக ஒதுக்கியதன் விளைவே இத்தீவிரவாதிகளின் உருவாக்கம். தஃவாவின் முழுமையான வடிவத்தை இவ்வியக்கத்தவர்கள் உணராதவரை எமது சமூகத்தில் தீவிரவாதிகளின் உருவாக்கமும் எம்மவர்கள் மீதாக சந்தேகப் பார்வையும் நிலைத்துக் கொண்டே இருக்கும்.
முறையான கட்டமைப்பையும் செயற்றிட்டங்களையும் கொண்ட இயக்கங்கள்கூட ஏதோ ஒரு வகையில் தோற்றுவிட்டன என்று சொல்லலாம். அதன் இளைஞர் வலுவூட்டல் மற்றும் சமூக மேம்பாட்டுத் திட்டங்கள் போதிய செயற்றிறன் அற்ற தன்மையை இப்பயங்கரவாதத் தாக்குதல்கள் உறுதிப்படுத்துகின்றன. நாட்டுக்கும் சமூகத்துக்கும் தேவையானதைச் செய்யாமல் வெளிநாட்டு உதவி நிறுவனங்களின் நிகழ்ச்சி நிரலின்படி அவர்கள் சொல்லும் வேலைகளை மட்டும் செய்வதனால் ஏற்படும் விளைவுகள் சமூகத்தின் எதிர்காலத்தையே கேள்விக் குறியாக்கிவிடும்.
மேற்கூறப்பட்ட காரணங்கள் மட்டுமல்லாமல் சமூகத்தின் தனிநபர்கள் ஒரு முஸ்லிம் என்ற வகையில் தான் செய்ய வேண்டிய கடமையைப் பொறுப்புடன் செய்யாமல் விட்டதனாலும் மற்றும் பெற்றோர்கள் தன் பிள்ளைகளின் செயற்பாடுகளில் அவர்கள் பெரியவர்களானாலும் கூட கவனக் குறைவாக இருந்தமையும் அழுத்திச் சொல்லக்கூடிய காரணங்களாக இருக்கின்றன என்பதை கடந்த பயங்கரவாதத் தாக்குதல்கள் உறுதி செய்கின்றன.
பொறுப்பு பெரியதோ அல்லது சிறியதோ அதிலிருந்து விலகிச் செல்லும்போது ஏற்படக்கூடிய விளைவுகளையும் இழப்புக்களையும் மதிப்பிட முடியாது என்பது குறித்த பயங்கரவாதத் தாக்குதல்கள் உறுதி செய்து கொண்டிருக்கின்றன.
-Vidiveli