அரச வர்த்தமானியில் திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்
ஹிஜாப் விவகாரம் தொடர்பில் முஸ்லீம் பிரதிநிதிகளிடம் பிரதமர் உறுதி
நாட்டின் பாதுகாப்பு காரணங்களுக்காக முஸ்லிம் பெண்கள் முகம் மூடி அணியும் ஆடைக்குத் தடை விதித்து கடந்த 29 ஆம் திகதி ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ள அரசாங்க வர்த்தமானியில் திருத்தங்களைச் செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தன்னைச் சந்தித்த முஸ்லிம் சமூகப் பிரதிநிதிகளிடம் உறுதியளித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்த அமைச்சர்கள் கபீர் ஹாசிம், எம்.எச்.ஏ.ஹலீம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏ.எச்.எம்.பௌஸி, முஜிபுர் ரஹ்மான், மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்தி, உப தலைவர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம்.தாசிம், ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில் தலைவர் என்.எம்.அமீன் உள்ளிட்ட குழுவினர் முஸ்லிம் பெண்கள் முகம் மூடி அணியும் ஆடைக்கு தடை விதித்து ஜனாதிபதி வெளியிட்டுள்ள அரசாங்க வர்த்தமானி அறிவித்தல் முஸ்லிம் மக்கள் மத்தியில் குழப்பகரமான சூழ்நிலையைத் தோற்றுவித்துள்ளதாக முறைப்பாடு செய்தனர்.
குறித்த அரசாங்க வர்த்தமானி வெளியீடு ‘முழு முகம்’ என்பதற்கு ஒருவரின் இரு காதுகளையும் மறைக்கக் கூடாது என வரைவிலக்கணம் வழங்கப்பட்டிருப்பதால் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிய முடியுமா? முடியாதா? எனும் குழப்பநிலைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள் என விளக்கினார்கள்.
முஸ்லிம் சமூகப் பிரதிநிதிகளிடம் முஸ்லிம் பெண்களின் கலாசார உடை பற்றிய தெளிவுகளைப் பெற்றுக்கொண்ட பிரதமர் ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ள அரசாங்க வர்த்தமானியில் திருத்தங்களைச் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகத் தெரிவித்தார்.
vidivelli