சவால்களை கடந்துதான் செல்ல வேண்டியுள்ளது

0 671

நாட்டில் தொட­ராக இடம்­பெற்ற பயங்­க­ர­வாத தாக்­கு­தல்­களைத் தொடர்ந்து நாட­ளா­விய ரீதியில் பாரிய தேடுதல் நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. இதற்­க­மைய ஒரு தொகை ஆயு­தங்கள், வெடி பொருட்கள் கைப்­பற்­றப்­பட்­டுள்­ள­துடன் நூற்­றுக்கும் அதி­க­மானோர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

கைதா­ன­வர்­களில் நேர­டி­யா­கவே இந்த பயங்­க­ர­வாத தாக்­கு­தல்­க­ளுடன் தொடர்­பு­பட்­ட­வர்கள் அடங்­கு­வ­துடன் எது­வித சம்­பந்­த­மு­மின்றி சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்­டோரும் உள்­ள­டங்­கு­கின்­றனர்.

ஆரம்பக் கட்ட விசா­ர­ணை­களில் பயங்­க­ர­வாத தரப்­பு­க­ளுடன் தொடர்­பு­டை­ய­வர்கள் இனங்­கா­ணப்­பட்டு நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்டு வரு­கின்­றனர். அதே­நேரம் சந்­தே­கத்­துக்­கி­ட­மில்­லாத பலரும் விடு­தலை செய்­யப்­ப­டு­கின்­றனர். எனினும் நாட்டின் பல பகு­தி­க­ளிலும் பெருந் தொகை­யானோர் ஒரே நேரத்தில் கைது செய்­யப்­பட்­டுள்­ளதால் இவர்கள் தொடர்­பான சரி­யான விப­ரங்­களை அறிந்து கொள்ள முடி­யா­துள்­ளது. இதன் கார­ண­மாக கைதா­கி­யுள்­ள­வர்­களுள் அடங்­கி­யுள்ள நிர­ப­ரா­தி­களைக் கண்­ட­றிய முடி­யா­துள்­ளது.

இதற்­கி­டையில் நாட்டில் பர­வ­லாக முன்­னெ­டுக்­கப்­படும் தேடுதல் மற்றும் சோதனை நட­வ­டிக்­கை­களின் போது முஸ்­லிம்­க­ளுக்கு சில அசௌ­க­ரி­யங்கள் ஏற்­ப­டுத்­தப்­ப­டு­வ­தா­கவும் முறை­யி­டப்­பட்­டுள்­ளது. இவை தொடர்பில் பிர­த­ம­ரி­னதும் பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்­ச­ரி­னதும் கவ­னத்­திற்குக் கொண்டு செல்­லப்­பட்­டுள்­ளது.

எவ்­வா­றி­ருந்த போதிலும் பல இடங்­களில் படை­யினர் நாக­ரி­க­மாக நடந்து கொள்­வ­தா­கவும் இந்த சோதனை நட­வ­டிக்­கைகள் மூலம் ஏதேனும் அசௌ­க­ரி­யங்கள் ஏற்­பட்­டி­ருப்பின் மன்­னித்துக் கொள்­ளு­மாறு முஸ்­லிம்­க­ளிடம் கோரு­வ­தா­கவும் பல சம்­ப­வங்கள் பதி­வா­கி­யுள்­ளன. அதே­போன்று முஸ்லிம் மக்கள் இந்த சோத­னை­க­ளுக்கு பூரண ஒத்­து­ழைப்­பையும் உத­வி­க­ளையும் வழங்கி வரு­கின்­றனர். படை­யி­ன­ருக்கு உணவு, நீர், குளிர்­பா­னங்­களை வழங்கி அவர்­க­ளது கட­மையை ஊக்­கு­விப்­ப­தையும் அவ­தா­னிக்க முடி­கி­றது.

முஸ்­லிம்கள் படை­யி­னரின் கட­மைக்கு முழு ஒத்­து­ழைப்பு வழங்­கு­வ­தாக முப்­படை உய­ர­தி­கா­ரி­களும் ஊட­கங்­க­ளுக்கு கருத்து வெளி­யிட்­டுள்­ளனர். அந்த வகையில் முஸ்லிம் சமூகம் இலங்கை அர­சாங்­கத்­திற்கும் பாது­காப்புத் தரப்­பிற்கும் வழங்கும் ஆத­ரவு தொடர வேண்டும்.

இதற்­கி­டையில் முகத்தை மறைக்கும் வித­மாக ஆடை அணி­வ­தற்கு தடை விதித்து வெளி­யி­டப்­பட்­டுள்ள வர்த்­த­மானி அறி­வித்தல் குழப்ப நிலையை தோற்­று­வித்­துள்­ளது. காதுகள் வெளிப்­ப­டுத்­தப்­பட வேண்டும் என அதில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளதால் ஹிஜாப் அணிய முடி­யாதா எனும் கேள்வி எழுந்­துள்­ளது. இத­னை­ய­டுத்து ஜனா­தி­ப­தி­யுடன் கலந்­து­ரை­யாடி இவ் வர்த்­த­மா­னியில் திருத்­தத்தை கொண்­டு­வர முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. பிர­த­மரும் இதற்கு உறு­தி­மொ­ழி­ய­ளித்­துள்ளார். முஸ்­லிம்கள் தாரா­ள­மாக ஹிஜாப் அணி­யலாம் என அமைச்சர் ஹர்ஷ டி சில்வா சுட்­டிக்­காட்­டி­யுள்­ள­மையும் இங்கு கவ­னிக்­கத்­தக்­க­தாகும்.

எது எப்­ப­டி­யி­ருப்­பினும் புர்கா மற்றும் நிகாப் தடை கார­ண­மாக காலா கால­மாக முகத்தை மறைத்து வெளியில் நட­மா­டிய பல பெண்கள் அசௌ­க­ரி­யங்­களை எதிர்­கொண்­டுள்­ளனர். தற்­போது அவர்கள் பல­வந்­த­மாக வீடு­க­ளுக்குள் முடக்­கப்­பட்­டுள்­ளனர். இது அவர்­க­ளது அன்­றாட கல்வி,தொழில் நட­வ­டிக்­கை­களைப் பாதித்­துள்­ளது. எனினும் நாட்டின் தேசிய பாது­காப்­பையும் இனங்­க­ளுக்­கி­டை­யி­லான நல்­லு­ற­வையும் கருத்திற் கொண்டு இந்த தடையை மனப்­பூர்­வ­மாக ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலையில் இலங்கை முஸ்லிம் சமூகம் உள்ளதை மறுப்பதற்கில்லை. இருந்த போதிலும் பல மனித உரிமை அமைப்புகள் இந்தத் தடையை கண்டித்துள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

ஆக இலங்கை முஸ்லிம்கள் இதுவரை முகங்கொடுக்காதளவு பாரிய சவால்களை இன்றைய நாட்களில் சந்தித்துள்ளனர். இவ்வாறாதொரு நிலைமை இதன் பின்னர் வரும் சந்ததிகளுக்கு ஒருபோதும் ஏற்பட்டுவிடக் கூடாதெனில் நாம் இதனைக் கடந்து சென்றுதான் ஆக வேண்டும்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.